ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 28

செவ்வாய் பெப்ரவரி 12, 2019

இறுதி நாட்களில் காட்டிக் கொடுக்கப்பட்ட ‘ஆமி அங்கிள்’
- கலாநிதி சேரமான்

 

தமிழீழம் இனிச் சாத்தியமில்லை என்ற கோசத்தை முன்வைத்தே, கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக கே.பியும், அவருக்குப் பரிவட்டம் கட்டுவோரும் சரணாகதி அரசியலை முன்னெடுகின்றார்கள் என்பது உலகத் தமிழர்கள் அறிந்ததுதான். ஆனால் இதற்கான புறச்சூழலைத் தோற்றுவிப்பதற்கு வன்னிப் போரின் இறுதி நாட்களில் கே.பியும் அவரது கையாட்களும் காத்திரமான பாத்திரத்தை வகித்தார்கள் என்பது பலரும் அறியாதது.

 

இப்படி நடந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் என்று கே.பி பற்றியும், அவரது கையாட்கள் குறித்தும் பலருக்குப் பலவிதமான ஊகங்கள் இருந்தாலும், இவ்வாரத்; தொடரில் நாம் குறிப்பிடப் போகும் தகவல் நிச்சயம் பலருக்கு புதியதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கும்.

 

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த வரலாற்றுத் துரோகங்களில் இதனையும் ஒன்றாக நாம் பதிவு செய்தாலும் அது மிகையாகாது. ஏனென்றால் இத் துரோகம் நிகழ்ந்தது 14.05.2009 அன்று.

 

ஆம், வன்னிப் போரின் இறுதி நாட்களில் இந்தத் துரோகம் அரங்கேறியிருக்காவிட்டால் ஒரு வேளை யுத்தத்தின் போக்கே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சாதமாக மாறியிருக்கும். அந்த அளவிற்கு ஒரு முக்கிய நடவடிக்கை ஒன்றை வன்னிப் போரின் இறுதி நாட்களில் கொழும்பில் மேற்கொள்வதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினர் திட்டமிட்டிருந்தார்கள். இந் நடவடிக்கைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைமுகக் கரும்புலியையும், அவருக்குத் தேவையான கள நகர்வு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த சிங்களப் படை அதிகாரியையும் காட்டிக் கொடுத்தவர் வேறு யாருமல்ல: கே.பியின் பிரித்தானிய நிதி ஒருங்கிணைப்பாளரான கரன் என்றழைக்கப்படும் சொக்கலிங்கம் சிறீகரன் தான் அந்த இரண்டகர்.

 

..........

 

14.05.2009 காலை 10 மணி: என்றும் போல் அன்றும் பரபரப்பாகக் காணப்பட்ட கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியின் முப்பத்தேழாவது ஒழுங்கையில் உள்ள சொகுசுத் தொடர்மாடிக் குடியிருப்பு சிறீலங்கா காவல்துறை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினராலும், தேசிய புலனாய்வுத்துறையினராலும் சுற்றிவளைக்கப்படுகின்றது. கூடவே சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினர், தரைப்படை சிறப்பு அணி கொமாண்டோக்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் களமிறங்குகின்றனர்.

 

இவர்களின் இலக்கு தொடர்மாடிக் குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள வீடு. ஆனால் அந்த ஏழாவது மாடி வீட்டின் கதவை சிறீலங்கா தரைப்படையின் சிறப்பு அணி கொமாண்டோக்கள் உடைத்துக் கொண்டு நுழைந்த சில விநாடிகளில் அவ் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சாளரத்தில் இருந்து குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

 

Skyrise

அவ் வீட்டை சிங்களப் புலனாய்வாளர்கள் சல்லடை போட்டதில், நான்கு தற்கொடை வெடிகுண்டு அங்கிகள் கைப்பற்றப்படுகின்றன. கூடவே மாடியில் இருந்து குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞரின் செல்பேசியும் கைப்பற்றப்படுகின்றது. அதனை சல்லடை போட்டதில் அதில் சிங்களப் படை உயர் அதிகாரி ஒருவரது தொலைபேசி எண் காணப்படுகின்றது. அந்தப் படை அதிகாரியைக் கைது செய்வதற்குப் போதுமான ஆதாரமாக அது சிங்களப் புலனாய்வாளர்களுக்கு இருந்தது.

