ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 33

புதன் மே 29, 2019

புலம்பெயர் தேசங்களில் அதிக அளவு தமிழர்கள் வாழும் நாடு என்ற வகையில், கனடாவில் தான் அதிக அளவில் ஊடகங்கள் இயங்கி வருகின்றன. அதிலும் அங்குள்ள வானொலிகளினதும், பத்திரிகைகளினதும் எண்ணிக்கை இலங்கையில் இயங்குவதை விட அதிகம் என்று கூறலாம்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை அவ்வாறு இல்லை. அதிலும் 18.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழீழ நடைமுறை அரசை சிங்களம் ஆக்கிரமித்த பொழுது ஐரோப்பாவில் மூன்று முன்னணி ஊடகங்கள் மட்டுமே இயங்கி வந்தன: ஒன்று ஈழமுரசு பத்திரிகை, அடுத்தது ஐ.பி.சி - தமிழ் வானொலி, மற்றையது ஜி.ரி.வி தொலைக்காட்சி.

இம் மூன்று ஊடகங்களில் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை தமிழ்த் தேசிய ஊடகமாகச் செயற்படுவது ஈழமுரசு பத்திரிகை மட்டும் தான். இவற்றில் 02.05.2007 அன்று ரி.ரி.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கள் முடக்கப்பட்டதை அடுத்து கே.பியின் நண்பர் ஒருவரால் தரிசனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியின் மறு அவதாரமாக உதித்ததே ஜி.ரி.வி தொலைக்காட்சியாகும்.

ரி.ரி.என் ஐரோப்பாவில் தனியார் ஊடகமாக இயங்கினாலும், ஒரு தமிழ்த் தேசிய ஊடகம் என்ற வகையில் அது வன்னியில் இயங்கிய அனைத்துலகத் தொடர்பகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஊடகமாகவே செயற்பட்டு வந்தது. ரி.ரி.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கள் முடக்கப்பட்டதும் கே.பியின் நண்பரால் உருவாக்கப்பட்ட தரிசனம் தொலைக்காட்சியும் அவ்வாறே இயங்கும் என்று வன்னியில் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் அது ஜி.ரி.வி எனப் பெயர் மாற்றப்பட்ட பொழுதும் அவ்வாறான எதிர்பார்ப்பே வன்னியில் நிலவியது.

ஆனால் நடந்ததோ வேறு கதை. அனைத்துலகத் தொடர்பகத்தின் ஆளுகையின் கீழ் அதை இயக்குவதற்கு அதன் உரிமையாளர்கள் மறுத்தார்கள்: அதே நேரத்தில் தமது ஒளிபரப்புக்களுக்கான செலவுகளை அனைத்துலக தொடர்பகம் பொறுப்பேற்க வேண்டுமென எதிர்பார்த்தார்கள்.

விளைவு: ஜி.ரி.வியுடனான அதிகாரபூர்வ தொடர்புகள் அனைத்தையும் அனைத்துலக தொடர்பகம் துண்டித்துக் கொண்டது.

அவ்வேளையில் ஈழமுரசு பத்திரிகைக்கு அடுத்த படியாகத் தமிழ்த் தேசிய ஊடகம் என்ற தகுதிக்குரிய ஊடகமாக ஐ.பி.சி - தமிழ் வானொலியே இயங்கி வந்தது. அக்காலத்தில் ஐ.பி.சி - தமிழ் வானொலியின் செய்திகளை செவிமடுப்பதற்கு என்று ஒரு தனியான அபிமானிகள் வட்டமே இருந்தது. ஐ.பி.சியின் செய்திகள் தமது நேயர்களையும் எட்ட வேண்டும் என்பதற்காக கனடாவில் உள்ள வானொலிகள் அவற்றை நேரடி ஒலிபரப்பு செய்தன.

