ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 35

ஞாயிறு ஜூன் 23, 2019

கோத்தபாய களமிறக்கிய ஆட்டநாயகர்-கலாநிதி சேரமான்

மந்திரத்தால் மாங்காயை வீழ்த்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற மாயாவாத சாம்ராச்சியத்தை அமைப்பதற்கான அறிவித்தலை வெளியிட்டு தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கனவுலகிற்குள் மூழ்கடித்ததோடு கே.பி நின்றுவிடவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளையும், தமிழ்த் தேசிய அமைப்புக்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இன்னுமொரு நகர்வையும் அவர் மேற்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கக் கூடிய காகிதப்புலிக் கட்டமைப்பை உருவாக்குவது தான் கே.பியின் அந்த நகர்வு. அதற்கு முன்னோடியாக ராம், நகுலன், பிரபா, தவேந்திரன், விநாயகம், அமுதன், தயாமோகன், இராமு.சுபன், கே.பி.ரெஜி ஆகியோரை உள்ளடக்கிய நவக்கிரக செயற்குழுவை கே.பி அமைத்தார்.

இவர்களில் ராம், நகுலன், பிரபா, தவேந்திரன் ஆகியோர் கிரிதல, மின்னேரியா ஆகிய பகுதிகளில் உள்ள சிங்களப் படை முகாம்களில் இருந்தவாறு செயற்பட்டதை ஏற்கனவே வெளிவந்த தொடர்களில் வெளிக்
கொணர்ந்திருந்தோம்.

அத்தோடு தவேந்திரனின் உதவியுடன் விநாயகம் அவர்களின் குடும்பத்தினரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்து, அவர்களின் ஊடாக விநாயகத்தைத் தமது கைப்பாவையாக சிங்களப் புலனாய்வாளர்கள் மாற்றியமை பற்றியும் எமது முன்னைய தொடர்களில் பதிவு செய்திருந்தோம்.

இவர்களை விட தமிழ்நாட்டில் இந்தியப் புலனாய்வாளர்களின் கையாளாக அமுதன் இயங்கியதை நாம் வெளிக்கொணர்ந்தமையும் வாசர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவர்களை விட தயாமோகன், இராமு சுபன் ஆகியோர் மலேசியாவில் கே.பியின் இரு கரங்களாக செயற்பட்டதையும், தனது வசமிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை நிரந்தரமாகக் கபளீகரம் செய்வதற்காக கே.பியின் ஐரோப்பிய பிரதிநிதியாக கே.பி.ரெஜி மாறியதையும் எமது கடந்த தொடர்களில் அம்பலப்படுத்தியிருந்தோம்.

எதிரியைப் பணிய வைப்பதற்கு சாம, தான, பேத, தண்ட என்ற நான்கு யுக்திகள் இருப்பதாக ஏறத்தாள இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அர்த்தசாத்திரத்தில் கெளடில்யர் எழுதியிருந்தார்.

இதில் சாமம் என்பது இனிவாகவும், கனிவாகவும் எதிரியோடு பேசி மடக்குவதைக் குறிக்கும்.இந்த யுக்தியைத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளிலும், தமிழ்த் தேசிய அமைப்
புக்களிலும் பதவி மோகத்துடன் இருந்தவர்களை மடக்குவதற்கு கே.பி கையாண்டார்.

இதற்கு அடுத்த தானம் என்ற யுக்தி கையூட்டுக் கொடுப்பதற்கு (லஞ்சம்) நிகரானது. பண்டைக் காலத்தில் எதிரியை மடக்குவதற்கு எதிரிக்கு அன்பளிப்புக்களை அள்ளி வழங்கும் யுக்தி இது. இந்த யுக்தியைத் தான் இராமு.சுபன் போன்று ஆசிய நாடுகளில் தங்கியிருந்த போராளிகளின் விடயத்தில் கே.பி கையாண்டார்.

கற்கைகளை மேற்கொள்வதற்காகவும், இயக்க செயற்பாடுகளுக்காகவும் போர் ஓய்வுக் காலப்பகுதியில் தமது பொறுப்பாளர்களால் ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இவர்களில் பலர் யுத்தம் முடிவடைந்ததும் செய்வதறியாது திணறினார்கள்.

