நுவரெலியாவிற்கு யாரும் வரவேண்டாம்

வியாழன் அக்டோபர் 29, 2020

நுவரெலியாவில் உல்லாசப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

நுவரெலியாவில் கடுமையாக தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. நாட்டின் கொரோனா தொற்றின் நிலைமை குறித்து மேலதிக அறிவிப்பு வரும் வரை நுவரெலியா நகரை பார்வையிடுவதற்கு வெளியாருக்கு அனுமதியில்லை.

தனிமைப்படுத்தப்பட்ட சட்ட விதிகளை பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா பார்க் மற்றும் கிரகெரி பூங்கா, கிரகெரி வாவியில் இடம்பெறும் படகு சேவை மற்றும் சந்ததென்ன உலக முடிவு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வதற்கு அரசாங்கத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.