ஒகாபி- இருபதாம் நூற்றாண்டின் அழகிய கண்டுபிடிப்பு!

சனி மார்ச் 20, 2021

வரிக்குதிரையையும் ஒட்டகச்சிவிங்கியையும் இணைத்து உருவாக்கிய கலப்பினமோ என்று எண்ண தோன்றும் இந்த அபூர்வ விலங்கின் பெயர் ஒகாபி(Okapi). 

இந்த வினோத விலங்கு உண்மையில் ஒட்டகச்சிவிங்கியின் நெருங்கிய உறவினராகும். ஜிராஃபிடே (Giraffidae) குடும்பத்தில் ஒட்டகச்சிவிங்கியை தவிர்த்து இருக்கும் ஒரே இனம் ஒகாபிகளே. 2015 ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஒகாபிகள் ஒட்டகச்சிவிங்கிகளைவிட பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை என்று கருதப்பட்டன.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இவ்விரண்டு விலங்குகளும் நீள் கழுத்துடைய ஒரே மூதாதையரிடமிருந்து 1.1 முதல் 1.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பிரிந்துள்ளன என்பதை உணர்த்துகின்றன. பல மில்லியன் வருடங்களாக ஒகாபிகளில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லாததால் இவை வாழும் தொல்லுயிர் எச்சங்களாக (Living Fossil) கருதப்படுகின்றன.

இவற்றிற்கு காட்டு ஒட்டகச்சிவிங்கி (Forest Giraffe), வரிக்குதிரை ஒட்டகச்சிவிங்கி (Zebra Giraffe), காங்கோவின் ஒட்டகச்சிவிங்கி (Congolese Giraffe) என்ற பெயர்களும் உள்ளன 

வாழிடம் மற்றும் பரவல்:

ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த இந்த உயிரினம் உகாண்டா காடுகளில் இருந்து முற்றிலுமாக அழிந்து போய் இன்று காங்கோ ஜனநாயக குடியரசின் (Democratic Republic of Congo) வடகிழக்கு மழைக்காடுகளில் மட்டுமே வாழும் ஓரிட வாழ்விகளாக (#Endemic) உள்ளன.

மிகவும் கூச்ச சுபாவமுள்ள தனிமையை விரும்பும் இவ்விலங்குகள் கடல் மட்டத்திலிருந்து 1600 முதல் 4900 அடி உயரத்திலுள்ள மரங்களடர்ந்த காடுகளுக்குள்ளேயே வாழ்கின்றன. இதன் உடலில் உள்ள அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள், அடர்ந்த மரங்களினூடே வரும் சூரிய வெளிச்சத்தினால் உண்டாகும் மர நிழலை ஒத்துள்ளது. இந்த நிற தேர்வு மிகச்சிறந்த பரிணாம உருமறைப்பாக உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல...!

உருவ அமைப்பு;

ஒகாபிகளின் கழுத்து மற்றும் தலை அமைப்பு பார்ப்பதற்கு ஒட்டகச்சிவிங்கியை ஒத்துள்ளது. ஆழ்ந்த சிவப்பு கலந்த அடர் பழுப்பு நிற உடலையும் சாம்பல் கலந்த வெண்மை நிற முகத்தையும் கொண்டுள்ளன. உடலை மூடி உள்ள அடர்சிவப்பு நிற முடிகள் வெல்வெட்டை போன்று மென்மையாகவும், வழுவழுப்பாகவும் உள்ளன.

மேலும் தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் எப்போதும் தோலை வழுவழுப்பாக வைத்துள்ளன. இத்தகவமைப்பு நீர்புகாத்தன்மையை கொடுப்பதால் மழைக்காடுகளில் இவற்றின் வாழ்க்கையை எளிதாகிறது. 

ஒகாபிகளின் கால் மற்றும் உடலின் பின்புறம் வரிக்குதிரையை ஒத்த கோடுகள் தென்படுவது மேலும் இவற்றிற்கு அழகு சேர்க்கிறது.

இதன் நீண்டு உயர்ந்த காதுகளும் கொம்புகளும் (Ossicone) கூட ஒட்டகச்சிவிங்கியை ஒத்ததாகவே உள்ளது. இவ்விலங்கிற்கு மற்றொரு தனிச்சிறப்பு இதன் நாக்கு. ஒட்டகச்சிவிங்கியை போன்றே ஆழ்ந்த நீல நிறத்தில் சொரசொரப்பான நீண்ட நாக்கினை கொண்டிருந்தாலும், இதன் நாக்கு மற்ற எல்லா விலங்குகளின் நாக்கினை விட நீண்டது (25 செ.மீ). உலகில் உள்ள பாலூட்டிகளிலேயே தன் சொந்த நாக்கினால் காதுகளை தொட முடிந்த ஒரே விலங்கு இதுவே. 

