ஒசாமா பின் லேடன் படத்துடன் கேரளாவில் சுற்றிய கார் பறிமுதல்!

வெள்ளி மே 03, 2019

கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகபெரிய தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் படத்துடன் சுற்றிய காரை காவல் துறையினர்  பறிமுதல் செய்தனர்.

அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் உருவம் பொறித்த ஸ்டிக்கருடன் மேற்கு வங்காளம் மாவட்டத்தின் பதிவு எண்ணை கொண்ட ஒரு கார் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் சுற்றிக் கொண்டிருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. 

தகவல் அளித்தவர்களில் ஒருவர் தனது கைபேசியால் அந்த காரை படம் பிடித்து இரவிபுரம் காவல் நிலையத்துக்கு அனுப்பி இருந்தார். இதை தொடர்ந்து விரைவாக செயலாற்றிய காவல் துறை அந்த காரை மடக்கிப் பிடித்து காரை ஓட்டி வந்த சாரதியை கைது செய்தனர். 

அந்த கார் தனக்கு சொந்தமானது அல்ல என்று வாக்குமூலம் அளித்த டிரைவர், திருவனந்தபுரம் அருகேயுள்ள முன்டக்கல் பகுதியில் உள்ள நாசர் என்பவரிடம் இருந்து திருமணம் சார்ந்த  வேலைக்காக காரை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் நாசரை காவல் துறை வரவழைத்து விசாரித்தபோது மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தடையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) பெறாமல் அந்த கார் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளகாவல் துறைaினர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.