நிர்வாக அலட்சியத்தால் சென்னை நிலைக்குலைந்துள்ளது : அன்புமணி ராமதாஸ்

புதன் நவம்பர் 25, 2015

 

 ''பேரிடரும், பெரும் பாதிப்பும் ஏற்படும் போது, அவற்றிலிருந்து ஒரு மாநிலம் எவ்வளவு விரைவாக மீண்டு வருகிறது என்பதைப் பொறுத்து தான் அம்மாநில அரசின் செயல்படும் தன்மை மதிப்பிடப்படும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பார்க்கும் போது இங்கு அரசு நிர்வாகம் என்ற ஒன்று செயல்படவில்லை என்பது தான் தெளிவாகிறது.

சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் பாதியளவு கூட இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக சென்னையில் மீண்டும் கடுமையான மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை பெய்த மழை தலைநகர் சென்னையை தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. 4 மணி நேரத்தில் சுமார் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்த நிலையில், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் சென்னை நிலைகுலைந்து போனது என்பதை விட நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும் சென்னை நிலைகுலைய வைக்கப்பட்டது என்பது தான் உண்மை.

மழை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்துக் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை அண்ணா சாலையில் ஒரு கி.மீ தொலைவைக் கடப்பதற்கு 2 மணி நேரம் ஆகியிருக்கிறது.

சென்னையின் அதிவிரைவுச் சாலை என்று போற்றப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில் டைடல் பூங்கா முதல் மத்திய கைலாசம் வரை செல்வதற்கு மூன்றரை மணி நேரம் தடுமாற வேண்டியிருந்தது. கோயம்பேட்டிலிருந்து வடபழனி வருவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கிறது.

சென்னையில் நேற்று மாலை அலுவலகம் முடிந்து புறப்பட்டவர்களால் நள்ளிரவுக்குப் பிறகு தான் வீடுகளைச் சென்றடைய முடிந்திருக்கிறது. சென்னையை முடக்கிப் போட்ட போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிலும், குறிப்பாக இரவு 8.00 மணிக்குப் பிறகு சென்னையின் எந்த பகுதியிலும் காவலர்களை காண முடியவில்லை.

சென்னையின் முக்கிய சாலைகளான டாக்டர்.இராதாகிருஷ்ணன் சாலை, ராஜிவ்காந்தி சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. கோயம்பேடு - வடபழனி இடையிலான 100 அடி சாலையில், விருகம்பாக்கம் கால்வாய் நிரம்பி வழிந்ததால், நள்ளிரவில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்தது.

இதுபோன்ற நிகழ்வுகளில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், போக்குவரத்தை முறைப்படுத்தவும் காவலர்கள் நிறுத்தப்படுவது அவசியம் ஆகும். ஆனால், எந்த சாலையிலும் ஒரு காவலரையும் காண முடியவில்லை.

திருவேற்காடு பகுதியில் கூவம் ஆற்றை தரைப்பாலம் வழியாக கடக்க முயன்ற இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.

தொடர்மழையால் சென்னை புறநகர் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கடந்த வாரம் பெய்த மழைக்காக வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கிய பின் வீடு திரும்பியிருந்த மக்கள் ஒரு சில நாட்களிலேயே மீண்டும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சென்னை,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல ஏரிகள் உடைந்ததால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மிக மோசமான நிலை உருவாகியிருக்கிறது.

வட தமிழ்நாட்டில் மட்டுமே பாதிப்புகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி வந்த தொடர்மழை இம்முறை நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. அம்மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகள், சேதங்கள் அனைத்துமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் ஏற்பட்டவை ஆகும்.

மழையால் ஏற்படும் பாதிப்புகள் மக்களுக்குத் தான்; நமக்கு இல்லை என்ற நிலையைக் கைவிட்டு மழை பாதிப்புகளை சரி செய்ய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் முன்வர வேண்டும். மாநிலம் முழுவதும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நவம்பர் 24 வெளியிட்ட அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.