ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள்-31 

சனி ஏப்ரல் 06, 2019

சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக- கலாநிதி சேரமான்

கொழும்பு பிரபா என்று அழைக்கப்பட்ட இராமசாமி பிரபாகரன் அவர்களைக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யுமாறு கோத்தபாய ராஜபக்ச கட்டளை பிறப்பித்தமைக்கு முக்கிய காரணம், தனது மூத்த சகோதரன் மகிந்த ராஜபக்ச மீது தாக்குதல் நடத்துவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்ற தகவலை நன்கு அறிந்திருந்தும் அதனைத் தம்மிடம் கொழும்பு பிரபா தெரிவிக்கவில்லை என்பது தான்.

அத்தோடு ஞானம்மானின் முகவர் ஒருவரை ஆமி அங்கிள் (லெப்.கேணல் விக்கிரமசிங்க ஆராச்சிகே ரஞ்சித் பெரேரா) சந்திப்பதற்கு, தமது புலனாய்வுத்துறையினருக்குத் தண்ணி காட்டி விட்டு மலேசியாவிற்கு கொழும்பு பிரபா அழைத்துச் சென்றார் என்று கே.பியின் பிரித்தானிய நிதி இணைப்பாளரான கரன் (சொக்கலிங்கம் சிறீகரன்) தெரிவித்த இன்னொரு தகவலும் கோத்தபாய ராஜபக்சவைக் கடும் சீற்றத்திற்கு ஆளாக்கியது எனலாம்.

ஆனாலும் கொழும்பு பிரபாவிற்கு எதிராகச் சட்டப்படி வழக்குத் தாக்கல் செய்வது என்பது கோத்தபாய ராஜபக்சவைப் பொறுத்த வரை முயற்கொம்பாகவே இருந்தது. இதற்குக் காரணம் தனது பிரதிவாதமாகத் தான் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் முகவராக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலரைக் காட்டிக் கொடுத்தது பற்றிய ஆதாரங்களை கொழும்பு பிரபாவின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்வைத்திருந்தார்கள்.

அதாவது மீனுக்குத் தலை, பாம்புக்கு வால் என பிரபா நடந்து கொண்டாலும், அவரது செய்கைகள் சிறீலங்கா அரசுக்குச் சாதகமாக அமைந்தன என்பதே அவரது சட்டத்தரணிகளின் வாதமாக இருந்தது.

விளைவு: 28 மாத சிறைவாசத்திற்கும், கொடூர சித்திரவதைகளுக்கும் பின்னர் 2011ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் எவ்வித நிபந்தனையும் இன்றி, குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மீளப்பெறப்பட்ட நிலையில் கொழும்பு பிரபா விடுதலை செய்யப்பட்டார்.

111

ஆனால் அத்தோடு கொழும்பு பிரபாவின் கண்டம் விலகவில்லை.சிறையில் இருந்து வெளியில் வந்ததும் அவர் எடுத்த சில நடவடிக்கைகள், அவரது உயிருக்கே உலை வைக்கும் வகையில் அமைந்தன.

.............

சில வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வாசகர்களை கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள், ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகள் பற்றி சி.ஐ.ஏயிற்குக் காட்டிக் கொடுத்துத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஆயுத வழங்கல் கட்டமைப்பை சிதறடிப்பதற்கு உடந்தையாக கே.பியும், அவரது கையாட்களும் இருந்தது பற்றிக் கே.பியின் பிடியில் இருந்தவர் கேட்ட கேள்வியால் திணறிப் போன கே.பி, அவரது கவனத்தைத் திசைதிருப்புவதற்குத் தான் உருவாக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

‘கடந்து போன சம்பவங்களை விட்டுப் போட்டு, நாங்கள் நடக்கப் போகிற விசயங்களைப் பற்றிக் கதைக்கிறது தான் பொருத்தமாக இருக்கும். நெடியவனும், ஆனந்தராஜாவும், கஸ்ரோவும் பரப்பின கதைகளை வைச்சுக் கொண்டு முடிவுகளை எடுக்காமல் எங்களுக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.’

கே.பியின் பேச்சில் கெஞ்சும் தொனி இருந்தது. தான் உருவாக்கப் போவதாக அறிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கட்டமைப்பிற்கு மாற்றீடாகப் புலம்பெயர் தேசங்களில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை என்ற கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் ஈடுபடுவதாக கே.பி அறிந்திருந்தார்.

இத்திட்டத்திற்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் ஆதரவும் இருந்தது. இந்நிலையில் தனது பக்கம் புத்திஜீவிகளைக் கவர்ந்திழுத்தாலே ஒழிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற மாயமான் புஸ்வாணமாகி விடும் என்பது கே.பி அவர்களுக்கு நன்கு புரிந்திருந்தது.