இந்த வானொலியில் 2008 ஆவணி மாதம் நிகழ்ந்த நிர்வாக மறுசீரமைப்புக்களை அடுத்து ஐ.பி.சி - தமிழ் வானொலியின் பொறுப்பாளராக முரசு என்ற பெயருடைய அனைத்துலக தொடர்பகப் போராளி நியமிக்கப்பட்டார். ரகு என்ற பெயரில் சுவிற்சர்லாந்தில் அறியப்பட்ட இவர், பின்நாட்களில் பாண்டியன், நாதன் போன்ற பெயர்களிலும் இயங்கி வந்தார். 2005ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டின் முற்பகுதி வரை அனைத்துலகத் தொடர்பகத்தின் பரப்புரைப் பொறுப்பாளராக விளங்கிய இவர், பின்னர் ரி.ரி.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கள் முடக்கப்படும் வரை அதன் பொறுப்பாளராக விளங்கினார்.

இதன் பின்னர் 2008ஆம் ஆண்டு ஆவணி மாதம் இலண்டன் வந்து ஐ.பி.சி - தமிழ் வானொலியின் பொறுப்பாளராக இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

19.05.2009 அன்று தமிழீழத் தேசியத் தலைவரின் உடல் என்று கூறி சிங்கள அரசு காணொளி ஒன்றை வெளியிட்ட நான்கு நாட்களில் 23.05.2009 அன்று ஐ.பி.சி - தமிழ் வானொலியின் கலையகத்திற்கு தொடர்பெடுத்த கே.பி, தமிழீழ தேசியத் தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்று கூறியதோடு, இதனை வானொலியின் பிரதான செய்திகளில் வெளியிடுமாறு கூறினார். ஆனால் இதனை அங்கிருந்த யாரும் ஏற்கவில்லை. இது பற்றி யுத்தத்தின் இறுதி நாட்கள் வரை ஐ.பி.சி - தமிழ் வானொலியின் தலைமை செய்தியாசிரியராகப் பணிபுரிந்த ஊடகவியலாளரிடம் முரசு என்பவர் சில நாட்கள் கழித்துக் கூறுகையில்: ‘என்னுடன் கே.பி தொடர்பு கொண்டு தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்று கூறினார். அதை ஐ.பி.சி செய்தியாக வெளியிட வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன், ‘சண்டை தீவிரமடைந்ததும் அண்ணை என்னோடு சில விடயங்களைக் கதைத்தவர். நீங்கள் மகேஸ் அண்ணையோடு கதைத்து வேலைகளைச் செய்யுங்கோ...’ என்றவர். ஆனால் கே.பி அண்ணையோடு வேலை செய்யுங்கோ என்று சொல்லவில்லை.’ இவ்வாறு முரசு கூறியது கே.பியின் முகத்தில் அடித்தாற் போல் இருந்தது. உண்மை யில் யுத்தம் தீவிரமடைந்ததும் முரசு அவர்களுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உரையாடினாரா? என்பதை எம்மால் உறுதி செய்ய முடியாது. ஏனென்றால் போர் ஓய்வுக் காலப்பகுதியில் கூட வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள் - போராளிகளுடன் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தொலைபேசி மூலம் உரையாடியது குறைவு. அதற்கு அவரது பாதுகாப்பு முக்கிய காரணமாக இருந்தது.

அதிலும் 2003ஆம் ஆண்டு பலஸ்தீனத்தின் காசா நிலப்பரப்பில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் ஒருவர் செய்கோள் தொலைபேசி ஊடாக உரையாடிக் கொண்டிருந்த பொழுது இஸ்ரேல் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து செய்கோள் தொலைபேசிகள் ஊடாக உரையாடுவதில் தலைவர் அவர்கள் மிகவும் அவதானமாகவே இருந்தார்.

இதனால் ஐ.பி.சி - தமிழ் வானொலியின் பொறுப்பாளராக இருந்த ஒருவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கூறியிருப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை தான்.

அதை விட கே.பியை தலைவராகக் கொண்டு தலைமைச் செயலகம் என்ற காகிதப்புலிக் கட்டமைப்பை சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தவாறு 21.07.2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்டத் தளபதி ராம் அவர்கள் அறிவித்த பொழுது முரசு நடந்து கொண்ட விதம்,

