ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 15 - கலாநிதி சேரமான்

வியாழன் மார்ச் 18, 2021

வென்றவர்களும், தோற்றவர்களும், ஏமாந்து போனவர்களும்

 

‘இந்தியப் பொறிவியூகத்திற்குள் புலம்பெயர் அமைப்புக்கள்’ என்ற மகுடத்தின் கீழ் சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் 18.02.2021 அன்று எழுதப்பட்ட இப் பத்தியின் பதினான்காவது தொடரில் எச்சரிக்கப்பட்டதை உண்மையாக்கும் சம்பவங்கள் கடந்த மூன்று வார காலப்பகுதியில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. கடந்த தொடர் வெளிவந்ததுமே எப்படியாவது அடுத்த தொடர் வெளிவருவதைத் தடுப்பதற்கான பகீரத பிரயத்தனங்கள் சிங்கள - இந்தியப் புலனாய்வுத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆயினும் அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து இத் தொடர் இன்று வெளிவருகின்றது. எனினும் இத் தொடர் ஒரு மாதம் கடந்து வெளிவராமல் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்தால் இன்று புலம்பெயர் தேசங்களில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கான காரணிகள் பற்றிய விழிப்புணர்வு முற்கூட்டியே மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். ஏன் இந்தப் பின்னடைவு கூட தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும். இன்று காலம் கடந்திருந்தாலும், காலத்திற்கு ஏற்றதாகவே இக் கட்டுரை விரிகின்றது.

 

1998ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதி அது. ஜெயசிக்குறுய் எதிர்ச் சமர் தீவிரமடைந்திருந்த அக்காலப் பகுதியில் புலம்பெயர் தமிழர்களுக்கு என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் பிரத்தியேமான அறிக்கை ஒன்று காட்சிப் பதிவு வடிவில் வெளியிடப்பட்டிருந்தது. தமிழீழ மக்கள் புலம்பெயர்ந்து எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, அவற்றுக்கு இசைவாகவே செயற்பட வேண்டும் என்பது தான் அன்று புலம்பெயர் தமிழர்களுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது.

 

என்றுமே சட்டம் - ஒழுங்கை மதிப்பவர் தலைவர் பிரபாகரன். சிங்களத்தின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகத் தமிழீழ மக்களின் தேச சுதந்திரப் போராட்டத்தைத் தமிழீழத் தேசியத் தலைவர் தொடங்கியிருந்தாலும், சுதந்திரத் தமிழீழம் என்பது சட்டம் - ஒழுங்கைப் பேணும் ஒரு நாடாக அமைய வேண்டும் என்பது தேசியத் தலைவரின் உறுதியான நிலைப்பாடு.

 

Thalaivar

 

இதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தனிநபர் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவை இறுக்கமாகப் பேணப்பட்டன. அதிலும் முக்கியமாகப் பாலொழுக்கம் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குட்பட்டிருந்த தமிழீழ தாயகப் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் தான் நள்ளிரவில் கூட நகைகளை அணிந்து கொண்டு தமிழீழத்தில் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடிந்தது. பாரத தேசத்தில் மகாத்மா காந்தி கண்ட கனவைத் தமிழீழ தேசத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சாத்தியமாக்கினார்.  

 

சட்டம் - ஒழுங்கைப் பேணுவதில் தலைவர் பிரபாகரன் அவர்கள் எவ்வளவு இறுக்கமானவர் என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் தளிர் விட்டிருந்த 1970களின் இறுதிக் காலப்பகுதி. வல்வெட்டித்துறையில் உள்ள வணிகர்கள் சிலருடன் அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கிய ரகு (மண்டைக் கண்ணன்) என்பவர் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றார். அக் கூட்டத்தில் இந்தியாவிற்கும், தமிழீழத்திற்கும் இடையில் கள்ளக் கடத்தலில் ஈடுபடும் சிலரும் இருக்கிறார்கள். இயக்கத்திற்கு அவர்களின் ஆதரவையும் எப்படியாவது பெற வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் அவர்களிடம் பின்வருமாறு ரகு கூறுகின்றார்: ‘நாங்கள் நிச்சயமாகத் தமிழீழத்தை உருவாக்குவோம். தமிழீழம் அமைந்ததும் நீங்கள் சுதந்திரமாக இந்தியாவுக்கும், தமிழீழத்திற்கும் இடையில் கள்ளக்கடத்தல் தொழில் செய்யலாம்.’ கூட்டத்தில் பங்கேற்ற கள்ளக் கடத்தல்காரர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

