நக்கிற நாய்க்குச் செக்கென்ன, சிவலிங்கம் என்ன?

ஞாயிறு ஏப்ரல் 07, 2019

வணக்கம் பிள்ளையள்!

என்ன ஒரு மாதமாகப் பிலாவடிமூலைப் பெருமானை காணவில்லை என்று எல்லோரும் மூலைக்கு மூலை குசுகுசுத்துக் கொண்டு திரியிறியள் என்று அறிஞ்சன்.

உதுக்குள்ளை கொஞ்சப் பேர் நைன்ரி மண்டையைப் போட்டுட்டார் என்றும் வதந்தி பரப்பிக் கொண்டு திரியினமாம். என்னுடைய வயது ஆட்கள் கன பேர் இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டீனம். அதாலை நானும் மண்டையைப் போட்டிருப்பேன் என்று கொஞ்சப் பேர் நினைக்கீனம் போல.

உண்மையைச் சொல்கிறதென்றால் பிள்ளையள் நான் என்றும் மார்க்கண்டேயன் தான். பதினாறு வயதில் ஆளின்ரை கதை முடிஞ்சிடும் என்று எல்லோரும் சொல்ல, சரியாகப் பதினாறு வயது வர மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடிச்சு எமனுக்கே பச்சடி கொடுத்திட்டார்.

என்னடா இது வில்லங்கமாகக் கிடக்குது. ஆளைக் காணவில்லை என்று நாங்கள் நாலு வதந்திகளைப் பரப்பினால், கிழவன் உயிரோடு வந்து மார்க்கண்டேயரும், சிவலிங்கமும் என்று புராணம் பாடுது என்று நீங்கள் புறுபுறுக்கிறது எனக்கு விளங்குது.

ஒன்றை மட்டும் சொல்கிறன் பிள்ளையள். நான் இன்றைக்கு உங்களுக்குச் சொல்லப் போகிற கதைக்கும் மார்க்கண்டேயருக்கும் சம்பந்தம் இல்லையயன்றாலும், சிவலிங்கத்துக்கும் அதுக்கும் நல்ல தொடர்பு இருக்குது பாருங்கோ.

சிவலிங்கம் என்று சொன்னவுடன் இன்னொரு பகிடி ஞாபகத்திற்கு வருகுது.

அன்றைக்கு என்ரை மகனின்ரை கூட்டாளி ஒருத்தன் இலண்டனில் இருந்து ஸ்புறோவுக்கு வந்திருந்தவன். அவன் முந்தி இயக்கத்துக்கு மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ஞ்சு போன பொடியன்களில் ஒருத்தன்.

கிட்டடியில் பிரான்சில் இயற்கைச் சாவைத் தழுவிக் கொண்ட பவுஸ்ரின் என்ற மாமனிதனைப் போல் உழைச்ச பொடியன்களில் அவனும் ஒருத்தன்.

இயக்கத்துக்கு வேலை செய்த பொடியன் தானே என்று நானும் அவனோடு கன நேரம் குந்தியிருந்து எங்கடை நாட்டு அரசியல் பற்றிக் கதைச்சுக் கொண்டிருந்தனான். அப்பேக்குள்ளை ‘நக்கிற நாய்க்கு செக்கென்ன, சிவலிங்கம் என்ன?’ என்று சுமந்திரன் மாத்தையாவைப் பற்றிப் போடு போக்கில் நான் சொல்ல, அவன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கீட்டான்.

‘என்னப்பு, நான் ஒரு போடு கதை போட்டதுக்கே நீ இப்படிச் சிரிக்கிறாய்?’ என்று நான் கேட்க, பொடியன் ஒரு சுவாரசியமான கதை சொன்னான்.

அது கிட்டத்தட்ட இருபத்தொரு வருசத்துக்கு முதல் நடந்த கதை பாருங்கோ. வன்னியில் ஜெயசிக்குறுய் சமர் நடந்து கொண்டிருந்த காலம்.

