ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 34

வெள்ளி மே 31, 2019

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலக சாம்ராச்சியம் அடிப்படையில் கே.பியினதோ அன்றி உருத்திரகுமாரனினதோ மூளையத்தில் உதித்த ஒன்றல்ல. உண்மையில் இக் கனவுலக சாம்ராச்சியத்திற்கான ஆணிவேர் 31.08.1980 அன்று இலண்டனில் கிருஸ்ணா வைகுந்தவாசன் என்பவரால் நடுகை செய்யப்பட்டது. அதாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் உருவாக்கப் போவதாக 15.06.2009 அன்று கே.பி அவர்கள் அறிக்கை வெளியிடுவதற்கு இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னரே இத்திட்டத்தை கிருஸ்ணா வைகுந்தவாசன் அவர்கள் முன்வைத்தார்.

அதற்கு அவர் வைத்த பெயர் ‘நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசாங்கம்.’ ஆம், நாடுகடந்த என்பதற்குப் பதிலாக நாடுகடத்தப்பட்ட என்ற சொற்பதத்தை 1980ஆம் ஆண்டில் கிருஸ்ணா வைகுந்தவாசன் பயன்படுத்தினாரே தவிர, சாராம்சத்தில் அவர் முன்வைத்த கனவுலக சாம்ராச்சியத்திற்கும், உருத்திரகுமாரனைத் தலைவராகக் கொண்டு கே.பி உருவாக்கிய கனவுலக சாம்ராச்சியத்திற்கும் எந்த வேறுபாடும் இருக்கவில்லை.

நாடுகடத்தப்பட்ட தமிழீழத்தை அமைக்கப் போவதாக 31.08.1980 அன்று அறிக்கை வெளியிட்ட பொழுது, இன்னொரு சுவாரசியமான தகவலையும் கிருஸ்ணா வைகுந்தவாசன் வெளியிட்டார். 1982ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று சுதந்திர தமிழீழம் மலரும் என்பதுதான் அது.

ஆயுத எதிர்ப்பியக்கமாகத் தமிழீழ தேசிய சுதந்திரப் போராட்டம் முகிழ்த்திருந்த காலப் பகுதி அது. 1977 பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் ஆணை பெற்றுச் சுதந்திரத் தமிழீழம் அமைக்கப் போவதாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அரங்கேற்றிய செப்படி வித்தை சுரத்தை இழந்து போய், ஆயுதப் போராட்டமே சுதந்திரத் தமிழீழம் அமைப்பதற்கான ஒரேயயாரு வழி என்ற நிலைப்பாட்டிற்கு தமிழ் இளைஞர்கள் வந்திருந்த நிலையில், நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசாங்கத்தை அமைக்கப் போவதாக 31.08.1980 அன்று கிருஸ்ணா வைகுந்தவாசன் வெளியிட்ட அறிவித்தல், தமிழ் இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக விடுக்கப்பட்ட ஒன்றாகவே அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளால் கருதப்பட்டது.

ஆயினும் இது விடயத்தில் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதி காத்தார்கள். ஏனென்றால் நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம் எவ்வாறு 1982 தைப்பொங்கலுக்குள் சுதந்திரத் தமிழீழத்தை மலர வைக்க முடியும் என்பதை கிருஸ்ணா வைகுந்தவாசன் அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.

பின்னர் ஏறத்தாள ஓராண்டு கழித்து 14.11.1981 அன்று நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான தனது மூலோபாயத்தை கிருஸ்ணா வைகுந்தவாசன் அவர்கள் வெளியிட்ட பொழுதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மெளனத்தைக் கலைத்தார்கள்.

சுதந்திரத் தமிழீழத்தை அமைப்பதற்கு முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிருஸ்ணா வைகுந்தவாசனின் மூலோபாயம் பின்வருமாறு அமைந்திருந்தது:


(1) இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசாங்கத்தை நிறுவுவது.

(2) இவ் அரசாங்கத்தை முன்னிலைப்படுத்தி ஐ.நா. மன்றத்தில் சுதந்திரத் தமிழீழம் அமைப்பதற்கு ஆதரவு கோருவது.

(3) தமிழீழத்தை அமைப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் இடையூறு விளைவித்தால், ஐ.நா. படைகளைக் களமிறக்கி தமிழீழத்தை விடுவிப்பது.