இராமு.சுபன், தயாமோகன் ஆகியோர் ஊடாக இவர்களை அணுகிய கே.பி, தனது திட்டத்திற்கு இணங்கினால் இவர்களை ஐரோப்பாவிற்கோ அன்றி கனடாவிற்கோ அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார்.

கே.பியின் இந்த யுக்தியை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள், நட்டாற்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த போராளிகளை பத்திரமாக மேற்குலக நாடுகளுக்கு அனுப்பும் நல்ல நோக்கத்துடன் கே.பி நடந்து கொண்டார் என்று கருதக்கூடும். ஆனால் கே.பி அவர்களின் நோக்கம் அவ்வாறாக இருக்கவில்லை.

ஏனெனில் ஆசிய நாடுகளில் தங்கியிருந்த போராளிகளில் பலர் தாயகம் திரும்பி மீண்டும் போராட வேண்டும் என்ற துடிப்பில் இருந்தார்கள். தாயகத்தில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்று தயாமோகன், இராமு.சுபன் ஆகியோர் ஊடாக இவர்களில் பலரை நம்ப வைத்த கே.பி, மேற்குலக நாடுகளுக்கு செல்வதற்கு இவர்களுக்கு ஆசை காட்டியதன் மூலம் இவர்களின் போர்க்குணத்தை மழுங்கடிக்க முடியும் என்று கருதினார்.இதுவே நடந்தது.

இதன்மூலம் கோத்தபாய ராஜபக்சவின் மூளையத்தில் உதித்த ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கைக்கு கே.பி கச்சிதமாக செயல்வடிவம் கொடுத்தார்.

111

கே.பி கையாண்ட கெளடில்யரின் தானம் என்ற யுக்திக்குப் பலியானோரில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் சகோதரரான லூக்காஸ் அம்மானும் ஒருவர். யுத்தம் முடிவடைந்ததும் இவரை அணுகிய கே.பி, தலைமைச் செயலகம் என்ற காகிதப்புலி அமைப்பை உருவாக்குவதற்கு தனக்கு உதவுமாறும், அவ்வாறு செய்தால் அதற்குப் பிரதியுபகாரமாக அவருக்கு தமிழீழவிடுதலைப் புலிகளின் பிரித்தானியக் கிளைப் பொறுப்பாளர் பதவியை வழங்குவதாகவும் கூறினார்.

இவ்வாறு சாம, தான யுக்திகளை மலேசியாவில் இருந்து கனக்கச்சிதமாகக் கையாண்ட கே.பியால், அதே கச்சிதத்தோடு கெளடில்யர் வகுத்த பேத, தண்ட ஆகிய இரண்டு யுக்திகளையும் கையாள முடியவில்லை. இதற்குத் தேவையான ஆட்கள் மேற்குலக நாடுகளில் கே.பியிடம் இல்லாததே காரணமாகும்.

ஆனால் இதற்கு மாற்றுத் திட்டமொன்றை ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையின் பிதாமகரான கோத்தபாய ராஜபக்ச வைத்திருந்தார்.

கோத்தபாய வகுத்திருந்த பிளான் பி எனப்படும் இத் திட்டத்தின் ஆட்டநாயகராக விநாயகம் களமிறக்கப்பட்டார். சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட விநாயகம் அவர்கள் ஏலவே உலகத் தமிழர்களால் அறியப்பட்டிருந்த ஒருவர். இவரைப் பலர் நேரில் கண்டிருக்காத பொழுதும்,

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பத்திரமாக இருப்பதாக கதிர்காமத்தம்பி அறிவழகன் என்ற பெயரில் 22.05.2009 அன்று தமிழ்நெற் இணையத்தளத்தின் ஊடாக அறிக்கை வெளியிட்டதன் மூலம் உலகத் தமிழர்களிடையே பிரபல்யமானவர் இவர்.

தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவுப் பொறுப்பாளர் என்று அறிமுகம் செய்ததன் மூலம் தான் பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் பணிபுரியும் ஒரு மூத்த தளபதி என்ற பிம்பத்தை வெளிநாடுகளில் இருந்த போராளிகளின் மத்தியிலும், உலகத்தமிழர்களிடையேயும் விநாயகம் அவர்கள் உருவகித்திருந்தார்.