பாலமோட்டை, மூன்றுமுறிப்பு, புளியங்குளம், கரப்புக்குத்தி, விஞ்ஞானன்குளம் என்று சிங்கள ஆமிக்காரனும் அதாலை, இதாலை என்று முன்னேற, எங்கட பெடி, பெட்டையளும் விடாமல் ஆமிக்காரனுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்த காலம்.

அந்த நேரத்தில் நாட்டில் இருந்து இயக்கம் அவசரமாக ஆட்லறி எறிகணைகளை வாங்கி அனுப்பச் சொல்லிக் கேட்டதாம். சரி அதுக்கு காசு சேர்ப்பம் என்று எங்கடை செயற்பட்டாளர்மார் வீடு வீடாகப் படியேறித் திரிஞ்சிருக்கீனம்.

அப்படி ஒரு நாள் ஒரு வீட்டுக்குப் போன இடத்தில் ஒருத்தரிட்டை என்ரை மகனின்ரை கூட்டாளி உதவி கேட்க, அவர் தன்னட்டைக் கையில் காசு ஒன்றும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

பொடியனுக்கு விளங்கிப் போச்சுது, நசிஞ்ச கள்ளனுக்குள்ளை நக்கின கள்ளன் மாதிரி ஆள் நடக்குது என்று. ஆனாலும் அவனும் விடாமல் அவரிட்டை சொல்லியிருக்கிறான்,

‘அண்ணை உங்களிட்டை கைவசம் காசு இல்லை என்றால் பரவாயில்லை. செக்கா (காசோலை) தாங்கோ’ என்று.அவ்வளவு தான். மனுசன் சீறிக் கொண்டு சொல்லிச்சுதாம், ‘இஞ்சை என்னட்டை செக்கும் இல்லை. சிவலிங்கமும் இல்லை’ என்று. மனுசன் செக் என்றதும் அதைக் காசோலை என்று விளங்காமல் மாடு இழுக்கிற செக் என்று நினைச்சுப் போட்டார் போலை கிடக்குது.

அதுக்குப் பிறகு கொஞ்ச நாளாக செக்கும், சிவலிங்கமும் தான் இலண்டனிலை கதையாக இருந்ததாம்.

உதுக்குள்ளை அண்டைக்கு எங்கடை வடமாகாண ஆளுநர் கல்லா நிதி சுரேன் இராகவன்... மன்னிக்க வேண்டும் எனக்கு அவரைக் கலாநிதி என்று கூப்பிடுகிறது கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்குது. கலாநிதி என்றால் கொஞ்சமாவது அறிவுபூர்வமாகக் கதைக்க வேண்டும்.

‘கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்ற தெளிவு இருக்க வேண்டும்.

அதை விட்டுப் போட்டு ஒரு கலாநிதி பட்டத்தை பெற்றவுடன் தான் ஏதோ மூலோகங்களையும் அளந்த வாமதேவன் மாதிரி நினைச்சுக் கொண்டு விசர்க் கதையள் கதைக்கக் கூடாது.

நான் சுரேன் இராகவனை கல்லா நிதி என்று சொல்கிறது அவரின்ரை கல்வித் தகமையை வைச்சு இல்லை பாருங்கோ. தன்ரை சிங்கள எஜமான்கள் கல்லாவில் இருந்து கிள்ளிப் போடுகிற நிதிக்காகத் தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைக்கிற அவரின்னை மானம் கெட்ட பிழைப்பை வைச்சுத் தான் கல்லா நிதி என்று அழைக்கிறேன்.

ஆனாலும் ஆள் அன்றைக்கு நல்லா மூக்குடைபட்டுப் போனார்.

சிறீலங்கா அரசாங்கத்தைக் காட்டமாக விமர்சித்து அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் பல தவறான தகவல்கள் இருப்பதாகவும், கட்டாக்காலி இணையத்தளங்கள் சிலவற்றில் வெளிவந்த தகவல்களை எல்லாம் உண்மை என்று நம்பி அவற்றைத் தன்ரை அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் இணைச்சுப் போட்டார் என்றும் மனுசன் முதலைக் கண்ணீர் வடிச்சிருக்கிறார்.

