நடு சாலையில் எரிந்த சரக்குந்து! சென்னையில் பரபரப்பு-

செவ்வாய் ஜூன் 28, 2022

சென்னை- சென்னை அமைந்தகரை அருகே மின்சார இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்குந்து, திடீரென சாலை நடுவில் தீப்பிடித்து எரிந்ததால், சுற்றி இருந்த மற்ற வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. 

சரக்குந்து

பெங்களூரிலிருந்து சென்னைக்கு மின்சார இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு வந்திருந்த சரக்குந்து, நேற்று இரவு சென்னை அமைந்தகரை அருகே வந்துகொண்டிருந்தபோது, சரக்குந்து முன் பகுதி திடீரென தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள்

இதனை கவனித்த சரக்குந்து ஓட்டுநர், உடனயாக சரக்குந்தை நடு சாலையில் நிறுத்திவிட்டு, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம், வேப்பேரியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு சரக்குந்தில் பரவிய தீயை அணைத்தனர், 

மின்சார வாகனங்கள்

இதனால் 20க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள், தீ விபத்தில் இருந்து தப்பித்தன, மேலும் இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள், இஞ்சினில் ஏற்பட்ட கோளாறால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கலத்தால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

பரபரப்பு

சென்னை மையப் பகுதியான அமைந்தகரையில், கூட்ட நெரிசல் உள்ள சாலையில் சரக்குந்து தீ தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.