கதிர்காமத்தம்பி அறிவழகன் என்ற பெயரில் 22.05.2009 அன்று தமிழ்நெற் இணையத்தளத்திற்கு விநாயகம் அவர்கள் அறிக்கை அனுப்பி வைத்ததன்  பின்னணியில் இன்னுமொரு சுவாரசியமான கதையும் உண்டு. அதை இவ்விடத்தில் சுருக்கமாகப் பதிவு செய்கிறோம். உண்மையில் அறிவழகன் என்ற பெயரில் தமிழ்நெற் இணையத்திற்கு விநாயகம் அறிக்கை அனுப்பியிருந்தாலும், இதனை எழுதியவர் அவர் அல்ல. அப்பொழுது இந்தியாவில் தங்கியிருந்த புகழேந்தி மாஸ்டர் என்பரே அதனை எழுதினார்.

பின்நாட்களில் அருணன் என்ற பெயரில் அறியப்பட்டு, புலம்பெயர் தேசங்களில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த இவரே, விநாயகம் வெளியிட்ட அறிக்கையின் நதிமூலம் ஆவார்.

இவ் அறிக்கையை தமிழ்நெற் இணையத்திற்கு விநாயகம் அனுப்பி வைத்த தருணத்தில் வவுனியா செட்டிக்குளத்தில் இயங்கிய தடுப்பு முகாம் ஒன்றில் தங்கியிருந்த விநாயகத்தின் குடும்பத்தினரை சிங்களப் புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டிருக்கவில்லை.

ஆனால் விநாயகம் அவர்கள் அறிக்கை வெளியிட்ட சில நாட்களில் தவேந்திரன் ஊடாக அவரது குடும்பத்தினரை அடையாளம் கண்ட சிங்களப் புலனாய்வாளர்கள், அவர்களைப் பணயக் கைதிகளாக்கி விநாயகத்தைத் தமது கைப்பாவையாக மாற்றினார்கள்.

அவ்வேளையில் தவேந்திரன் ஊடாக விநாயகம் அவர்களுக்கு கோத்தபாய ராஜபக்சவால் ஒரு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தலைமைச் செயலகம் என்ற காகிதப்புலிக் கட்டமைப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளையும், தமிழ்த் தேசிய அமைப்புக்களையும் கொண்டு வருவதற்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கானல்நீர் சாம்ராச்சியத்தை உருவாக்குவதற்கும் கே.பி எடுக்கும் முயற்சிகளுக்கு விநாயகம் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினால், அவரது குடும்பத்தினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தான் அந்த உத்தரவாதம்.

இது தான் விநாயகத்தை ஆட்டநாயகனாகக் கொண்டு கோத்தபாய ராஜபக்ச வகுத்த பிளான் பி. இதற்கு விநாயகம் அவர்களும் இணங்கினார்.

இதன் முதற்கட்டமாக நெடியவன் அவர்களின் தலைமையிலான அனைத்துலகத் தொடர்பகப் போராளிகளை அணுகிய விநாயகம், கே.பியின் தலைமையை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களை வற்புறுத்தினார். அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளத் தவறினால் ஏனைய போராளிகளால் அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் அந்நியப்படுத்தப்படுவார்கள் என்று விநாயகம் அவர்கள் எச்சரிக்கை செய்தார்.

அதாவது எதிரியை ஒதுக்கி வைத்து வேறுபாடு காட்டி மடக்கும் பேதம் என்ற கெளடில்யரின் யுக்தியை கனக்கச்சிதமாக விநாயகம் அவர்கள் செயற்படுத்தினார்.

அத்தோடு மட்டும் விநாயகம் அவர்கள் நின்று விடவில்லை. எதிரி மீது வன்முறைப் பிரயோகம் செய்து அடிபணிய வைக்கும் தண்டம் என்ற கெளடில்யரின் யுக்தியையும் சமநேரத்தில் விநாயகம் கையாண்டார்.
இவை பற்றி நாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன், இறுதி யுத்தத்தின் தலைவிதியை மாற்றியமைக்கக்கூடிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக தென்னிலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொழுது, வவுனியாவில் உள்ள காட்டுப்புறத்தில் விநாயகம் அவர்கள் அரங்கேற்றிய சிறுபிள்ளைத்தனமான செய்கை ஒன்றை இப்பத்தியில் நாம் பதிவு செய்வது பொருத்தமானது.
அதை அடுத்த இதழில் பார்ப்போம்.

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27

பாகம் - 28

பாகம் - 29

பாகம் - 30

பாகம் - 31

பாகம் - 32

பாகம் - 33

பாகம் -  34