கிருஸ்ணா வைகுந்தவாசனின் கனவுலகத் திட்டத்திற்கான பிரதிபலிப்பாக 1981 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் குழுவால் (அப்பொழுது அரசியல்துறை என்ற கட்டமைப்பு இல்லை) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அவ் அறிக்கையை எழுதிய தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிட்டார்:

‘இரத்தம் சிந்தாமல், தியாகம் செய்யாமல் விடுதலை கிடைக்கப் போவதில்லை என்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். யதார்த்தமான போராட்ட நிலைமை இப்படி இருக்கும் பொழுது ஒரு சிலர் மந்திரத்தால் மாங்காயை விழுத்தும் மாயாவாதத் திட்டங்களை முன்வைக்கிறார்கள். ஐ.நா. மூலம் காரியத்தைச் சாதித்து விடலாம்,

ஐ.நா. படைகள் வந்து நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் என்ற ரீதியில் போலி நம்பிக்கையைப் புகட்டுகிறார்கள். இப்படியான கற்பனாவாத மருட்சியில் எமது மக்களும் மருண்டு விட்டால் அவர்களைப் புரட்சிகரமான ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அணிதிரட்டுவது அசாத்தியமாகிவிடும் அல்லவா?’

கிருஸ்ணா வைகுந்தவாசன் அவர்களின் தேசப் பற்றைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மதித்தார்கள். அன்றைய காலப்பகுதியில் ஐ.நா. மன்றுக்குள் தமிழர்கள் நுழைவதென்பதோ, அங்கு இனவழிப்புப் பற்றி நான்கு வார்த்தைகள் பேசுவதோ எளிதான விடயங்கள் அல்ல. அப்படியான சூழலில் ஐ.நா. பொதுச்சபையில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான அமர்வில், சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத் போன்று பாசாங்கு செய்து, மேடையில் ஏறி சில வினாடிகள் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்த தமிழின அழிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை கிருஸ்ணா வைகுந்தவாசனுக்கு இருந்தது. அதற்காகத் தமிழ் மக்களை கனவுலகிற்குள் கொண்டு சென்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் அவர் நடந்து கொள்வதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பதற்கு அன்றைய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருக்கவில்லை.

துர்ப்பாக்கியவசமாக 15.06.2009 அன்று உருத்திரகுமாரனைத் தலைவராகக் கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கப் போவதாக கே.பி அறிவித்த பொழுது இதுவிடயத்தில் அன்று வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அமைதி காத்தார்கள்.

கே.பியும், அக்காலப் பகுதியில் சிங்களப் புலனாய்வுத்துறையின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கிய ராம், நகுலன், பிரபா, தவேந்திரன், விநாயகம் போன்றோரும் வகுத்த சதிவலையில் இவர்கள் வீழ்ந்தார்களா, அல்லது கே.பியையும், கே.பியிற்குப் பக்கபலமாக நின்ற சிங்களத்தின் ஏவலாளிகளையும் எதிர்கொள்வதற்கான திராணியற்று இவர்கள் வாளாவிருந்தார்களா? என்பதை இவர்கள் தான் பகிரங்கப்படுத்த வேண்டும்.

எது எப்படியோ, மந்திரத்தால் மாங்காயை விழுத்தும் கே.பியின் மாயாவாதத் திட்டத்தால் பலர் மருண்டு போனார்கள் என்பது தான் உண்மை. அதிலும் வன்னிப் போரில் 146,679 தமிழர்களைக் கொன்று குவித்தும், காணாமல் போகச் செய்தும் பெரும் இனவழிப்பை அரங்கேற்றிய சிங்களத்திற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று புலம்பெயர் தேசங்களில் துடித்த பலர் கே.பியின் அறிவிப்பால் மருண்டு போனார்கள்.

இது போதாதென்று கே.பியின் மாயமான் திட்டத்தை எதிர்கொள்ள முடியாத அன்றைய அனைத்துலகத் தொடர்பகப் பதில் பொறுப்பாளர் நெடியவன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் அனைத்துலகத் தொடர்பகப் போராளிகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அப்பொழுது மலேசியா சென்று கே.பியை சந்தித்த கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களிடம் தூது அனுப்பினார் (இது பற்றித் தனது நூல் ஒன்றில் கலாநிதி முருகர் குணசிங்கம் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்).

