நியூசிலாந்துடன் அகதிகள் ஒப்பந்தத்தை கையெழுத்திடுமா ஆஸ்திரேலியா?

வெள்ளி நவம்பர் 29, 2019

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் நீண்ட காலமாக தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வர, தனக்கு முன்பிருக்கும் வாய்ப்பை ஆஸ்திரேலியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளர் குர்து பத்திரிகையாளரும் தஞ்சக்கோரிக்கையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி . 

இவர் 6 ஆண்டுகளாக பப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நியூசிலாந்தில் இருக்கிறார். நியூசிலாந்தில் நடைபெறும் இலக்கிய விழாவிற்காக சென்றுள்ள அவர், அங்கேயே தஞ்சம் கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில், நியூசிலாந்து உடன் அகதிகள் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா கையெழுத்திட வேண்டும என அவர் வலியுறுத்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்த தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு பல ஆண்டுகளாக சொல்லி வந்தாலும், அதனை ஆஸ்திரேலிய அரசு ஏற்க மறுக்கிறது. அப்படி, ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் அங்கு மீள்குடியமர்த்தப்பட்டால் அது ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் என ஆஸ்திரேலிய அரசு கூறி வருகின்றது. 

“தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய அரசுக்கு வேறு எந்த வழியும் இல்லை. ஆஸ்திரேலியா நியூசிலாந்தின் சலுகையை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்கிறார் பூச்சானி. 

நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் 500க்கும் மேற்பட்ட அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்து உடன் ஒப்பந்தத்திற்கு செல்வதும், ஏற்கனவே அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட அகதிகள் ஒப்பந்தமும் காலவரையின்றி அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலைக்கு முடிவினைக் கொண்டு வரும் எனக் கூறுகிறார் பூச்சானி. 

“நியூசிலாந்தின் சலுகையை ஏற்றுக்கொண்டால் அனைத்து பிரச்னையும் முடிந்தது போலாகிவிடும். இது ஆஸ்திரேலிய அரசுக்கு மிகப்பெரிய வாய்ப்பு,” எனக் குறிப்பிடுகிறார் பூச்சானி. 

கடந்த ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் நியூசிலாந்தின் சலுகை, இன்னும் உயிர்ப்புடன் உள்ளதாக நேற்று நியூசிலாந்து அரசு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.