 

விடயம் தலைவரின் காதிற்குச் செல்கின்றது. அவ்வளவு தான். ரகுவை அழைத்த தேசியத் தலைவர், அவரைக் கடிந்து கொண்டார். கள்ளக்கடத்தல் என்பது ஒரு சட்ட விரோதத் தொழில் என்பதை ரகுவிற்கு விளங்கப்படுத்தினார். சிறீலங்காவின் சட்ட அமைப்பைப் பேணும் காவல்துறை இயந்திரத்தையும், கடற்படையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்துப் போராடினாலும் தமிழீழம் என்றொரு நாடு உருவாகும் பொழுது அங்கு சட்டம் - ஒழுங்கு பேணும் பணிகளை முன்னெடுப்பதற்கு என்று ஒரு காவல்துறையும், நாட்டின் தேசிய வளங்களைப் பேணுவதற்கு என்று ஒரு கடற்படையும் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ரகுவிற்கும், ஏனைய போராளிகளுக்கும் தலைவர் எடுத்து விளக்கினார்.

 

அதன் பின்னர் ரகுவிடம் தமிழீழத் தலைவர் தெரிவித்தாராம்: ‘இனி மேல் இப்படி விசர்த்தனமான கதைகளைக் கதைக்காமல் யோசித்துக் கதை.’

 

சரி, இப்பொழுது புலம்பெயர் தேசங்களின் பக்கம், அதுவும் இலண்டனின் பக்கம் எமது கவனத்தைத் திருப்புவோம். கடந்த 14.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் மிகப் பெரும் கேவலம் ஒன்று அரங்கேறியது. தமிழீழ தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியவாறு இலண்டனில் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதி ஒன்றுக்குள் குவிந்த தமிழ் இளைஞர்கள் காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்டார்கள்.

 

Ambi1

 

அங்கு ஒரு சில நூற்றுக்கணக்கில் கூடி நின்ற தமிழர்களில் தமிழின உணர்வு மிக்கவர்கள் தான் பெரும்பாலானவர்கள். பலர் இறுதி யுத்தத்தில் தமது உறவுகளைப் பறிகொடுத்தவர்கள். யுத்தம் முடிந்த பின்னர் தான் அவர்களில் பலர் புலம்பெயர்ந்து பிரித்தானியாவிற்கு வந்திருந்தார்கள். 2009ஆம் ஆண்டு வன்னியில் யுத்தம் தீவிரமடைந்த பொழுது இலண்டனிலும், ஏனைய மேற்குலக தேசங்களிலும் இடம்பெற்ற அறவழிப் போராட்டங்கள் பற்றி அவர்களுக்கு அறவே தெரியாது. வீதிகளை மறித்தல், உண்ணாவிரதம் இருத்தல் போன்றவற்றால் எந்தப் பயனும் ஏற்படாது என்பது அவர்களில் பலருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

 

Ambi2

 

அம்பிகை என்ற பெண் தங்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்காகத் தான் பட்டினி கிடக்கின்றார் என்று எண்ணி உணர்ச்சிவசப்பட்ட அவர்கள், ஒரு புறத்தில் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற அங்கலாய்ப்போடும், மறுபுறத்தில் தாங்கள் எல்லோரும் தமிழீழ தேசியக் கொடியோடு வீதிக்கு வந்து போராடினால் உடனே பிரித்தானிய அரசு தங்களுக்குப் பணிந்து வந்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றி, சிங்கள ஆட்சியாளர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் என்று தான் அவர்கள் நினைத்திருந்தார்கள். அதற்காக அவர்களை இங்கு குறைகூற முடியாது.

 

Ambi3

 

அனுபவம் ஒரு ஆசான் என்பார்கள். 2009ஆம் ஆண்டு இலண்டனிலும், ஏனைய புலம்பெயர் தேசங்களிலும், உண்ணாவிரதம், தீக்குளிப்பு, வீதிமறியல் போராட்டம், ஊர்வலம் என அறவழியில் போராடிக் களைத்துப் போன பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியும், அம்பிகையின் பட்டினிப் போராட்டம் எந்தப் பயனையும் ஈட்டித் தரப் போவதில்லை என்பது. ஏன் ஒரு பட்டயக் கணக்காளரான அம்பிகைக்குக் கூடத் தெரியும், தனது உண்ணாவிரதத்தால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்பது.

