ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 36

வியாழன் ஜூன் 27, 2019

கொழும்பில் ரிசாத் பதியுதீன் இறக்கிய எறிகணைகள் -கலாநிதி சேரமான்

பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த தளபதியாகத் தன்னை விநாயகம் என்றழைக்கப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி காட்டிக் கொண்டாலும், அது உண்மை அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையில் பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த தளபதி என்றால் அவர் கபில் அம்மான் மட்டும் தான்.

111

பொட்டு அம்மானின் கீழ் தமிழீழ புலனாய்வுத்துறையின் வெவ்வேறு கட்டமைப்புக்களுக்கும், வலையமைப்புக்களுக்கும் பொறுப்பாக மாதவன் மாஸ்ரர், நியூட்டன் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இவர்களை பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த தளபதிகள் என்று அழைக்கும் நடைமுறை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததில்லை.

நீண்ட காலமாக தமிழீழ புலனாய்வுத்துறையில் கனதியான பணிகளை ஆற்றி, பல வெற்றிகளின் நடுநாயகமாகத் திகழ்ந்து, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்து,05.01.2008 அன்று மன்னாரில் சிங்களப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய கேணல் சார்ள்ஸ் அவர்களைக் கூட மூத்த தளபதி என்று தமிழீழ விடுதலைப் புலிகள் விளித்தது கிடையாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கேணல் சார்ள்ஸ் அவர்களை விட பல ஆண்டுகள் வித்தியாசத்தில் இளநிலை உறுப்பினராக இணைந்து கொண்டவர் விநாயகம். யாழ் தென்மராட்சி வரணி இடைக்குறிச்சிப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட விநாயகம், 1980களில் அங்கு ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராகவும் விநாயகம் விளங்கினார்.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் காலத்தில் தென்மராட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டுதல், போராளிகளுக்கு உணவுகளை வழங்குதல், மறைவிடங்களை ஏற்பாடு செய்தல் போன்ற உதவிகளைப் புரிந்த விநாயகம், 1989ஆம் ஆண்டின் இறுதியில் தனது உறவினரும், தமிழீழ புலனாய்வுத்
துறையின் உப பிரிவு ஒன்றின் பொறுப்பாளராக விளங்கியவருமான ஞானம்மான் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

ஆனாலும் விநாயகம் அவர்களுக்குப் பெரிதாக சமர்க்கள அனுபவம் கிடையாது. அவர் ஒரு சிறந்த சண்டைக்காரரும் இல்லை.ஆனாலும் அவருக்கு வணிகர்களுடன் இருந்த தொடர்புகள் காரணமாக தென்னிலங்கைக்கான வேவு நடவடிக்கைகளுக்கு அவரைப் பயன்படுத்த பொட்டு அம்மான் முடிவு செய்தார்.

அது வரை திறமை அற்ற ஒருவராக விளங்கிய விநாயகம் அப்பொழுது தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் தமிழீழ புலனாய்வுத்துறையின் வெளிக்கள அணி ஒன்றுக்குப் பொறுப்பாக உயரும் வாய்ப்பு விநாயகம் அவர்களுக்குக் கிட்டியது.

ஆனாலும் விநாயகம் அவர்களிடம் இருந்த ஆளுமைக் குறைபாடுகள் காரணமாக அவரால் தன் கீழ் பணிபுரிந்த போராளிகளுடனோ, அன்றி ஏனைய வெளிக்களப் பிரிவு அணிகளின் பொறுப்பாளர்களுடனோ ஒத்திசைவாகப் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை.

இதற்கான உதாரணமாக 24.07.2001 அன்று கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது தமிழீழ புலனாய்வுத்துறைக் கரும்புலிகளும், தேசத்தின் புயல்கள் படையணிக் கரும்புலிகளும் இணைந்து மேற்கொண்ட கொமாண்டோ நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளின் பொழுது நிகழ்ந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடலாம்.கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீதான தாக்குதலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏறத்தாள பூர்த்தியாகியிருந்த பொழுதும், விநாயகத்தின் ஆளுமைக் குறைபாடு காரணமாக திட்டத்தில் பெரும் சறுக்கல் ஏற்படக் கூடிய அபாயம் மேலோங்கியிருந்தது.

இந்நிலையில் அப்பொழுது தென் தமிழீழத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கேணல் சார்ள்ஸ் அவர்கள் களத்தில் இறக்கப்பட்டார். இதன் மூலம் திட்டத்தில் ஏற்பட இருந்த சறுக்கல் நிவர்த்தி செய்யப்பட்டது. கட்டுநாயக்கா வான்படைத் தளமும் வெற்றிகரமாக தாக்கப்பட்டது.

