நடிகை ரோஜாவுக்கு புதிய பதவி!

வியாழன் ஜூன் 13, 2019

ஆந்திராவில் ரோஜா எம்.எல்.ஏ.வுக்கு மாநில தொழிற்சாலை கட்டமைப்பு பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மந்திரி பதவி கொடுக்காததால் இந்த புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பு ஏற்றார்.

அக்கட்சியின் நிர்வாகியான நடிகை ரோஜா சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ரோஜாவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

இதனால் அவரும், ஆதரவாளர்களும் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியானது, ஆனால் அதை ரோஜா மறுத்தார். மந்திரி பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.
 

இந்த நிலையில் ரோஜா எம்.எல்.ஏ.வுக்கு ஆந்திர மாநில தொழில் உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மந்திரி பதவி கொடுக்காததால் இந்த புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரோஜா தாடேபள்ளியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி அலுவலகத்துக்கு நேரில் சென்று அவருக்கு நன்றி தெரிவித்தார்.

 

 

ஆந்திர அமைச்சரவை 2½ ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்படும் என்றும், மக்களிடம் நற்பெயர் பெறுபவர்கள் மட்டுமே அமைச்சர் பதவிகளில் நீடிப்பார்கள் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

இதற்கிடையே 2½ ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக ரோஜா நியமனம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.