 

Ambi4

 

அப்படி இருந்தும் ஏன் அம்பிகை சாகும் வரையான பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டார்? தனது கணவன் என்று அவர் அடையாளப்படுத்திய செல்வகுமார் என்பவர் வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்கப் போகின்றார் என்பதை அறிந்து, அதனைத் தடுப்பதற்காகவும், தனது கணவனைத் தன்னிடம் மண்டியிட வைப்பதற்காகவுமே அம்பிகை பட்டினிப் போரில் குதித்துள்ளார் என்று முன்னரே அவரது உறவினர்கள் சிலர் கூறினார்கள். தனது கணவன் என்று அம்பிகை அடையாளப்படுத்திய செல்வகுமார் கூட, அவரது உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததுமே அவரது செயல் ஒரு ‘அரசியல் பித்தலாட்டம்’ என்று குற்றம் சுமத்தியிருந்தார். அதைவிடத் தனது மிரட்டலுக்குப் பணியாமல் 14.03.2021 அன்று தனது கணவர் என்று அம்பிகை அடையாளப்படுத்திய செல்வகுமார் மறுமணம் செய்ததை அடுத்து மறுநாள் 15.03.2021 அன்று தனது பட்டினிப் போராட்டத்தை அம்பிகை நிறுத்தியதாகவும் தெரிவிப்பவர்கள் உள்ளார்கள்.

 

Ambi5

 

இவை எல்லாம் உண்மையா? அல்லது பொய்யா? என்பது பற்றி இப்பத்தி எழுத்தாளருக்குத் தெரியாது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்வைப் பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய தேவை இப்பத்திக்கும் கிடையாது. அன்றி அம்பிகை இறக்க வேண்டும் என்று கூட இப்பத்தி எழுத்தாளர் கருதவில்லை. மாறாக எதற்காக சாத்தியமல்லாத பட்டினிப் போராட்டத்தில் மெத்தப்படித்த ஒரு பட்டயக் கணக்காளரான அம்பிகை குதித்தார்? என்பதே இப்பத்தி எழுத்தாளரின் கேள்வியாகும். சரி, இவற்றை விடுவோம்.

 

Ambi6

 

கொரோனா கொல்லுயிரியின் தாக்கம் அதிகரித்துள்ள ஒரு காலகட்டத்தில் எதற்காகத் தனது வீட்டி வாசலுக்கு மக்கள் திரளும் அபாயமுள்ள ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அம்பிகை தொடங்க வேண்டும்? வேறு ஒரு இடத்தை, அதுவும் பொது இடம் ஒன்றைத் தெரிவு செய்து, அங்கு காவல்துறையின் அனுமதியுடன் தனது உண்ணாவிரதத்தை அம்பிகை நடத்தியிருக்கலாமே? உதாரணமாக இலண்டனில் பல பூங்காக்கள் உள்ளன. அதிலும் இலண்டனில் உள்ள ஹைட் பார்க் என்ற பூங்கா இப்படியான ஒன்று தான். தனது வீட்டுத் தோட்டத்தில் கூடாரம் அடித்ததற்குப் பதிலாகக் காவல்துறையினரின் அனுமதி பெற்று ஹைட் பார்க் என்ற பூங்காவில் கூடாரமடித்து உண்ணாநோன்பிருந்திருக்கலாமே?

 

சரி, அவர் தான் அப்படிச் செய்யவில்லை. அவரின் பின்னால் நின்றவர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை? அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களில் சட்டத்தரணி ஒருவரும் உள்ளடக்கம். சட்டம் தெரிந்த அவர் போன்றவர்கள் கூட ஏன் அம்பிகையைத் தடுத்து நிறுத்தவில்லை?

 

அதுதான் போகட்டும். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பக்கபலமாக நின்ற பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற அமைப்புக்களின் பிரமுகர்களுக்குக் கூடவா யதார்த்தம் புரியவில்லை?

