நோயாளிகளை சோதிக்கும் 'ரோபோ'!

வெள்ளி மே 01, 2020

மருத்துவ சேவை செய்வோருக்கு கொரோனா தொற்றாமலிருக்க, 'ரோபோ'க்களை பயன்படுத்தலாம் என, பல நாடுகளில் சோதனை முயற்சிகள் நடக்கின்றன.

ரோபோ உலகில் புரட்சிகளை நிகழ்த்தி வரும், 'பாஸ்டன் டைனமிக்ஸ்' நிறுவனம் அண்மையில் தன்'ஸ்பாட்' என்ற நான்கு கால் ரோபோக்களை,அமெரிக்காவின் பாஸ்டன் நகர மருத்துவமனை ஒன்றிற்குக் கொடுத்துள்ளது.

ஒரு விலங்கின் தோற்ற முள்ள ஸ்பாட் ரோபோவின் முதுகில், இரண்டு ஐபேட் கணினி, கேமரா, வாக்கி டாக்கி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தொலைவிலிருந்தே இயக்கக் கூடிய ஸ்பாட் ரோபோவை, நோயாளிகளிடம் அனுப்பி, முதற்கட்ட சோதனைகளை, பாஸ்டன் மருத்துவமனை செவிலியர் மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

விரைவில் வெப்ப உணரி கேமராக்களை பொருத்தி, நோயாளிகளின் உடல் வெப்பம், மூச்சு விடும் விகிதம், ரத்த நாளங்களின் நிலை, ரத்தத்தில் ஆக்சிஜன் விகிதம் போன்ற வசதிகளையும் சேர்க்கவுள்ளது பாஸ்டன் டைனமிக்ஸ்.

தொலைவிலிருந்து இயக்கப்படும், சக்கரங்களைக் கொண்ட எளிமையான ரோபோக்களையும் இது போல மருத்துவமனைகள் பயன்படுத்தலாம் என்பதால், தங்கள் பரிசோதனை முறைகள், கற்றுக்கொண்ட பாடங்களை பொதுவெளியில் பாஸ்டன் டைனமிக்ஸ் பகிர்ந்து கொள்கிறது.