சரி, எஜமான் போடும் எலும்புத் துண்டை நக்கும் நாய் எப்பவும் எஜமானுக்கு விசுவாசமாகத் தானே குரைக்கும்? அதுக்காக எங்கடை கல்லா நிதி சுரேன் இராகவன் மீது நாங்கள் சிறீப் பாய முடியாது.

ஆனால் அது இல்லை சுவாரசியம் பாருங்கோ.

சிங்கள எஜமான்கள் போட்ட எலும்புத் துண்டுக்காக அவர் முதலைக் கண்ணீர் வடிச்சதோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை பிள்ளையள், ‘சிங்கன் அதோடு நின்று விடாமல் சொன்னார், உண்மை என்ன என்று விசாரிக்காமல் தவறான தகவல்களைத் தன்ரை அறிக்கையில் தான் இணைச்சது பெரிய தவறு என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வருத்தம் தெரிவிச்சவாவாம்.’

உதை கொழும்பில் உள்ள சிங்கள ஊடகங்கள் எல்லாம் ஊதிப் பெருப்பிச்சு தலைப்புச் செய்தியாகப் போட்டுட்டீனம்.

எங்கடை சுரேன் இராகவன் மாத்தையாவும், சிறீசேன கொடுத்த செக்குக்காக (நான் காசோலையைக் குறிப்பிடுகிறன் பிள்ளையள்) தான் விட்ட றீல் நல்லா வேலை செய்திருக்குது என்று நினைச்சிருப்பார்.

உந்த இடத்தில் தான் எங்கடை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மிசேல் பச்லெற் ஜெரியா உயர்ந்து நிற்கிறார்.

சிலி நாட்டின் அதிபராக இருந்து மனித உரிமைகளுக்காக அயராது உழைத்த எங்கடை ஜெரியா அம்மையார் உடனேயே சீறிப் பாய்ந்து பதில் அறிக்கை விட்டார்.

சிறீலங்கா அரசாங்கத்தின்ரை வடக்கு மாகாண ஆளுநர் தன்னைப் பற்றிச் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை என்றும், தனது அறிக்கையில் தவறான தகவல்கள் இருந்ததாகத் தான் எந்தச் சந்தர்ப்பதிலும் சொல்லவில்லை என்று மனுசி ஐயம் திரிபு இல்லாமல் சொல்லிப் போட்டார்.

அதோடை எங்கடை ஜெரியா அம்மையார் நிற்கவில்லை. ‘ஒன்றில் சுரேன் இராகவன் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லாது போனால் அவர் சொன்னதாகக் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது பொய்யாக இருக்க வேண்டும்’ என்று கல்லா நிதியாரின் மூஞ்சையில் அடிக்கிற மாதிரி மனுசி அறிக்கை வெளியிட்டிட்டுது.

அதுக்குப் பிறகு எங்கடை சுரேன் மாத்தையா கப் சிப் ஆகி விட்டார்.

உதுக்குத் தான் சொல்கிறது. நக்கிற நாய்க்குச் செக்கென்ன, சிவலிங்கம் என்ன? என்று. சிங்கள எஜமான்கள் கொடுக்கிற காசுக்காகக் குரைக்கிறதை விட்டுப் போட்டுத் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு உந்த சுரேன் இராகவன் மாத்தையா போன்றவர்கள் முன்வர வேண்டும்.

இல்லாவிட்டால் நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் மாதிரி குப்பைத் தொட்டிக்குள் தான் எங்கடை கல்லா நிதியாரும் போக வேண்டும்.

வரட்டே பிள்ளையள்...?

-பிலாவடி மூலைப் பெருமான்-

நன்றி: ஈழமுரசு