ஓலா உபேர் நிறுவனங்களுக்கு எதிராக 3,200 புகார்கள்!

சனி மே 21, 2022

சென்னை- செயலி மூலம் நுகர்வோர்களுக்கு வாடகைக்கு மகிழுந்து சேவை வழங்கி வரும் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு எதிராக 3,200 க்கும் அதிகமான புகார்கள் வந்ததை அடுத்து, விளக்கம் கேட்டு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதுகுறித்து அந்த ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நுகர்வோரிடமிருந்து நியாயமற்ற முறையில் கட்டணம் வசூலித்தல், சேவைகள் பற்றாக்குறை, மகிழுந்தை ரத்து செய்ததற்குக் காரணமே இல்லாமல் அதிக கட்டணங்கள் வசூலித்தல், குறிப்பிட்ட தொலைவுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் அல்காரிதங்கள் சரியாக இல்லாமல் இருப்பது, நுகர்வோரின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான அமைப்பு உரிய முறையில் செயல்படாமல் இருப்பது உள்பட பல்வேறு புகார்கள் எங்களுக்கு வந்தன.

முக்கியமாக வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படாமல் இருந்தது, நுகர்வோரின் பிரச்னைகளைத் தீர்க்க அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தது ஆகியவை மிக முக்கியமான கவலைகளாகக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஓலா, உபேர், ராபிடோ, மெரு கேப்ஸ், ஜுக்னூ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரிகள் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தேசிய நுகர்வோர் உதவி மையத்துடன் இணைந்து செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் பிரிவுகள் மற்றும் மின்னணு வர்த்தக விதிகள் ஆகியவற்றை பின்பற்றுமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கடந்த ஏப்ரல் 1ம் திகதியில் இருந்து, மே 1ம் திகதி வரை 2,482 புகார்களை ஓலாவுக்கு எதிராக நுகர்வோர்கள் பதிவு செய்துள்ளனர். உபேர் நிறுவனத்துக்கு எதிராக 770 புகார்கள் பதிவாகியுள்ளன.

ஒரே வழித்தடத்தில் இரண்டு பேர் தனித்தனியாக காருக்கு முன்பதிவு செய்யும்போது ஒரே கட்டணம் காட்டப்படாமல் வேறு வேறு கட்டணங்கள் காட்டப்படுவதாகவும் புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டணங்களை விதிக்க எந்த வகையான அல்காரிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவலும் இல்லை.

ஓலா நிறுவனத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகார்களில் 21 சதவீதம், பணம் திருப்பிச் செலுத்தப்படாமல் இருந்தது தொடர்புடையதாகவே இருந்தது. அங்கீகரிக்கப்படாத கட்டணம், மிகைக் கட்டணம், பரிசு தருவதாகக் கூறி தராமல்விட்டது ஆகிய புகார்கள் தொடர்பாகவும் ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.