ஆனால் கே.பியின் பிடியில் இருந்தவரோ மசியவில்லை. அதே நேரத்தில் கே.பியின் வீட்டில் இருந்து தான் வெளியேறிச் செல்வதாயின் அவருடன் முரண்படுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டார்.

எனவே நழுவல் போக்குடன் கே.பியிடம் அவர் கூறினார்: ‘மற்றப் புத்திஜீவிகளும் வந்து சேரட்டும். அவையளோடு கதைச்சுப் போட்டு என்ரை முடிவை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.’
ஆனால் இந்தப் பதில் கே.பியிற்கு ஆசுவாசமளிப்பதாக இருந்தது.

................

கோத்தபாயவின் தடுப்புக் காவலில் இருந்து கொழும்பு பிரபா வெளியில் வந்ததும் செய்த முதல் வேலை, சிறீலங்கா காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த தனது வணிக நிறுவனமான பனாமா ரிறேடேர்ஸ் நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முற்பட்டது தான்.
ஆனால் சிறீலங்கா காவல்துறையினரோ மசியவில்லை. கொழும்பு பிரபா விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அவரது வணிக நிறுவனம் மீதான விசாரணைகள் நிறைவடையவில்லை என்று கூறி அவரது வணிக நிறுவனத்தை அவரிடம் மீளளிப்பதற்கு மறுத்தார்கள்.

இது விடயத்தில் சிறீலங்கா காவல்துறை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, கொழும்பு மேல் நீதிமன்றம் என்று கொழும்பு பிரபா அலைந்து திரிந்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

இறுதியில் அவரது சட்டத்தரணிகளான ரொமேஸ் டீ சில்வா, கே.எஸ்.இரட்ணவேல் ஆகியோர் வழங்கிய ஆலோசனைப்படி சிறீலங்கா உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத்தாக்கல் செய்வதற்கு கொழும்பு பிரபா முடிவு செய்தார்.

‘சொந்தச் செலவில் சூனியம் வைப்பது’ என்று தமிழில் பழமொழி ஒன்று உண்டு. தனது வணிக நிறுவனத்தை மீளப் பெறுவதற்கு சிறீலங்கா உச்ச நீதிமன்றத்தில் கொழும்பு பிரபா தாக்கல் செய்த வழக்கு அப்படித்தான் முடிந்தது.

கொழும்பு பிரபாவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கான நாளாக 13.02.2012 என்ற திகதியை சிறீலங்கா உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கை கோத்தபாய ராஜ
பக்சவால் எதிர்கொள்ள முடியாது என்றும், வழக்கின் முடிவு கொழும்பு பிரபாவுக்கு சாதமாக அமையும் என்றும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தார்கள்.

ஆனால் இப் பிரச்சினையைக் கையாள்வதற்கு கோத்தபாய ராஜபக்ச வேறு திட்டத்தை வைத்திருந்தார். அதற்கு அவர் எடுத்த ஆயுதம் வெள்ளை சிற்றூர்திக் கடத்தல்.
கொழும்பு பிரபாவின் அடிப்படை உரிமை மீறல் மனு சிறீலங்கா உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அது நடந்தது.

11.02.2012 சனிக்கிழமை மாலை 3:30 மணி.இரத்மலானை அத்துறுகிரிய பகுதிக்குத் தனது மனைவி, பிள்ளையுடன் சென்று விட்டு வெள்ளவத்தை கனல் பாங்க் வீதியில் உள்ள வீட்டிற்குத் திரும்பிய கொழும்பு பிரபா, அவரது வீட்டு வளாகத்திற்குள் தானியங்கித் துப்பாக்கிகள், வேட்டைத் துப்பாக்கிகள் சகிதம் பதுங்கியிருந்த ஏழு ஆயுததாரிகளால் மடக்கிப் பிடிக்கப்படுகின்றார்.

அவரது மனைவியும், பிள்ளையும் கதறக் கதற, அயலவர்கள் அச்சத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, கொழும்பு பிரபாவின் கழுத்தைப் பிடித்து வெள்ளை சிற்றூர்தியில் அவரைப் பலவந்தமாக ஏற்றிக் கொண்டு தெகிவளைப் பக்கமாக ஆயுததாரிகள் செல்கின்றார்கள்.
அதன் பின்னர் கொழும்பு பிரபா வீடு திரும்பவில்லை.

அதற்குப் பின்னர் அவரை அவரது மனைவியும், பிள்ளையும் பார்க்கவில்லை.
காணாமல் போகச் செய்யப்பட்டோர் பட்டியலில் அவரும் இணைகின்றார்.

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27

பாகம் - 28

பாகம் - 29

பாகம் - 30