நியூ டைமண்ட் கப்பல் தீயில் சந்தேகம்

வியாழன் செப்டம்பர் 17, 2020

 குவைத்திலிருந்து, இந்தியாவின் ஒடிசா, பெரடிப் துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த  எம்.டி. நியூ டயமண்ட் எனும் வணிக கப்பல்,  பானம - சங்கமன்கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்குள்ளானதாக அறியபப்டும்&  நிலையில், அந்த கப்பலில் பரவிய தீயை அணைக்க  செலவிடப்பட்ட தொகையை, ஈடு செய்ய 340 மில்லியன் ரூபாவை , சட்ட மா அதிபர் ;ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா கப்பல் உரிமையாளர்களிடம் கோரியுள்ளார்.

 தீ அணைப்பு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளுக்கு  இதுவரை ( நேற்று முன் தினம் வரை ) செலவிடப்பட்ட தொகையினை மீளப் பெறுவதற்கான உரிமை கோரல் கடிதமாக இதனை நியூ டயமண்ட் கப்பலின்  உரிமையாளர்களின் சட்டத்தரணிகளுக்கு, அனுப்பியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சிரேஷ்ட சட்டவாதி நிஷாரா ஜயரத்ன வீரகேசரிக்கு தெரிவித்தார். 

 கடற்படை, விமானப்படை, இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை, கொழும்பு டொக் யார்ட் நிறுவனம், மீபா எனும்  சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை கரையோர பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களும் குறித்த கப்பலில் பரவிய தீயை அணைக்க செலவிட்ட தொகையை மீளப் பெறவே, நேற்று வரை முன்னெடுக்கப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். 
 
 தீ அணைப்பு நடவடிக்கைகளின் பின்னரும் அக்கப்பலை மீட்கும் நடவடிக்கைகளில் குறித்த தரப்புக்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போதைக்கான செலவினங்களை மையப்படுத்தியே அந்த செலவினை ஈடு செய்யக்கோரும் தொகை தொடர்பில் கடிதம் அனுப்பட்டதாகவும், அக்கப்பல் இலங்கையின் கடல் எல்லையை விட்டு செல்லும் வரை முழுமையான செலவு மதிப்பீட்டினை செய்ய முடியாது என சட்ட மா அதிபர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷரா ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.
 
 இதனிடையே, 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்பு சட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றங்களுக்காக, தீ  பரவலுக்குள்ளான  நியூ டயமன்ட் கப்பலின் கப்டனை, சந்தேக நபராக பெயரிட்டு, நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கு தேவையான நீதிமன்ற அறிவித்தலை பெற்றுக்கொள்ளுமாறு சட்ட மா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா சி.ஐ.டி.க்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 
 
 குவைத்திலிருந்து, இந்தியாவின் ஒடிசா, பெரடிப் துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த  வணிக கப்பல்,  பானம - சங்கமன்கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்குள்ளானதாக அறியப்படும் சம்பவம் தொடர்பில் விஷேட குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
 சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் அமரசிங்க தலைமையிலான சிறப்புக் குழு,  இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, நேற்று சி.ஐ.டி.யின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸுக்கு சட்ட மா அதிபர் மேற்படி ஆலோசனையை வழங்கியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன வீரகேசரிக்கு உறுதி செய்தார்.
 
 இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள், ஆவணங்கள், கப்பல் கப்டனின் வாக்குமூலத்தை ஆராய்ந்தே சட்ட மா அதிபர் இவ்வாலோசனையை வழங்கியுள்ளார்

 கிரேக்க நாட்டவரான  திரோஸ் இலியாஸ் எனும் குறித்த கப்டன், காலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அவரிடம் சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னணியிலேயே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்பு சட்டத்தின் 25,26,38 மற்றும் 53 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக நியாயமான சந்தேகங்கள் எழுவதாகவும் அதற்கான சாட்சிகள் உள்ளதாலும் இந் நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ஆலோசனையில் சுட்டிக்காட்டியுள்ளார்.