நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர்

வெள்ளி ஏப்ரல் 10, 2020

சுவாச மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் கிருமித்தொற்றுகளை பெரிய நோயாக முற்ற விடாமல் தடுக்கவும் கபசுரக் குடிநீரை பயன்படுத்தலாம்.

கபசுரக் குடிநீர் மூலப்பொருளாக சித்த வைத்திய நூல்களிலும் இந்திய அரசு வெளியிட்டுள்ள சித்த மருந்துகளின் தொகுப்பு முதல் பாகத்திலும் கபசுர சூரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘கபம் என்ற சொல் சளியையும், சுரம் என்ற சொல் காய்ச்சலையும் குறிக்கும். சிறு குழந்தை தொடங்கி, வயதானவர் வரை என அனைவரையும் எதுவும் செய்யவிடாமல், முடக்கிவிடும் தன்மை கொண்ட கபசுரத்தைக் குணப்படுத்த உதவும் மருந்து என்பதன் பொருள்தான் இந்த கபசுரக் குடிநீர்.

இந்திய அரசு வெளியிட்டுள்ள சித்த மருந்துகள் முதல் தொகுப்பு முதல் பகுதியில் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றிருப்பது கபசுரக் குடிநீர் தான். முதலில் ஆடாதோடை குடிநீர் உள்ளது இரண்டாவது இடத்தில் கபசுரக் குடிநீர் இடம்பெற்றுள்ளது.

இந்த ஒரு தகவலே சித்தமருத்துவ பயன்பாட்டிலும் ஆய்வுகளிலும் கபசுர குடிநீர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை தெளிவுபடுத்தும்.

கபசுரக் குடிநீர் சூரணத்திலிருந்துதான் கபசுர குடிநீர் தயாரிக்கப்பட வேண்டும்.

கபசுரக் குடிநீர் சூரணத்தை தயாரிப்பதற்கு 15 வகையான மருந்துகள் சேர்க்கப்பட வேண்டும் என சித்த மருத்துவ நூல்கள் கூறியுள்ளன. இந்த 15 வகையான மருந்துகளும் ஏற்கனவே சித்த மருந்துகளின் பகுதியாக காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன .காலங்காலமாக இந்த மருந்துகள் தனியாகவும் கபசுர குடிநீர் சூரணமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற காரணத்தினால் நச்சுத்தன்மை ஆய்வு இவற்றுக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

கபசுரக் குடிநீர் சூரணம் தயாரிக்க தேவைப்படுகின்ற மருந்துப் பொருள்கள் விபரம்:

சுக்கு. திப்பிலி. இலவங்கம் .சிறுகாஞ்சொறி வேர் .அக்கிரகார வேர்.முள்ளி வேர். கடுக்காய் தோல் .ஆடாதோடை இலை .கற்பூரவல்லி இலை .கோஷ்டம் .சீந்தில் தண்டு .சிறுதேக்கு .நிலவேம்பு சமூலம். வட்டத்திருப்பி வேர். கோரைக்கிழங்கு .

இந்த பதினைந்து மூலப் பொருள்களையும் நாம் ஏதோ ஒரு கடையில் போய் வாங்கி விட முடியாது அதனால் பொருள்களை வாங்கி சூரணம் தயாரிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் கடினம் .

அதனால் இந்த 15 பொருள்களையும் சுத்தப்படுத்தி. நிழலில் உலர்த்தி. அரைத்து .தூளாக்கி .உரிய சல்லடையில் சலித்து சூரணத்தைத் தயாரித்து 5 கிராம் 10 கிராம் என்ற அளவில் சிறு பைகளிலும் 250 கிராம் என்ற அளவில் பைகளிலும் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விற்று வருகின்றன.

இந்த சூரணத்தை வாங்கி ஒருவர் குடிப்பதற்கான கபசுர குடிநீர் தயாரிப்பது எளிது.

 5 கிராம் எடையுள்ள சூரணம் ஒருவருக்கு போதுமானது .எத்தனை பேர் குடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஒருவருக்கு ஐந்து கிராம் என்ற அளவில் சூரண அளவைபெருக்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒரு வேளைக்கு குடிப்பதற்கு கபசுர குடிநீர் தயாரிக்க 25 கிராம் சூரணம் போதுமானது .

5 கிராம் சூரணத்தை 200 மில்லி தூய தண்ணீரில் போட்டு கலக்க வேண்டும் . எத்தனை பேருக்கு கபசுரக் குடிநீர் வேண்டுமோ அத்தனை 200 மில்லி தண்ணீர் சேர்த்துக்கொண்டு அடுப்பில் வைத்து தண்ணீரை சூடேற்ற வேண்டும் .தண்ணீரை மெதுவாக சூடு ஏற்றுகிற அளவுக்கு அடுப்பு எரிந்தால் போதும். அடுப்பில் தண்ணீரை வைத்ததும் அடுத்த நிமிஷம் அது கொதிக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம். மெதுவாக தண்ணீர் சூடேறி ஆவி வெளிப்பட்டு கொதிக்க வேண்டும்.

இறக்குவதற்கு முன் நாள் 200 மில்லி 20 மில்லி அளவுக்கு குறைந்திருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு பத்து என்ற அளவில் தண்ணீர் கொதித்துக்குறைய வேண்டும் .அதுவரை அடுப்பில் கசாயம் கொதித்துக் கொண்டிருப்பது நல்லது .ஒன்றுக்கு பத்து என்ற அளவில் கசாயம் குறைந்ததும் கீழே இறக்கி வைத்து விடலாம். சூரண தூள் அடியில் தங்கி இருக்க மேலேயுள்ள குடிநீரை வடித்து எடுத்துக் கொள்ளவேண்டும். லேசான உறைப்பு சுவை தென்படும். அதை தாங்க முடிகிறவர்கள் வெறுமனே குடிக்கலாம். இனிப்பு வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சர்க்கரையோ கருப்புக்கட்டியோ சேர்க்கலாம். சீனி போட வேண்டாம். கொஞ்சம் கருப்புக்கட்டி போட்டால் போதும்.

இப்பொழுது கபசுரக் குடிநீர் குடிப்பதற்கு தயாரான நிலையில் உள்ளது.

சுவாச மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் கிருமித்தொற்றுகளை பெரிய நோயாக முற்ற விடாமல் தடுக்கவும் கபசுரக் குடிநீரை பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு காலை மாலை குடித்தால் போதும்.

கபசுரக் குடிநீரை

சுவாச மண்டல நோய் உள்ளவர்கள் மருந்தாக சாப்பிடுவது என்றால் காலை இரவு சாப்பாட்டுக்கு முன் குடிக்க வேண்டும்.

குறைந்தது 10 நாட்கள் இரண்டு வேளை குடித்தால் குணம் தெரியும் அதன் பிறகு கபசுரக் குடிநீரை மருந்தாக பயன்படுத்துவது என்றால் உரிய சித்த மருத்துவரிடம் சென்று அவருடைய ஆலோசனையைப் பெற்று நோயாளியின் உடல் எடைக்கு ஏற்ற அளவு எவ்வளவு பொடியை போட்டு கபசுர குடிநீர் தயாரிக்க வேண்டும் என்ற அளவுகளை பெற்றுக்கொள்ளலாம் .அது தவிர துணை மருந்துகள் ஏதேனும் தேவைப்பட்டால் அவற்றையும் சித்த மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார்.