111

இது பற்றி பின் நாட்களில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில்,‘‘விநாயகத்திற்கு கடிவாளம் போட்டு நட்புடன் கட்டிமேய்க்க பொருத்தமான நேரத்தில் மட்டக்களப்பில் இருந்து சார்ள்ஸ் வந்து சேர்ந்தான்.‘நீங்கள் ஏன் ஓடித் திரிகின்றீர்கள்? நான் பார்க்கிறேன் அம்மான்’என்று தாங்கினான் சார்ள்ஸ்’’என்று பொட்டு அம்மான் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அளவிற்கு ஆளுமைக் குறைபாடு மிக்கவராகவே விநாயகம் அவர்கள் விளங்கினார்.

நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரமடைந்து, தென்தமிழீழத்தை முழுமையாக ஆக்கிரமித்து, வன்னிக்குள் சிங்களப் படைகள் நகர்ந்த பொழுது, தென்னிலங்கையில் நெருடிக்கடிகளை ஏற்படுத்தி அதன் மூலம் தென்னிலங்கை நோக்கித் தனது படையணிகளை சிங்கள அரசாங்கம் பின்னகர்த்தும் வகையிலான தந்திரோபாய தாக்குதல் நடவடிக்கைகள் எவற்றையும் ஏன் அக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்தவில்லை என்று பலர் கேட்பதுண்டு.

இவ்வாறான நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்தது விநாயகம் அவர்களின் ஆளுமைக் குறைபாடு தான்.

20.04.2005 அன்று சிங்களப் புலனாய்வாளர்களால் நியூட்டன் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதன் விளைவாக தென்னிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்புக்கள் பல செயலிழந்து போயின.

இவற்றை இயங்க வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் விநாயகம் அவர்களின் ஆளுமைக் குறைபாடு காரணமாக தோல்வியுற, தென்னிலங்கையில் எதிர்பார்த்தபடி தாக்குதல்கள் எவற்றையும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ள முடியவில்லை.

இதனால் தமிழீழ புலனாய்வுத்துறையின் வெளிக்களப் பிரிவில் இருந்து நீக்கப்பட்ட விநாயகம், தமிழ்நாட்டிற்கும், வன்னி கிழக்கிற்கும் இடையிலான எரிபொருள் வழங்கல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். 28.10.2008 அன்று நாச்சிக்குடாவை சிங்களப் படைகள் கைப்பற்றும் வரை இப் பொறுப்பிலேயே விநாயகம் அவர்கள் இருந்தார்.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம். இறுதி யுத்தத்தின் தலைவிதியை மாற்றியமைக்கக்கூடிய நடவடிக்கை ஒன்றுக்காக யுத்தத்தின் இறுதி மாதங்களில் தென்னிலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொழுது, வவுனியாவில் உள்ள காட்டுப்புறத்தில் விநாயகம் அவர்கள் அரங்கேற்றிய சிறுபிள்ளைத்தனமான செய்கை பற்றி இத் தொடரில் பதிவு செய்வதாக கடந்த தொடரில் குறிப்பிட்டிருந்தோம்.

அதனை இனிப் பதிவு செய்கிறோம்.

ஆனந்தபுரம் சமர் நிகழ்வதற்கு சில நாட்களுக்கு முன்னர், அதாவது 2009 பங்குனி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நிகழ்ந்த சம்பவம் அது. விநாயகம் தலைமையில் தென்னிலங்கை நோக்கி முப்பத்து மூன்று போராளிகள் புறப்படுகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி, லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி ஆகியவற்றில் பயிற்சி பெற்ற,கள அனுபவம் மிக்க போராளிகள். இவர்களுடன் புகழேந்தி மாஸ்ரர் (விநாயகத்திற்கு அறிக்கை எழுதிய அருணன் என்றழைக்கப்படும் அவரது நண்பர்) அவர்களும், இரண்டு கடற்புலிகளும், தமிழீழ புலனாய்வுத்துறைக் கரும்புலிகள் மற்றும் சிறப்புக் கரும்புலிகளும் இருந்தார்கள்.

இவர்களுக்குத் தரப்பட்ட பணி தென்னிலங்கை சென்று, அங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சிலவற்றில் கொமாண்டோ நடவடிக்கைகள் மூலம் நிலையயடுத்து, ஆகக்கூடியது இரண்டு நாட்களாவது அவ்விடங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அங்கிருந்தவாறு தெரிவு செய்யப்பட்ட இராணுவ இலக்குகள் மீது மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வது தான்.