 

இப்பொழுது விடயத்திற்கு வருவோம். இந்த உண்ணாவிரத்திற்கு மக்களை அணிதிரட்டுதல் தொடக்கம் தமிழ் ஊடகங்களில் பரப்புரை செய்தல் வரையான பணிகளை முன்னெடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணைக் கும்பல். இந்தியப் புலனாய்வுத்துறையின் கைக்கூலி என முன்னாள் போராளிகளால் அடையாளப்படுத்தப்படும் சங்கீதன், முள்ளிவாய்க்காலில் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைக்கப்பட்டுத் தப்பியோட முற்பட்ட இளைஞர்களையும், பொதுமக்களையும் காலில் சுட்ட குற்றத்திற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையால் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட தும்பன் என்ற போர்க்குற்றவாளி போன்றவர்களும், தமிழீழ வைப்பகத்தின் பொறுப்பாளராக இருந்த பொழுதும், சிங்களப் புலனாய்வுத்துறையினரால் எவ்வித தண்டனைக்கும் உட்படுத்தப்படாமல் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டவருமான பாலகிருஸ்ணன் போன்றவர்கள் தான் அம்பிகையின் உண்ணாவிரதத்திற்கு மக்களை வரவழைத்தார்கள். இவர்கள் தான் அம்பிகையின் வீட்டின் முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள்.

 

Ambi7

 

சிங்களக் கைப்பாவையான கே.பியால் உருவாக்கப்பட்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். இதன் பிரதமர் என்று தன்னைத் தானே அழைக்கும் விசுவநாதன் உருத்திரகுமாரனுக்கும், இந்தியப் புலனாய்வுத் துறையினருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பல தடவைகள் இப்பத்தி எழுத்தாளரால் வெளிக்கொணரப்பட்ட ஒன்று. எனவே சங்கீதன், தும்பன், பாலகிருஸ்ணன் போன்றவர்களோடு, அம்பிகையின் உண்ணாவிரத்திற்கு மக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் என்று கூறிக்கொள்ளும் கோமாளிகள் அழைத்ததற்கான காரணங்களை நாம் புரிந்து கொள்வதற்கு விண்வெளி விஞ்ஞானத்தில் கலாநிதி பட்டம் பெற்று நாசா மூலம் செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று வர வேண்டியதில்லை.

 

Sangeethan

 

அதாவது இவர்கள் அனைவரும் இந்திய – சிங்களப் புலனாய்வு நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமையத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனேயே அம்பிகையின் வீட்டிற்கு முன்னாள் மக்களை அணிதிரளக் கோரினார்கள் என்பதை அங்கு நடந்தேறிய சம்பவங்கள் பட்டவர்த்தனமாக்கியிருக்கின்றன.

 

இவற்றுக்கெல்லாம் அம்பிகை அனுமதி வழங்கினாரா? அல்லது இவர்கள் அம்பிகைக்குத் தெரியாமல் மக்களை அணிதிரள அழைத்தார்களா? என்பதற்கு அம்பிகை தான் விளக்கமளிக்க வேண்டும். சரி, இப்பொழுது இப்பத்தியின் முக்கியமான பகுதிகளில் எமது கவனத்தை செலுத்துவோம்.

 

தமிழீழத் தேசியக் கொடியாகிய புலிக்கொடி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியாகவே வெளிநாட்டவர்களால் பார்க்கப்படுகின்றது. யாராவது ஒருவர் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகளில் நடந்தாலே அவர் உடனேயே தமிழ்ப் புலியாகவே பார்க்கப்படுவார்.

 

அப்படியிருக்கும் பொழுது மக்கள் செறிந்து வாழும் பகுதி ஒன்றில், புலிக்கொடியைக் கையில் ஏந்தியவாறு பிரிட்டிஸ் காவல்துறையினரை அம்பிகையின் வீட்டின் முன்னாள் கூடி நின்ற இளைஞர்கள் சிலர் தாக்கியதைக் காவல்துறையினரும், அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய மக்களும் எப்படிப் பார்ப்பார்கள்? தமிழ்ப் புலிகள் பிரித்தானிய காவல்துறையினரைத் தாக்குகின்றார்கள் என்று தானே பார்ப்பார்கள்?

 

சரி, ஒரு சில இளைஞர்கள் சட்டத்தை மீறி நடந்தார்கள் என்று வைப்போம். வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்களை முடக்கும் வகையில் புலிக்கொடியோடு கலகம் செய்வதை எப்படிப் பிரித்தானிய மக்களும், காவல்துறையினரும் பார்ப்பார்கள்? தமிழ்ப் புலிகள் கலகம் செய்கின்றார்கள் என்று தானே அவர்கள் பார்ப்பார்கள்? இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் களங்கம் விளைவிக்கும் செய்கை அல்லவா?

