நவாலியூர் சோமசுந்தர புலவரின் மீண்டும் தொடங்கும் மிடுக்கு!

செவ்வாய் சனவரி 14, 2020

முன்பெல்லாம் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் வருகின்ற கதைகள், கவிதைகள் மிகுந்த கருத்தாழமும் அர்த்தப்பாடும் கொண்டவை யாக இருக்கும்.

இஃது பாலர் பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரையில் நீண்டு நிலைத்திருந்தது.

பாலும் சோறும் உண்ணத் தந்து படிக்க வைக்கும் அம்மா என வித்துவான் வேந்தனின் பாடல் வரிகளை மழலைச் செல்வங்கள் பாடிப் பரவுவது முதல், யாழ்.பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் அ.செ.முருகானந்தத்தின் மனித மாடு என்ற சிறுகதை அங்கீகரிக்கப் பட்ட அலகாக இருந்தது வரையில், எல்லாமும் மாணவர்களை வாழ்விக்கும் கலைக் களஞ்சியமாயின.

இன்று அந்த நிலைமைகள் ஏதுமில்லை. பாலர் பாடசாலைகளில் மாணவர்கள் பாடு கின்ற பாடல் என்ன என்று எடுத்துச் சொல்ல முடியாத அளவில் நிலைமை உள்ளது.

சுருங்கக்கூறின் நவகாலத்துச் சித்திரம் போல எல்லாவற்றிலும் அவலம் மட்டுமே விழித்து நிற்கின்றன.

என்ன செய்வது காலம் கலியுகம் ஆதலினால் அஃது தன் இயல்பைக் காட்டவே செய்யும் என்ற வகையில் அவற்றை ஒருபுறமாக வைத்து விடலாம்.

எனினும் நம் மண்ணில் வாழ்ந்த பெரியவர்களை எம் மாணவர்கள் அறியாமல், தெரியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய வேதனை.
இந்த வேதனையைத் தாண்டி ஏதோ வொரு வகையில் தமிழ் வளர்த்த சான்றோர்களை மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

அந்தவகையில் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் எங்கள் தமிழ் மண்ணுக்குக் கிடைத்த தங்கத் தாத்தா.

ஜீவகாருண்யம் மிக்க அந்தப் புலவன் நல்லூர்க் கந்தன் மீது பாடிய திருப்புகழ் அற்புதமானது.

ஆலயங்களில் ஆடு வெட்டும் வேள்வியை எதிர்த்த புலவரின் பாடல்கள் அநீதியைக் கண்டு அவர் அடைந்த கொதிப்பைக் காட்டுவதாகும்.
இப்பேற்பட்ட சோமசுந்தரப் புலவர் மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்ற கதையை எழுதினார்.

1977ஆம் ஆண்டுகளில் 7ஆம் வகுப்புக்குரிய தமிழ்ப் புத்தகத்தில் அந்தக் கதை இடம் பெற்றிருந்தது.

கடும் வறட்சியான நிலத்தில் ஆழக்கிணறு வெட்டி அதில் இருந்து தண்ணீர் எடுத்து பயிர் செய்து விளைச்சல் விளைய இருந்த நேரத்தில்; சோ என்று மழை கொட்டி வெள்ளம் போட்டு எல்லாப் பயிர்களையும் அழித்துவிட,

அந்த விவசாயி மீண்டும் தன் தோளில் மண்வெட்டியை எடுத்துச் செல்வதாக  மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்ற கதை அமைகிறது.

இந்தக் கதை இன்றைய சூழலில் தமிழ் மக்களுக்கும் மிகப் பொருந்தும்.

ஆம், எங்கள் தமிழ் மக்களும் அரசியலில் மீண்டும் தொடங்கும் மிடுக்காகச் செயற்பட வேண்டியுள்ளது.

இந்த மிடுக்கு தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தலைமையைத் தீர்மானிப்பதாக இருப்பதே பொருத்துடையது.

நன்றி-வலம்புரி