 

அவ் அதிகாரியின் பெயர் விக்கிரமசிங்க ஆராச்சிகே ரஞ்சித் பெரேரா. மலையகம் பதுளையைச் சேர்ந்தவர். லெப்.கேணல் தர அதிகாரியான இவர், சிறீலங்கா படையப் புலனாய்வுத்துறை மற்றும் சிறப்புப் படையணிகளில் பணிபுரிந்ததோடு, தரைப்படையின் ஐம்பத்திரண்டாவது படைப் பிரிவில் கேணல் கொமாண்டன்ற் பதவியையும் வகித்தவர். சம்பவ நாளன்று இரத்மலானை படை முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

 

வெள்ளவத்தை தொடர்மாடிக் குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குதித்துத் தனது உயிரைத் தமிழ் இளைஞர் மாய்த்துக் கொண்ட ஒன்றரை மணிநேர இடைவெளிக்குள், அதாவது சரியாக முற்பகல் 11:30 மணிக்கு, இரத்மலானை படை முகாமிற்குச் சென்ற சிறீலங்கா காவல்துறை குற்றத் தடுப்புப் பிரிவினர், லெப்.கேணல் பெரேராவை கைது செய்து பம்பலப்பிட்டியில் உள்ள சித்திரவதை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

 

..........

 

மறுநாள் தென்னிலங்கை ஊடகங்களில் பரபரப்பான தலைப்பில் செய்திகள் வெளியாகியிருந்தன. மகிந்த ராஜபக்சவைக் கொல்வதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் சிறீலங்கா தேசியப் புலனாய்வுப் பிரிவினரால் முறியடிக்கப்பட்டதாகவும், இத் திட்டத்தின் நடுநாயகமான கரும்புலி வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த கரும்புலியின் பெயர் தாமோதரம்பிள்ளை சுஜிந்திரன் என்றும், மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்தில் மாணவராகத் தன்னைப் பதிவு செய்தவாறு கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்தார் என்றும் சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

 

யுத்த களத்தில் எதிரியின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவதற்கு அல்லது எதிரியை நிலை குலைய வைப்பதற்குக் காலம் காலமாகப் போர் வியூகிகள் கையாளும் யுக்தி, எதிராளியின் தலைமையை அழிப்பது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான பெரும் படையெடுப்பிற்கு சிங்களப் படைகள் தயாராகிய பொழுது, அப் படை நடவடிக்கையின் நடுநாயகமாக நியமிக்கப்பட்ட லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவை இலக்கு வைத்து 08.08.1992 அன்று அராலியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதலை இதற்கான உதாரணமாக நாம் குறிப்பிடலாம்.

 

எனவே, சிங்கள ஆயுதப் படைகளின் தளகர்த்தாவாகிய மகிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து குறித்த மறைமுகக் கரும்புலியை தமிழீழ விடுதலைப் புலிகள் களமிறக்கியிருந்தார்கள் என்றால் அதனையிட்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தவிர சிங்கள ஊடகங்கள் குறிப்பிட்டது போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டம் நிறைவேறியிருந்தால், வன்னிப் போரின் முடிவு அப்பொழுது தலைகீழாக மாறியிருக்கக் கூடும்.

 

சரி, இப்பொழுது விடயத்திற்கு வருவோம். வெள்ளைவத்தை தொடர்மாடிக் குடியிருப்பு முற்றுகையின் பொழுது மாடியில் இருந்து குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்ட தமிழ் இளைஞரின் உடலை மட்டும் தான் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்தார்கள். அச் சம்பவத்தில் குறித்த இளைஞரின் உறவினர்கள் கைது செய்யப்பட்ட பொழுதும், அவர்கள் யாரும் அவரது இயக்கப் பின்னணி பற்றி அறிந்திருக்கவில்லை.

 

அப்படியானால், மகிந்த ராஜபக்சவை குறிவைத்து அவ் இளைஞர் இயங்கினார் என்பது அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சில மணிநேரத்தில் எப்படி சிங்கள ஊடகங்களுக்குத் தெரிய வந்தது?

