நிதி ரீதியாகப் போராடும் குடும்பங்களிலேயே பெரும்பாலான சிறார்கள் வாழ்கின்றனர்!

சனி நவம்பர் 21, 2020

 இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமை வீதம் மிகக் குறைவாக இருக்கும் அதேவேளை இலங்கையின் பெரும்பாலான குழந்தைகள் பொருளாதார ரீதியாக போராடும் குடும்பங்களிலேயே வாழ்கின்றனர். 36 வீதமான குழந்தைகள் உள்ள குடும்பங்களில் நாளொன்றுக்கு ஒருவருக்கு 278ரூபாவுக்கும் குறைவாகவே செலவு ஏற்படுவதாக யுனிசெப்பின் புதிய அறிக்கை கூறுகிறது.

இலங்கை பற்றிய யுனிசெப்பின் அறிக்கையானது 74 வீத குடும்பங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 506 ரூபா செலவு ஏற்படுவதாகக் கூறுகிறது.

இலங்கை தனது குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பல தசாப்தங்களாக கணிசமான முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், குழந்தைகள் எங்கு வாழ்கிறார்கள் அல்லது அவர்களின் குடும்ப நிலைமைகளைப் பொறுத்து அவர்கள் எவ்வாறு முன்னேறுகிறார்கள் என்பதில் இன்னும் பெரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்று அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

70 சதவீதத்துக்கும் அதிகமான இலங்கைக் குடும்பங்களில் அவர்களின் மொத்த செலவில் உணவுக்கானது 40 வீதத்துக்கும் மேலானது. இது அவர்களின் குழந்தைகளுக்காக முதலீடு செய்யும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.

உணவு வீணாதல் ஐந்து வயதுக்குட்பட்ட 15 வீத குழந்தைகளைப் பாதிக்கிறது. இது உலகின் மிக மோசமான பத்து நாடுகளின் குறிகாட்டியில் இலங்கையையும் உள்ளடக்குகிறது. வீணாதல் குழந்தைகளுக்கான நலன்புரி விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான குடும்பங்கள் வரையறுக்கப்பட்ட வருமானத்தில் வாழ்கின்றன எனும் உண்மையை இது பிரதிபலிக்கிறது.

இந்தச் சவால்களை கொவிட்-19 இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. அதிக குடும்பங்கள் தங்கள் வருமானத்தின் முழுவதையும் அல்லது பகுதியளவில் இழந்துள்ளன. இதனால் உணவின் எண்ணிக்கையையும் தரத்தையும் குறைத்துள்ளன. சேமிப்பைக் குறைத்து நகைகளை அடகு வைத்தும் சொத்துக்களை விற்றும் வருமானம் ஈட்டுவதில் அந்தக் குடும்பத்தினர் ஈடுபடுவதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.