நடிகர் ரஜினிக்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

செவ்வாய் சனவரி 12, 2021

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட்டார்.

ரஜினியின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள், மீண்டும் ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள். நான் காரணத்தை சொல்லியும் நீங்கள் போராடுகிறீர்கள், உங்களின் செயலால் நான் மிகுந்த மன வேதனை அடைகிறேன் என்று கடிதத்தின் மூலமாக ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் என்னை கலந்துகொள்ளச் சொல்லி பலரும் கேட்டுக்கொண்டனர். இயக்குநர் சாம்ரமணி மூலமாக பல குரல்களை நான் கேட்டேன்.

இப்போதும் ரஜினிகாந்தின் முடிவை மாற்றக் கோரி என்னிடம் பலர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். அதனால் தான் நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

ரஜினியின் முடிவால் உங்களுக்கு எவ்வளவு வலி உள்ளதோ அதே அளவுக்கு வலி எனக்கும் உள்ளது. ரஜினிகாந்த் வேறு ஏதேனும் காரணம் கூறியிருந்தால் நாம் அவரிடம் வேண்டுகோள் விடுக்கலாம். ஆனால் அவருடைய உடல்நிலையை முக்கிய காரணமாக கூறியுள்ளார்.

நாம் அவருடைய முடிவை மாற்றக் கூறி வலியுறுத்துவதைக் கேட்டு அவர் முடிவை மாற்றி அதனால் அவருக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் நாம் அந்த குற்றவுணர்வுடன் வாழ்நாள் முழுவதும் வாழ முடியாது.

அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவர்தான் என்னுடைய குரு. எனக்கு அவருடயை உடல்நிலை குறித்து தெரியும். நான் அவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.

அவருடைய உடல்நிலை குறித்தும் அவருடைய ஆரோக்கியத்துக்காவும் நாம் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதுதான் நம்முடைய வேலை’ என்று குறிப்பிட்டுள்ளார்.