 

2009ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஆனந்தபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து பிரித்தானியாவின் நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழர்கள் மேற்கொண்ட தொடர் முற்றுகைப் போராட்டத்தின் சில சந்தர்ப்பங்களில் மக்கள் வீதிகளை வழிமறித்தது உண்டு. வன்னியில் மக்கள் கொல்லப்படும் செய்திகள் வரும் பொழுது உணர்ச்சிவசப்பட்டு அப்படி மக்கள் நடந்து கொண்டார்கள் தான். ஆனாலும் வீதிகளை மறித்துப் போராடிய மக்கள் மீது பிரித்தானிய காவல்துறை தடியடிப் பிரயோகம் செய்த பொழுது, மக்கள் காவல்துறையினரைத் திருப்பித் தாக்கவில்லை. கலகம் செய்யவில்லை.

 

ஆனால் 14.03.2021 அன்று அம்பிகையின் வீட்டின் முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எல்லாமே தலைகீழாக நிகழ்ந்தது. அதுவும் கொரோனா கொல்லுயிரியின் தாக்கத்திற்கு அஞ்சி இன்றும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் வேளையில் அம்பிகையின் வீட்டின் முன் நிகழ்ந்த களபேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைப் பிரித்தானிய அரசாங்கம் நீடிப்பதற்கான காரணிகளை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா விரும்பியது. தனது விருப்பத்தை ஏலவே இந்தியா பகிரங்கமாகத் தெரிவித்தும் இருந்தது. கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? என்ற கதையாக இந்தியாவின் எதிர்ப்பார்ப்பால் புளகாங்கிதம் அடைந்திருக்கும் சிறீலங்கா அரசின் காதில் தேன் சென்று பாய்ந்ததாகவே அம்பிகையின் வீட்டின் முன் நடந்தேறிய களபேரம் அமைந்திருக்கின்றது.

 

அதுவும் அம்பிகையின் வீட்டின் முன் நடந்த இந்தக் களபேரத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புக்களின் பிரமுகர்கள் சிலர் முன்னணிப் பாத்திரம் வகித்தமை அந்த அமைப்புக்கள் பற்றிய தவறான பார்வையையும் நிச்சயம் பிரித்தானிய காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்தியிருக்கும்.

 

ஒன்றில் குறித்த நபர்களைப் பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் தத்தமது அமைப்புக்களில் இருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும். அல்லது அவர்களுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவற்றில் இரண்டில் ஒன்று நடக்கவில்லை எனில் எதிர்காலத்தில் குறித்த இரு அமைப்புக்களின் செயற்பாடுகளும் நெருக்கடிக்கு ஆளாகும் நிலை எழும்.

 

இனி ஒப்ரேசன் சாணக்கியாவின் இன்னொரு அம்சத்திற்குள் எமது கவனத்தைத் திருப்புவோம். புலம்பெயர் தேசங்களில் இடம்பெறும் எழுச்சிப் போராட்டங்களை எப்படியாவது நீர்த்துப் போகச் செய்ய வேண்டும், அவற்றுக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும், அவற்றின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும் என்பது தான் இந்தியப் புலனாய்வுத்துறையின் நோக்கம். சிங்களப் புலனாய்வுத்துறையோடு இணைந்து இதைத் தான் இந்தியப் புலனாய்வுத்துறை செய்து வருகின்றது. இதனை இப்பத்தியின் முன்னைய தொடர்களில் இப்பத்தி எழுத்தாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.

 

தனது கணவர் என்று அம்பிகை அடையாளப்படுத்திய செல்வகுமார் என்ற நபர், அவர் செய்தது ‘அரசியல் பித்தலாட்டம்’ என்றும், தான் அவரது கணவனே அல்ல என்றும், அம்பிகை ‘பொய்யோடு ஒரு போராட்டத்தை ஆரம்பித்து, ஒரு பொய்யோடு போராட்டத்தை முடித்ததனால்’ தனக்கும் களங்கம் ஏற்பட்டிருப்பதாகப் பகிரங்கமாக அறிவித்திருப்பது, அம்பிகையின் உண்ணாவிரதத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தி இருப்பதோடு, எதிர்காலத்தில் இப்படியான போராட்டங்களில் நம்பகத்தன்மை இருக்காது என்று மக்கள் கருதும் நிலையையும் தோற்றுவித்திருக்கின்றது.