இந்த யுக்தி 18.10.2006 அன்று காலி தக்சின துறைமுக கடற்படைத் தளம் மீது நிகழ்த்தப்பட்ட கொமாண்டோ தாக்குதலின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளால் கையாளப்பட்டிருந்தது. தென்தமிழீழத்தில் இருந்து புறப்பட்டு,யால கடல்வழியாக ஐந்து படகுகளில் அன்று காலை 7:35 மணிக்கு காலி தக்சின துறைமுக கடற்படைத் தளத்தை எட்டிய பதினைந்து பேர் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினர், இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து தாக்குதல்களைத் தொடுத்தனர்.

அதன் பொழுது இரண்டு படகுகளில் பயணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அணியினர்,தக்சின துறைமுகக் கடலில் தரித்து நின்ற பராக்கிரமபாகு என்ற போர்க் கப்பல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நிகழ்த்தி அதனை மூழ்கடித்ததோடு,பின்னர் தரையிறங்கி அருகில் உள்ள ரமஸ்சாலா குன்றின் மீது நிலையயடுத்து அங்கிருந்தவாறு தக்சின கடற்படைத் தள எரிபொருள் குதங்கள் மீது எறிகணைகளை ஏவினார்கள்.

சமநேரத்தில் தக்சின துறைமுக கடலில் மூன்று படகுகள் சகிதம் களமிறங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றைய அணியினர், அங்கு பயணித்த சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான வேகத் தாக்குதல் கலம் ஒன்றையும், இரண்டு உட்கரை ரோந்துப் படகுகளையும் மூழ்கடித்தனர்.

இத் தாக்குதலை விடப் பல மடங்கு கனதியானதும், சிங்களப் படைகளுக்குப் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியதுமான நடவடிக்கைக்கே விநாயகம் அவர்களின் தலைமையில் முப்பத்து மூன்று போராளிகளைக் கொண்ட கொமாண்டோ அணியை 2009 பங்குனி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

இவர்களை அனுப்பி வைத்த பொழுது பின்வருமாறு பொட்டு அம்மான் கூறினாராம்:‘நீங்கள் தென்னிலங்கை சென்று தாக்குதலைத் தொடங்கும் பொழுது புதுக்குடியிருப்பை முழுமையாக எதிரி கைப்பற்றியிருக்கலாம். இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று அரசாங்கம் அறிவிக்கலாம். பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டார் என்றுகூட தகவல்கள் வரலாம்.எது நடந்தாலும் உங்களுக்கு தந்த இலக்கை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இத் தாக்குதல் நடவடிக்கைக்குத் தேவையான மோட்டார் எறிகணைகளும், எறிகணை செலுத்திகளும்,இதர ஆயுதங்களும் 2007ஆம் ஆண்டின் இறுதியில் காட்டுப் பகுதிகள் ஊடாக வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அப்பொழுது மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ரிசாத் பதியுதீன் அவர்களுக்குச் சொந்தமான வணிகப் பாரவூர்திகள் மூலம் தென்னிலங்கையில் இறக்கப்பட்டன.

இங்கு ஒரு விடயத்தை நாம் குறிப்பிட்டாக வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணைகள், எறிகணை செலுத்திகள் மற்றும் இதர ஆயுதங்களைத் தென்னிலங்கை கொண்டு செல்வதற்கு இலவசமாக ரிசாத் பதியுதீன் அவர்கள் உதவி புரியவில்லை.

இதற்கென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரிடம் இருந்து பல கோடி ரூபா பணத்தை ரிசாத் பதியுதீன் பெற்றிருந்தார். பணம் பாதாளம் வரை பாயும் என்று கூறுவதற்கு உதாரணமாகத் திகழ்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளில் ரிசாத் பதியுதீனும் ஒருவர். மற்றும்படி தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தேச சுதந்திரப் போராட்டம் மீது அவருக்கு எந்த அனுதாபமும் கிடையாது.

கடந்த சித்திரை மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும், மட்டக்களப்பிலும் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் ரிசாத் பதியுதீனுக்குத் உறவு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் கூட பண அடிப்படையிலான உறவுகளாக இருக்கலாம்.

எது எப்படியோ, ரிசாத் பதியுதீனின் உதவியுடன் கனரக ஆயுதங்களைத் தென்னிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறக்கியிருந்த நிலையில் விநாயகம் அவர்களுக்கு இருந்த ஒரேயோரு வேலை முப்பத்து மூன்று பேரைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியைப் பத்திரமாக தென்னிலங்கைக்கு கொண்டு சென்று,பொட்டு அம்மான் அவர்கள் பிறப்பித்த உத்தரவுப்படி தாக்குதல்களை நிகழ்த்துவது தான்.