 

இது பற்றிய தகவல்களை குறித்த இளைஞர் மடிந்த ஒன்றரை மணிநேரத்தில் கைது செய்யப்பட்ட லெப்.கேணல் பெரேரா வழங்கியிருக்கக் கூடும் என்று வாசகர்கள் கருதக் கூடும். ஆனால் அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை. ஏறத்தாள இரண்டு ஆண்டுகளின் பின் 12.08.2011 அன்று ஆசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில், தேசத்துரோகக் குற்றம் சுமத்தியே தன்னை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததாகவும், எனினும் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களைத் தான் நிராகரித்ததாகவும் லெப்.கேணல் பெரேரா குறிப்பிட்டிருந்தார்.

 

தன்னை முதலில் பம்பலப்பிட்டியில் உள்ள சித்திரவதைக் கூடம் ஒன்றிலும், பின்னர் தெமட்டகொடவில் உள்ள குற்றத் தடுப்புப் பிரிவிலும் வைத்து புலனாய்வாளர்கள் சித்திரவதை செய்ததாகவும், இதனைத் தொடர்ந்து துறைமுக காவல்துறை நிலையத்திலும் பின்னர் 23.06.2009 வரை கோட்டை காவல்துறை நிலையத்திலும் தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், எனினும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

இப்பொழுது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்: குறித்த மறைமுகக் கரும்புலி அடையாளம் காணப்பட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கும், அவருடன் தொடர்பில் இருந்த சிங்களப் படை அதிகாரியான லெப்.கேணல் பெரேரா கைது செய்யப்பட்டதற்கும், அவர்களின் திட்டம் பற்றி மறுநாளே சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டமைக்கும் காரணமாக இருந்தவர் வேறு ஒருவர். இச் சம்பவங்களுடன் அந்த மர்ம நபர் எவ்வாறு தொடர்புபட்டிருந்தார் என்பதை நாம் பார்ப்பதற்கு முன்னர் லெப்.கேணல் பெரோ தொடர்பான எவ்வாறான தகவல்களை சரியாக மூன்று வாரங்களின் பின்னர் 05.06.2009 அன்று வெளிவந்த சிறீலங்கா அரசின் அதிகாரபூர்வ ஆங்கில நாளேடான ‘த டெய்லி நியூஸ்’ பத்திரிகை வெளியிட்டிருந்தது என்பதைப் பார்ப்போம்.

 

..........

 

லெப்.கேணல் பெரேராவிற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்த குறியீட்டுப் பெயர் ஆமி அங்கிள். பதுளை மாவட்டம் பண்டாரவளை பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பெரும் தொகைப் பணத்தைப் பெற்று சிறீலங்கா படையினரின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்கி வந்தார்.

 

LTTE

 

2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில் கட்டளை அதிகாரியாக இவர் பணியாற்றிய பொழுது, ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் ஓரங்கமாக அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டன. இதனையடுத்துத் தனது மேலதிகாரிகளின் அனுமதியின்றி தன்னிச்சையாகவே தனது பற்றாலியனுடன் லெப்.கேணல் பெரேரா பின்வாங்கினார். இவரது இந் நடவடிக்கை தனங்கிளப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் நிலைகொள்வதற்கும், பின்னர் அங்கிருந்து யாழ் நகர எல்லையான புங்கன்குளம் வரை முன்னேறிச் செல்வதற்கும் வழிகோலியது. இதற்கான தண்டனையாக பெரேராவிற்கு கேணல் தர பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

 

அது மட்டுமல்ல. 14.02.2007 அன்று யாழ் பலாலி படைத் தளத்தில் நடைபெற இருந்த சிறீலங்கா தரைப்படைக் காலாட் படைப் பிரிவின் கவசப் படையணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சிறப்பு உலங்குவானூர்தி மூலம் அன்றைய பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் சென்ற பொழுது, பலாலி விமான ஓடுபாதையை இலக்கு வைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆட்லறி எறிகணைகள் ஏவப்பட்டன. இதனையடுத்து பலாலி படைத் தளத்தில் தரையிறங்காது மீண்டும் கொழும்புக்கு கோத்தபாயவும், பொன்சேகாவும் திரும்பினார்கள்.