 

இதைத் தான் இந்தியா விரும்பியது. இதைத் தான் சிறீலங்கா அரசும் விரும்பியது. அதற்காக இப்படியான நோக்கத்தோடு தான் அம்பிகை தனது பட்டினிப் போரைத் தொடங்கினார் என்றோ அல்லது தனது கணவர் என்று அம்பிகை அடையாளப்படுத்திய செல்வகுமார் என்ற நபர் கூறுவது எல்லாம் உண்மை என்றோ இப்பத்தி எழுத்தாளர் இங்கு குறிப்பிட முற்படவில்லை. மாறாக அம்பிகையின் போராட்டத்தின் பதினாறாவது நாளில் அவரின் வீட்டின் முன் நிகழ்ந்த களபேரமும், அதன் பின்னர் அவரது உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணங்களும் இந்திய – சிங்களப் புலனாய்வு நிறுவனங்கள் எதிர்பார்த்த பாதிப்பைத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பெருமளவில் ஏற்படுத்தியுள்ளது என்பது தான் இப்பத்தி எழுத்தாளரின் ஆதங்கமாகும்.

 

இறுதியாக அம்பிகையின் கோரிக்கைகளில் ஒன்றை முழுமையாக ஏற்றும், இன்னொன்றை பகுதியாக ஏற்றும் பிரித்தானியா பணிந்ததன் விளைவாகவே அவரது சாகும் வரையான உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக, அவரது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணைக் கும்பல் அறிவித்திருந்தது.

 

இதனால் தான் அம்பிகை தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாரா? அல்லது உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொண்டதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா? என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

 

ஆனால் அம்பிகையின் உண்ணாவிரதத்தை மையப்படுத்தித் தாம் வழிநடத்திய போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்று கூறும் ஒக்ஸ்போர்ட் மாட்டுப்பண்ணைக் கும்பலும், அவர்களுக்குப் பரிவட்டம் கட்டியவர்களும் அப்பட்டமான பொய்யை உரைத்திருப்பது தமிழீழ தாயகத்தில் உள்ள மக்களைப் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியிருக்கின்றது. இதனால் தான் அம்பிகை தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்ற தொனியில், காட்டமாகத் தனது கண்டனத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

அம்பிகை நடத்திய உண்ணாவிரதத்தின் விளைவாகப் பிரித்தானியக் காவல்துறை கொழும்பில் இறங்கி சிங்கள ஆட்சியாளர்கள் எவரையும் இழுத்துக் கொண்டு நெதர்லாந்திற்குக் கொண்டு போய் அங்குள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப் போவதில்லை. அல்லது சிங்களப் படைகளுக்கு எதிராகப் போர் தொடுத்துக் காணாமல் போகச் செய்யப்பட்ட எமது உறவுகளை பிரித்தானியப் படைகள் மீட்டுத் தமது தாய், தந்தையர், மனைவி, பிள்ளைகளிடம் ஒப்படைக்கப் போவதுமில்லை. ஏன் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்பும் தமிழீழத்தில் நடந்தேறப் போவதுமில்லை.

 

ஆக, அம்பிகையின் உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில், அறவழிப் போராட்டங்கள் மீதும், அவற்றை முன்னெடுப்போர் மீதும் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை பெருமளவில் தகர்ந்து போய் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைப் பிரித்தானியா நீடிப்பதற்கான காரணிகளும் பலப்படுத்தப்பட்டு விட்டன. தாங்கள் கடுமையாக நடந்து கொள்ளாவிட்டால் புலம்பெயர் தமிழர்களால் ஆபத்து ஏற்படும் என்று நியாயம் கற்பித்துத் தமிழீழ தாயகத்தில் சிங்கள இராணுவ அடக்குமுறை இயந்திரத்தை ராஜபக்ச சகோதரர்கள் முடுக்கி விடுவதற்கும், தாமே சிங்கள-பௌத்த இனத்தின் காவலர்கள் என்று அடையாளம் காண்பிப்பதற்குமான கதவுகளையும் இது திறந்து விட்டிருக்கின்றது.

 

இன்னும் சுருங்கக் கூறினால் இந்தியாவும், சிறீலங்காவும் தாம் நினைத்தபடி வெற்றி பெற்று விட்டன. தமிழினம் மீண்டும் ஒரு தடவை தோல்வி கண்டிருப்பதோடு நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறான சூழலைத் தோற்றுவிப்பதற்காகத் திரைமறைவில் இருந்தவாறு வினையாற்றிய இந்திய – சிங்கள உளவாளிகள் பற்றிய முழு விபரங்களையும் அடுத்து வரும் தொடர்களில் விரிவாகப் பார்ப்போம்.

(தடைகளை உடைத்துத் தொடரும்)