ஆண் விலங்குகளை விட பெண் விலங்குகள் அளவில் பெரியவை (ஆண்- 180 முதல் 250 கிலோ; பெண்- 240 முதல் 356 கிலோ). 4.6- 5.2 அடி உயரமும் 8 அடி நீளமும் கொண்ட இவற்றின் வாலின் நீளம் 30 - 42 செ.மீ வரை இருக்கும். 

இவற்றின் கால் குளம்புகளுக்கிடையே உள்ள நறுமண சுரப்பிகளே எல்லையை நிர்ணயிக்க உதவுகின்றன. இவை நடக்கும்போது கரு நிறத்தில் வழுவழுப்பான இந்த திரவத்தை விட்டுச் செல்கின்றன.

உணவு முறை;

தாவர உண்ணிகளான ஒகாபிகள் பழங்கள், இலைகள், மொட்டுகள் என அனைத்தையும் உண்கின்றன, ஒட்டகச்சிவிங்கிகளைப் போன்றே இவையும் தமது சொரசொரப்பான நீல நிற நாக்கை நீட்டி இலைகளை இழுத்து உண்ணுகின்றன.

தாவர உணவுகளில் இவைகளுக்கு போதுமான தாதுஉப்புகள் கிடைக்காததால், ஆற்றோரங்களில் உள்ள சிவப்பு நிற களிமண்ணையும் அவ்வப்போது உண்கின்றன. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து 20 முதல் 27 கிலோ உணவை உண்கின்றன. 

நூற்றுக்கும் மேற்பட்ட தாவர வகைகளை உண்ணும் ஒகாபிகளின் உணவு பட்டியலில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால், இவை உண்ணும் தாவரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை விஷத்தன்மை வாய்ந்தவை. மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான்.

வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக பெரும்பாலும் வெயிலான பகல் பொழுதுகளையே உணவு தேட தேர்ந்தெடுக்கின்றன. இவற்றின் நிறம் நிழலில் உருமறைப்பாக செயல்படுகின்றது என்பதை ஏற்கனவே பார்த்தோமல்லவா. மேலும் ஒட்டகச்சிவிங்கிகளை போன்றே கால்களை அகட்டி வைத்தே இவையும் நீர் அருந்துகின்றன.

இனப்பெருக்கம்;

20 முதல் 30 வருடங்கள் வரை உயிர் வாழும் ஒகாபிகளுக்கு என்று தனியே இனப்பெருக்க காலம் இல்லை. வருடம் முழுவதும் இணை சேரக் கூடியது. மூன்று வருடங்களில் இனப்பெருக்க முதிர்ச்சி அடையும் ஒகாபிகளின் கர்ப்ப காலம் மிக நீண்டது (414 முதல் 493 நாட்கள்). 

பெரும்பாலும் ஒரு குட்டியையே ஈனுகின்றன. பிறந்து இரண்டு மாதங்கள் வரை குட்டிகளை பாதுகாப்பான தனி இடத்தில் வைத்து வளர்க்கின்றன. அதன் பிறகே குட்டிகள் வெளி உலகை காண வருகின்றன.

தாய் ஒகாபிகள் குட்டிகளுடன் பேசுவதற்கு என்று மிகக் குறைந்த அதிர்வெண்(Infrasonic Sound- 14Hz) கொண்ட தனிப்பட்ட ஒலியை எழுப்புகின்றன. மனிதர்களால் மட்டுமின்றி இவற்றின் முக்கிய எதிரியான சிறுத்தைகளுக்கும் இவ்வொலி கேட்காது என்பதால் அவற்றிடமிருந்தும் குட்டிகளை பாதுகாக்கவும் உதவுகின்றது.

குட்டிகளின் கழிவுகளை வாசம் பிடித்து வேட்டையாடும் விலங்குகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக தாய் ஒகாபிகள் குட்டிகளின் கழிவுகளை முழுவதுமாக தின்பதோடு மட்டுமன்றி மலத்துவாரத்தையும் நாக்கினால் சுத்தம் செய்து விடுகின்றன.

குட்டிகள் தாயின் பின்னால் உள்ள வரிகளை பின்பற்றி செல்கின்றன. பசும்பாலை விட ஒகாபிகளின் பாலில் அதிக அளவு புரதம் உள்ளது.