இங்கு இன்னுமொரு விடயத்தையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலக சாம்ராச்சியத்தை உருவாக்கும் கே.பியின் நயவஞ்சகத் திட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டவர்களில் கணிசமானோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். இவர்களோடு தமது பன்னாட்டு ஆயுத வழங்கல்கள் முடக்கப்பட்டமைக்குக் காரணமாக இருந்தவர்கள் என்று யுத்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சந்தேகிக்கப்பட்ட ஒரு தொகுதியினரும் இருந்தார்கள்.

‘தேட்டம்’ என்ற செயற்திட்டத்தின் கீழ் 2005ஆம் ஆண்டில் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் திரட்டப்பட்ட நிதியில் ஒரு தொகுதி இந்த இரண்டாவது தரப்பினரிடம் முதலீடாக இருந்தது. வன்னியில் யுத்தம் தீவிரமடைந்த பொழுது இந்த நிதியைப் பயன்படுத்தி புதிய படைக்கல கொள்வனவுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தாம் முதலீடு செய்த நிதி நட்டத்தில் போய் விட்டதாக இவர்களில் சிலர் கதையளந்து தமிழீழ விடுதலைப் புலிகளை ஏமாற்றினார்கள். இவ்வாறு நடந்து கொண்டவர்களில் கே.பி.ரெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிறேமரெஜி அவர்கள் முதன்மையானர் (இவரது செப்படி வித்தைகள் பற்றி ஏற்கனவே வெளிவந்த தொடர்களில் நாம் வெளிக்கொணர்ந்திருந்தோம்).

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலீடுகளை வைத்திருந்து அதனை உரிய நேரத்திற்கு வழங்காமல் அது நட்டத்தில் போய் விட்டதாக நாடகமாடியவர்கள் புலம்பெயர் தேசங்கள் அனைத்திலும் இருந்தார்கள்.

இதற்கான உதாரணமாக 2008ஆம் ஆண்டின் இறுதியில் நடந்தேறிய சம்பவம் ஒன்றை இங்கு நாம் பதிவு செய்யலாம். வன்னி மேற்கை முழுமையாகக் கைப்பற்றி, கிளிநொச்சியை ஆக்கிரமிப்பதற்கான ஆயத்தங்களில் சிங்களப் படைகள் இறங்கியிருந்த காலப்பகுதி அது. வெளிநாட்டில் இருந்து அவசரமாக எறிகணைகள் வந்து சேர்ந்தால் சிங்களப் படைகளின் முன்னேற்றத்தை தடுக்க முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் களமுனைத் தளபதிகள் பலர் 1கருதினார்கள். இதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது. இதனை செயற்படுத்தும் பொறுப்பை சிறீராம் என்ற தளபதியிடம் கடற்புலிகளின் தளபதி சூசை வழங்கினார். தளபதி சிறீராம் அவர்களும் தனக்கு வழங்கப்பட்ட பணியை நேர்த்தியாக செய்வதற்கான முழு முயற்சிகளிலும் இறங்கினார்.

ஆனால் அந்த நேரத்தில் தனது வசமிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தை உரிய நேரத்திற்கு வழங்காது ஒரு நபர் இழுத்தடித்தார். விளைவு: தளபதி சிறீராம் தலைமையில் அந்தமான் - நிக்கோபார் தீவுத் தொடர்கள் ஊடாக வன்னிக்கு எறிகணைகளைக் கொண்டு செல்லும் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நபர் யார் என்று அக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் யுத்தம் முடிவடைந்ததும் கே.பியிற்குப் பக்கபலமாக இவர் இயங்கத் தொடங்கிய பின்னர் தான் இவர் பற்றிய உண்மைகளைப் பலர் தெரிந்து கொண்டார்கள். பிரான்சில் வசிக்கும் இந்த நபரிடம் தான் கடற்புலிகளின் சொத்துக்களில் பெரும் பகுதி உள்ளது.

இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளுக்கு எதிராகக் களமாடி தளபதி சிறீராம் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். பின்னர் முள்ளிவாய்க்காலில் அவரது துணைவியார் இசைப்பிரியா சிறைப்பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் துரோகம் இழைக்கும் வகையில் நடந்து கொள்ளும் குறித்த நபர், அடிக்கடி கிளிநொச்சி சென்று கே.பியை சந்திப்பதும், பின்னர் பிரான்ஸ் திரும்பி கே.பியின் இரு கரங்களில் ஒன்றான வேலும்மயிலும் மனோகரன் என்றழைக்கப்படும் மனோ அவர்களுடன் இணைந்து தமிழ்த் தேசிய அமைப்புக்களை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.

(மடையுடைப்புத் தொடரும்)