நரம்பு தளர்ச்சியடையாமல் காக்கிறது எலுமிச்சம் பழம்!

செவ்வாய் அக்டோபர் 15, 2019

தற்போது, எலுமிச்சம் பழத்தில் இருந்து, 'ஜாம், ஜெல்லி, மார்மலேடு, லெமனைடு' மற்றும் மதுபானம் போன்றவற்றையும், பெருமளவில் தயாரிக்கின்றனர்.

மேலும்,எலுமிச்சை ரசம், எலுமிச்சை எண்ணெய், 'கால்சியம், சிட்ரேட்' போன்ற பொருட்களும் வணிக நோக்குடன் தயாரிக்கப்படுகின்றன.
இதுதவிர,உலோகத்தால் செய்த கலசங்களை சுத்தம் செய்ய, உலர வைக்கப்பட்ட எலுமிச்சை தோல்களை அரைத்து, மாவாக்கி பயன்படுத்துகின்றனர்.எலுமிச்சை தோல்,மாடுகளுக்கு,சத்துள்ள தீவனமாகவும் பயன்படுகிறது.

இதன் சாறை, அன்றாட உணவோடு, ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், ஜீரண சக்தி அதிகமாகும். நன்கு பசி எடுக்கும். விரல் முனையில் தோன்றும், 'நகச்சுத்தி' நோய்க்கு, இந்த பழத்தை செருகி வைப்பதுண்டு.

முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு இதன் சாறை தொடர்ந்து பூசி வர, நல்ல குணம் தெரியும்.

மண்ணீரல் வீக்கத்துக்கு, எலுமிச்சை ஊறுகாய் நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும், மருந்தாக உதவுகிறது.

எலுமிச்சையில், பல அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பழத்தில், வைட்டமின், 'சி' அதிக அளவில் உள்ளது.

பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும் வழக்கம், வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது. பச்சை காய்கறிகளுக்கு ருசியூட்ட, எலுமிச்சம் பழச்சாறு பயன்படுகிறது.

நம் நாட்டில், இயற்கை சிகிச்சை மருத்துவ முறையில், இந்த பழம் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

இந்த பழச் சாறுடன், தண்ணீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருள் சேர்த்து அருந்தலாம்.

எலுமிச்சம் பழச் சாறில், 'சிட்ரிக்' அமிலம் இருப்பதால் மண், கண்ணாடி மற்றும் பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுமே வைக்க வேண்டும். வேறு பாத்திரங்களில் வைத்தால், அதன் இயல்பு கெட்டு, நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடும்.

எலுமிச்சம் பழம், உடல் வெப்பத்தை குறைக்கும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்க துாண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும், இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய் கசப்பை அகற்றும். கபத்தை கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும்.

இருமல், தொண்டை நோய்களை குணப்படுத்தும். மூலத்தை கரைக்கும். விஷங்களை முறிக்கும்.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு, வலிமையை ஊட்டமளிக்கக் கூடிய ஆற்றல், இந்த பழத்திலுள்ள, 'பாஸ்பரஸ்' என்ற ரசாயன பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி, நரம்புகளுக்கு புத்துணர்ச்சியையும், தெம்பையும் அளிக்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயன பொருளான, 'பொட்டாசியம்' ரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், நரம்பு தளர்ச்சியடையாமல் காக்கிறது.

மற்ற எந்த பழத்தையும் விட, எலுமிச்சம் பழம் தான், குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பிணிகளுக்கு சரியான மருந்தாக உதவுகிறது.