நோய் எதிர்ப்பாற்றலும் அதிக உப்பும்!

வெள்ளி மார்ச் 27, 2020

நம் உணவில் அதிகமாக உப்பைச் சேர்த்துக் கொள்வது நம் ரத்த அழுத்தத்துக்கு நல்லதல்ல என்பதோடு நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பையும் பலவீனப்படுத்தும் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

ஜெர்மனியின் பான் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் இது தொடர்பாக எலிகளுக்கு அதி உப்பு உணவை வழங்கி பரிசோதித்த போது கடுமையான பாக்டீரியா தொற்றுகளில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அதே போல் ஆய்விற்காக மனிதர்கள் சிலருக்கும் நாளொன்றுக்கு 6 கிராம் கூடுதலாக உப்பு கொண்ட உணவு கொடுத்துப் பார்த்த போது நோய் எதிர்பாற்றல் பலவீனமடைந்தது தெரியவந்தது. இந்த ஆய்வு குறித்த விவரங்கள் சயன்ஸ் ட்ரான்ஸ்லேஷனல் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

இது இரண்டு ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளில் உள்ள உப்பின் அளவாகும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். வயது வந்தோர் நாளொன்றுக்கு 5 கிராம் உப்பை அதிகபட்சமாக எடுத்துக் கொள்ளலாம் என்று உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

அதாவது ஒரு தேக்கரண்டி உப்புதான் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் பரிந்துரை.

உப்பின் ரசாயனப் பெயரான சோடியம் குளோரைடு ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஆகிய ரிஸ்குகளையும் அதிகரிக்கிறது.

இது குறித்து இந்த ஆய்வில் ஈடுபட்ட கிறிஸ்டியன் கர்ட்ஸ் என்பவர் கூறும்போது, “கூடுதலாக உப்பை எடுத்துக் கொள்வது என்பது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கியமான அங்கத்தை பலவீனப்படுத்துகிறது என்பதை முதல் முறையாகக் கண்டுபிடித்துள்ளோம்” என்றார்.

இதற்கு முந்தைய ஆய்வுகள் சரும ஒட்டுண்ணிகள் சில விலங்குகளில் அதிக உப்பு காரணமாக விரைவில் வெளியேறுவதைக் காட்டியுள்ளன.

அதாவது மேக்ரோபேஜஸ் என்ற உடல் நோய் எதிர்ப்புச் சக்தி செல்கள் ஒட்டுண்ணிகளை தாக்கி, உண்டு, சீரணிக்கும் தன்மை கொண்டவரி இது உப்பு அதிகமாக இருந்தால் நன்றாகச் செயல்படுவதாக முந்தைய ஆய்வுகள் கூறிவந்த நிலையில் அதிக உப்பு நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்தும் என்று இந்த ஆய்வு மாற்றுப்பார்வையை முன்வைக்கிறது.

பல மருத்துவர்களும் உப்புக்கு நோய் தடுப்பாற்றலை வளர்க்கும் சக்தி உள்ளது என்று முடிவு கட்டினர். ஆனால் தினமும் 6 கிராம் கூடுதல் உப்பு கொண்ட உணவை 6 மனிதர்களுக்குக் கொடுத்து ஒருவாரம் கழித்து ரத்த மாதிரியை எடுத்து சோதித்ததில், அதாவது இரண்டு பர்கர்கள், கொஞ்சம் பிரெஞ்ச் ஃப்ரைகள் கொடுத்துப் பார்த்து சோதித்ததில் கிரானுலோசைட்ஸ் என்ர பொதுவாக ரத்தத்தில் இருக்கும் நோய்த்தடுப்பு செல் பாக்டீரியா தொற்றை எதிர்த்து சரியாக செயல்பட முடியாமல் போனது உறுதி செய்யபப்ட்டது என்று இந்த ஆய்வு கூறுகிறது.