நகைச்சுவை கலைஞர் கிரேஸிமோகன் மறைவு - வைகோ இரங்கல்

திங்கள் ஜூன் 10, 2019

பிரபல எழுத்தாளர் இயக்குநர் நடிகர் கிரிஷ் கர்னாட், தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை கலைஞர்களில் ஒருவரான கிரேஸிமோகன் ஆகிய இருவரும் இன்று இயற்கை எய்தி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கின்றது.

ஆக்ஸ்போர்டு பல்கலைகக் கழகப் பட்டதாரியான கிரிஷ் கர்னாட் அவர்கள் அனைத்திந்திய அளவில் முத்திரை பதித்த கலைஞர். இந்திய இலக்கியத்தின் மிக உயர்ந்த ஞானபீட விருதைப் பெற்றவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் சிறப்பித்தவர். தீவிர இடதுசாரி சிந்தனையாளர். மதவாதத்திற்கு எதிராகப் போராடியதற்காக அவரது உயிருக்குக் குறிவைக்கப்பட்டு இருந்தாலும், அதற்காக அஞ்சாமல் ஆணித்தரமாக தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். களப் போராட்டங்களில் முன்னணியில் பங்கேற்றார். அவரது படைப்புகள் தமிழிலும் வெளிவந்துள்ளன.

தமிழக நாடக உலகில்  தரமான நகைச்சுவை நாடகங்களை இயக்கிப் பெரும்புகழ் பெற்றவர் கிரேசி மோகன். ஆபாசக் கலப்பு இன்றி நல்ல நகைச்சுவையைத் தந்தவர். அவருடைய வசனங்கள் நினைத்து நினைத்துச் சிரிக்கத்தக்கவை. யாரையும் புண்படுத்தாதவை. எல்லோராலும் பாராட்டப்படுபவை.

ஒரே நாளில் இரு பெருந்தகைகளின் மறைவு கலைத் துறையில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாகியிருக்கின்றது. அவர்களின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.