சிறப்பு தகவல்கள்;

1870களில் காங்கோவிற்கு பயணம் சென்ற ரஷ்ய சாதனையாளர் Wilhelm Junker இதனை பார்த்ததாக பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் இதனை வரிக்குதிரை மற்றும் மான் இணைந்த கலப்பினம் என்று எண்ணியதால் மேற்கொண்டு ஆராய நினைக்கவில்லை.

மறுபடி 1890களில் அமெரிக்க அறிவியலாளர் Sir Henry Morton Stanely இதனை பதிவு செய்தாலும் முழுமையான தகவல்கள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே 1900 ஆண்டு வரை ஒகாபி என்ற ஒரு உயிரினம் உள்ளது என்பது ஒரு கற்பனைக் கதையாகவே இருந்தது.

எனவே அதனை கற்பனை விலங்கான ஒற்றைக் கொம்புக் குதிரை (Unicorn) என்னும் பொருள்படும்படி, ஆப்பிரிக்க ஒற்றைக் கொம்பு குதிரை (African Unicorn) என்று அழைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக 1901ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியலாளரான Sir Harry Hamilton Johnston-க்கு, காங்கோ பழங்குடி மக்களிடமிருந்து ஒகாபி தோலினால் செய்யப்பட்ட இரண்டு இடுப்பு அரைக்கச்சு அன்பளிப்பாக கிடைத்தன. ஜான்சனின் ஆர்வத்தை இது தூண்டவே மேலும் தன் தேடலை விரிவுபடுத்தினார். 

அதன்பின்னர் காங்கோவில் உள்ள பிக்மி பழங்குடியினரிடமிருந்து ஒகாபியின் முழுமையான தோலும், 2 மண்டை ஓடுகளும் இவருக்கு கிடைக்கவே இவ்வுயிரினம் பற்றிய தகவல்கள் வெளியாயின. இருபதாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட மிக அரிய அழகிய கண்டுபிடிப்பு இது. 

இவ்வரிய கண்டுபிடிப்பிற்கு புகழ் சேர்க்கும் விதமாக ஒகாபிக்கு விலங்கியல் பெயராக Okapi Johnstoni என்று ஜான்சனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒகாபிகளுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு இவற்றின் மரபணுவில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46, குரோமோசோம்களுக்கு பதிலாக இவற்றிற்கு 45 அல்லது 44 குரோமோசோம்களே உள்ளன.

வேறு எந்த விலங்காக இருந்தாலும் இந்த குரோமோசோம் குறைபாடானாது, உடல் உறுப்பு குறைபாடு அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கும். ஆனால் ஒகாபிகளில் அங்கனம் எந்த குறைபாடும் இல்லை என்பது ஆச்சரியமான உண்மை.

மேலும் இன்றைய நிலை;

ஒகாபிகளின் உருமறைப்பு மற்றும் அவற்றின் தனிமை விரும்பி வாழ்க்கை காரணமாக அவற்றை காடுகளில் இனம் கண்டறிவது மிக கடினம். தோராயமாக காடுகளில் 10,000 முதல் 15,000 ஒகாபிகள் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர். 

அதிக எண்ணிக்கை என்று தோன்றினாலும் வாழிட அழிப்பு, உணவு மற்றும் தோலுக்காக நடத்தப்படும் வேட்டையாடுதலின் காரணமாக கடந்த 24 ஆண்டுகளில் 50% ஒகாபிகள் அழிந்துள்ளன. எனவே ஐயுசிஎன் இவற்றை அருகிய இனங்கள்(Endangered) வரிசையிலேயே சேர்த்துள்ளது.

2012ஆம் ஆண்டு வேட்டையாடிகள் ஒகாபி பாதுகாப்பு காடுகளுக்குள் சென்று 6 காவலர்களையும், 14 ஒகாபிகளையும் ஒரே நேரத்தில் கொன்றுள்ளனர். அங்குள்ள வேட்டையாடி களிடமிருந்து அவற்றை பாதுகாப்பது எவ்வளவு கடினம் என்று புரிகிறதா?

காங்கோவில் ஒகாபிகள் அதிகமாக வாழும் இட்டுரி காடுகளை(Ituri Forest) யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து அதனை ஒகாபி சரணாலயமாக மாற்றி பாதுகாக்க உதவுகிறது. 

நன்றி - மருத்துவர் பி.பி.வானதி தேவிவி, லங்கியல் வல்லுநர்