 

இதன்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அச்சொட்டான எறிகணை வீச்சில் சிறீலங்கா தரைப்படைக் காலாட் படைப் பிரிவின் கவசப் படையணியின் தளபதி கேணல் ரால்ப் நுகேர படுகாயமடைந்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இத் தாக்குதலுக்குத் தேவையான தகவல்களை லெப்.கேணல் பெரேராவே வழங்கியிருந்தார் என்று ‘த டெய்லி நியூஸ்’ பத்திரிகை தெரிவித்திருந்தது. அத்தோடு யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பொழுது முகமாலையில் இருந்து சிறீலங்கா படையினர் மேற்கொள்ளவிருந்த ஒவ்வொரு படையெடுப்புகள் பற்றியும், முற்கூட்டியே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு லெப்.கேணல் பெரேரா தகவல் வழங்கியிருந்தார் என்றும் ‘த டெய்லி நியூஸ்’ நாளேடு குறிப்பிட்டிருந்தது.

 

அது மட்டுமல்ல. 2008ஆம் ஆண்டு மார்கழி மாதம் பண்டாரநாயக்கா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற தெயாத்த கிருள்ள கண்காட்சியில் சிறப்பு அதிதியாக மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார். இதே போன்று  2009 தை மாதம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் டி.எம்.தாசநாயக்கவின் உடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அங்கு மகிந்த ராஜபக்ச சென்றிருந்தார். இவ்விரு சந்தர்ப்பங்களிலும், இவ்விரு இடங்களுக்கும் தாமேதரம்பிள்ளை சுஜிந்திரன் என்ற மறைமுகக் கரும்புலியை இராணுவச் சீருடையில் லெப்.கேணல் பெரேரா அழைத்துச் சென்றிருந்தார். இவ்வாறு சுஜிந்திரனை லெப்.கேணல் பெரேரா அழைத்துச் சென்றதன் நோக்கம் மகிந்த ராஜபக்சவைக் கொல்வது என்றும், எனினும், மகிந்த ராஜபக்ச வந்திருந்த இடங்களுக்குள் நுழைவதற்கு லெப்.கேணல் பெரேரா அனுமதிக்கப்படாததால், அவரது முயற்சி கைகூடவில்லை என்றும் ‘த டெய்லி நியூஸ்’ குறிப்பிட்டிருந்தது.

 

Army Uncle

 

..........
 

 

மகிந்த ராஜபக்சவைக் கொல்வதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் வகுத்த திட்டத்திற்குத் தான் உடந்தையாக இருக்கவில்லை என்று ஏறத்தாள ஆறு ஆண்டுகளாக மறுத்த வந்த லெப்.கேணல் பெரேரா, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் 07.07.2015 அன்று ஒப்புக் கொண்டார். இது ஒப்புதல் வாக்குமூலமாக அன்றைய தினமே அவரது சட்டத்தரணியால் கொழும்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 

இதற்கு ஒரு காரணம் தொடர்ச்சியான சித்திரவதை. அதாவது லெப்.கேணல் பெரேராவின் சிறுநீரகங்களில் ஒன்று செயலிழக்கும் அளவிற்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டார். இரண்டாவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த அளவிற்கு அவர் உதவி புரிந்தார் என்பது பற்றிய முழுமையான தகவல்களை கோத்தபாய ராஜபக்சவிடம் கே.பியின் பிரித்தானிய நிதி இணைப்பாளரான கரன் என்றழைக்கப்படும் சொக்கலிங்கம் சிறீகரன் வழங்கியிருந்தார். இவை தான் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆறு ஆண்டுகள் கழித்து 2015ஆம் ஆண்டு லெப்.கேணல் பெரேரா ஒப்புக் கொள்வதற்குக் காரணங்களாகின.

 

கே.பியின் பிரித்தானிய நிதி இணைப்பாளர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்னும் இரண்டு பேரை சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் குறிவைத்தனர். ஒருவர் சிறீலங்கா தரைப்படையின் மேஜர் ஜெனரல் தர படை அதிகாரி. லெப்.கேணல் பெரேரா கைது செய்யப்பட்ட பொழுது அவர் வெளிநாடொன்றில் தங்கியிருந்ததால் தப்பித்துக் கொண்டார். மற்றையவர் ஒரு தொழிலதிபர். இந்திய வம்சாவழித் தமிழரான அவரிடம் இந்தியக் குடியுரிமையும் இருந்தது. அதாவது இலங்கை-இந்திய குடியுரிமை கொண்டிருந்தார். அவரது பெயர் இராமசாமி பிரபாகரன். லெப்.கேணல் பெரேரா கைது செய்யப்பட்ட பொழுது அவரும் வெளிநாட்டில் இருந்தார்.

 

(மடையுடைப்புத் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு (05.02.2019)

 

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27