இந்தத் தாக்குதலுக்குச் சென்ற விநாயகம் உட்பட எவரும் உயிருடன் திரும்பி வர முடியாது என்பது சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே தெரியும்.

இறுதி யுத்தத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய தாக்குதலாக இது கருதப்பட்டாலும்,தாக்குதலில் ஏதாவது பிசகு நிகழ்ந்தால் வன்னிக் களநிலவரத்தில் பெரிதளவு மாற்றம் ஏற்படாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இதனால் தான் என்னவோ,வவுனியாவைக் கடந்து யஹாரவுப்பொத்தானை செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி நிலையயடுத்ததும் இவர்களைத் தனது நண்பர் புகழேந்தி மாஸ்டர் தலைமையில் மறைந்திருக்குமாறும், தான் கொழும்பு சென்று அவர்களின் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு விட்டுத் திரும்பி வருவதாகக் கூறி விட்டு விநாயகம் நழுவிச் சென்றார்.

இவ்வாறு கொழும்பிற்குப் புறப்பட்ட விநாயகம் பின்னர் திரும்பி வரவேயில்லை. இதற்கிடையில் புளொட் ஒட்டுக்குழு மேற்கொண்ட பதுங்கித் தாக்குதல் ஒன்றில் புகேழந்தி மாஸ்டர் தலைமையில் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி சிக்கிக் கொள்ள,காட்டுப்புறத்தில் தங்கியிருக்க முடியாத நிலையில் வேறு மறைவிடம் ஒன்றுக்கு சிறு குழுக்களாக இவ் அணியினர் பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் வவுனியாவில் இவ் அணியைச் சேர்ந்த போராளிகளுக்கான தங்குமிட மற்றும் உணவு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்த போராளிக்கு விநாயகம் அவர்களிடம் இருந்து வணிகர் ஒருவர் ஊடாக ஒரு கூடை அப்பிள் வந்திருப்பதாக தகவல் வந்தது.

இந்த அப்பிள் கூடை விவகாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி தென்னிலங்கை செல்வதற்கான சங்கேத ஏற்பாடுகள் அல்லது தகவல்கள் இருக்கலாம் என்று கருதிய நிலையில் தமது மறைவிடத்தில் இருந்து வெளியில் சென்ற போராளி, அருகில் இருந்த ஆலயம் ஒன்றின் முன்றலில் வைத்து சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

111

விநாயகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு குறித்த போராளி சிறைப் பிடிக்கப்பட்டாரா? அல்லது விநாயகம் அனுப்பி வைத்த அப்பிள் கூடையை கொண்டு வந்த வணிகரைப் பின்தொடர்ந்து அவர் மூலம் குறித்த போராளியை சிங்களப் படைப் புலனாய்வாளர்கள் மடக்கிப் பிடித்தார்களா? என்பதை எம்மால் உறுதி செய்ய முடியாது.

எது எப்படியோ, விநாயகம் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயல் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ள இருந்த பெரும் நடவடிக்கைக்கு சாவுமணியாக அமைந்தது.

இதன் பின்னர் தென்னிலங்கை சென்று பொட்டு அம்மானின் உத்தரவுப்படி தாக்குதல்களை நிகழ்த்துவது சாத்தியமில்லை என்று கூறி,குறித்த போராளிகளைத் தத்தமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கியிருக்குமாறு உத்தரவு பிறப்பித்து விட்டு இந்தியாவிற்கு புகழேந்தி மாஸ்டர் தப்பிச் சென்றதும், யுத்தம் நிறைவடைந்த சில நாட்களில் அங்கு வைத்து விநாயகத்தை புகழேந்தி மாஸ்டர் சந்தித்ததும் வேறு கதை.

இவ்வாறு தனது சுயநலனுக்காக, தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, முப்பத்து மூன்று போராளிகளை நடுக்காட்டில் கைவிட்டுச் சென்ற விநாயகம், தனது குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காக 2009 வைகாசி 18இற்குப் பின்னர் கோத்தபாயவின் ஆட்டநாயகராக களமிறங்கியமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல தான்.

ஆனால் இதில் அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால் பேதம், தண்டம் என்ற கெளடில்யரின் யுக்திகளைக் கையாண்டு நெடியவன் தலைமையிலான அனைத்துலகத் தொடர்பகப் போராளிகளை விநாயகம் அவர்கள் மிரட்டத் தொடங்கிய பொழுது, அவர்கள் தொடை நடுங்கிகளாக மாறியது தான்.

(மடையுடைப்புத் தொடரும்) 

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27

பாகம் - 28

பாகம் - 29

பாகம் - 30

பாகம் - 31

பாகம் - 32

பாகம் - 33

பாகம் -  34

பாகம் -  35