அவர் உண்மையில் தலைவருடன் உரையாடினாரா? என்ற சந்தேகத்தை வலுப்படுத்தக் கூடியது. ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவர் என்று கே.பியை ராம் பிரகடனம் செய்த மறுகணமே முரசு செய்த வேலை ஐ.பி.சியின் நிர்வாகத்தை தீனா எனப்படும் தனது உதவியாளரிடம் கையளித்து விட்டு சுவிற்சர்லாந்துக்குத் திரும்பிச் சென்று தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியது தான். இவ்வாறு தான் நெடியவனும் நடந்து கொண்டார். அதன் பின்னர் சத்தி என்று வணிகரிடம் ஐ.பி.சியை தீனா கைமாற்றிக் கொடுத்ததும், அது இறுதியில் லிபாரா என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாகியது வேறு கதை. ஆகவே அப்படிப்பட்ட முரசு என்பவர் இறுதி யுத்தத்தின் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்பில்லை தான். தவிர அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களையும் அண்ணை என்று தான் முரசு அழைப்பார்.

தான் வீ.மணிவண்ணன் அவர்களுடன் உரையாடியதை ‘அண்ணையுடன் உரையாடினேன்’ என்று முரசு கூற, அதனைத் தமிழீழத் தேசியத் தலைவருடன் அவர் மேற்கொண்ட உரையாடலாக கே.பி கருதியிருப்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. எது எப்படியோ, 23.05.2009 அன்று தனது முகத்தில் அறைந்தாற் போல் முரசு கூறியது, கே.பி அவர்களுக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது எனலாம். ஏனென்றால் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து கே.பி விடுத்த உண்மைக்குப் புறம்பான அறிவித்தலை அன்று ஈழமுரசு பத்திரிகை மட்டுமன்றி ஐ.பி.சி - தமிழ் வானொலியும் மீள்பிரசுரம் செய்ய மறுத்தது.

இப்படித் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற தமிழ்த் தேசிய அமைப்புக்களின் பொறுப்பாளர்கள் கே.பியுடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். இவ்வாறான பின்புலத்தில் தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கானல்நீர் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தை கே.பி கையில் எடுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் படை வலிமை சிதறடிக்கப்பட்டு, தமிழீழ நடைமுறை அரசு சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அன்றைய சூழமைவில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களையும், ஈழமுரசு, அன்றைய ஐ.பி.சி வானொலி ஆகியவற்றையும் அந்நியப்படுத்தும் நோக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கவர்ச்சி ஆயுதத்தை கே.பி கையில் எடுத்தார்.

கே.பியைப் பொறுத்தவரை தமிழீழத் தேசியத் தலைவர் என்ற பரம்பொருளை மட்டும் மனதில் நிலைநிறுத்தி விசுவாமித்திரராகத் தமிழீழ சுதந்திரத் தவமிருந்த புலம்பெயர் தமிழர்களின் மன வலிமையை சிதறடிப்பதற்கான இந்திரலோகத்து ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற சொப்பன சுந்தரிகளின் வடிவமாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தென்பட்டது.

இப்படியானதொரு கனவுலக சாம்ராச்சியத்தை தான் உருவாக்கினால் புலம்பெயர் தமிழீழ மக்களை தனது பக்கம் திருப்பி, இறுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கானல்நீர் என்று தெரிந்ததும் அவர்கள் மனமுடைந்து போகும் பொழுது தமிழீழ தேசிய சுதந்திர ஆன்மாவை உடைத்தெறியலாம் என்று கே.பி கனவு கண்டார்.

அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளையும், தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களையும் உடைப்பதற்கு இன்னுமொரு யுக்தியையும் கே.பி கையாண்டார். கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்புக்களின் பொறுப்பாளர்களுக்கு அடுத்த படியாக பணிபுரிந்தவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்து கல்விமான்கள் போன்றோருக்கு அமைச்சுப் பதவிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் வழங்குவதாக ஆசை காட்டுவதுதான் இந்த யுக்தி. இந்த யுத்தி ஒரளவு பலித்தது என்று தான் கூற வேண்டும். அதை விட பலருக்கு தனது கனவுலக அரசாங்கத்தின் ஆலோசகர்கள் பதவியையும் கே.பி வழங்கினார்.

இப்பத்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கருத்தியல் தோற்றம் பெற்றதன் பின்னணி பற்றிய இன்னுமொரு சுவாரசியமான விடயத்தையும் நாம் பதிவு செய்தாக வேண்டும். அதனை அடுத்த தொடரில் பார்க்கலாம்.
(மடையுடைப்புத் தொடரும்)