ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள்-37

வியாழன் ஜூலை 18, 2019

தலைவரின் தீர்க்கதரிசனம்- கலாநிதி சேரமான்

தண்டம் எனப்படும் கெளடில்யரின் யுக்தியை கோத்தபாயவின் ஆட்டநாயகரான விநாயகம் அவர்கள் கையிலெடுத்த பொழுது தொடை நடுங்கிகளாக மாறிய அனைத்துலகத் தொடர்பகப் போராளிகளில் பெரும்பாலானவர்கள் இடைநிலைப் போராளிகளாக விளங்கியவர்கள்.

அனைத்துலகத் தொடர்பகப் போராளிகளில் இளநிலைப் போராளிகள் சிலர் இருந்தது உண்மைதான். உதாரணமாக ஐ.பி.சி - தமிழ் வானொலிக்குப் பொறுப்பாக இருந்த முரசு அல்லது பாண்டியன் (நாதன், ரகு போன்ற பெயர்களிலும் அறியப்பட்டவர்) இவ்வாறான இளநிலைப் போராளிகளில் ஒருவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிற்சர்லாந்து கிளையின் செயற்பாட்டாளராகப் பணிபுரிந்த இவர், 2003ஆம் ஆண்டு வன்னி சென்று ஆறு மாதங்கள் ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் போராளியாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

ஆரம்பத்தில் இவருக்கு வழங்கப்பட்ட பணி புளியங்குளம் ஊடாகப் பயணிக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு ரி.ரி.என் தொலைக்காட்சியின் அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்பனை செய்வது.

இதன் பின்னர் 2004ஆம் ஆண்டின் இறுதியில் வன்னியில் இருந்து பரப்புரைப் பணிகளுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கும்,அமெரிக்காவிற்கும் அனுப்பி வைக்கப்பட்ட இவர்,2008ஆம் ஆண்டு ஆடி மாதம் இலண்டனில் இயங்கிய ஐ.பி.சி - தமிழ் வானொலியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

எந்த விதமான போர்க்கள அனுபவமும் அற்றவர் என்ற வகையில்,கோத்தபாயவின் ஆட்டநாயகரான விநாயகம் தன்னை மிரட்டத் தொடங்கியதும்,தொடைநடுங்கியாக மாறி, ஐ.பி.சி - தமிழ் வானொலியை அதன் பினாமி பணிப்பாளர்களிடம் ஒப்படைத்து விட்டு சுவிற்சர்லாந்திற்கு இவர் தப்பியோடியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை தான்.

தவிர தனது தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இவரைக் கே.பி மிரட்டிய பொழுது,தனக்கு அவ்வாறான அறிவுறுத்தல்கள் எவையும் யுத்ததின் இறுதி நாட்களில் வன்னியில் இருந்து வழங்கப்படவில்லை என்று அசட்டுத் துணிச்சலுடன் இவர் கூறினாலும், கூலிக்குக் கொலை செய்யும் ஆட்கள் எவரையாவது ஏவி விட்டுத் தன்னைக் கே.பி கொன்று விடுவார் என்ற அச்சமும் இவருக்கு இருந்தது.

சுவிற்சர்லாந்திற்குத் தப்பியோடும் முன்னர் தன்னை சந்தித்த ஊடகவியலாளர் ஒருவரிடம் இவ்வாறு இவர் கூறினார்:

‘கே.பியரோடை டீல் வைச்சிருக்கிறதே ஆபத்து.அந்த ஆள் எவனையாவது அனுப்பி எங்களை எல்லாம் போட்டுத் தள்ளிப் போடும்.ஆனால் விநாயகம் அவர்களின் மிரட்டல்களுக்கு நெடியவன்,தூயமணி (மாறன்) போன்ற அனைத்துலகத் தொடர்பகத்தின் இடைநிலைப் போராளிகள் பலர் அஞ்சியது தான் மிகவும் அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.

இவர்களில் நெடியவன் அவர்களை அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களின் வலது கை என்று பலர் கருதினாலும் உண்மை அதுவல்ல. இளவயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட நெடியவன், அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியவராகத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் அடையாளம் காணப்பட்டு, அரசியல் விஞ்ஞானம் கற்பதற்காக மொஸ்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தவிர இவருக்குப் போர்க்கள அனுபவமும் இருந்தது. 2002ஆம் ஆண்டு 31ஆம் நாளன்று தாய்லாந்தில் தொடங்கிய இரண்டாம் சுற்றுச் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவின் உதவியாளர்கள் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவருக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட பணி, பேச்சுவார்த்தை மேசையில் பேசப்படும் விடயங்கள் பற்றித் தலைவர் அவர்களுக்குப் பிரத்தியேகமாக அறிக்கை தயாரித்துக் கொடுப்பது தான்.

இதன் பின்னர் 2003ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட பொழுது, அவற்றை மேற்பார்வை செய்வதற்காக அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் அவர்களுக்கு உதவியாக நியமிக்கப்பட்ட நெடியவன் அவர்கள் மீது, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அன்புமணி (அலெக்ஸ்) மீது வைத்திருந்த அளவு நம்பிக்கையைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வைத்திருந்தார்.  

நோர்வேயில் வசித்து வந்த பெண் செயற்பாட்டாளர் ஒருவரை 2006ஆம் ஆண்டு நெடியவன் திருமணம் செய்ய விரும்பிய பொழுது, அதற்கு முழு அனுமதி வழங்கிய தமிழீழத் தேசியத் தலைவர், இயக்க நலன்கருதி நெடியவனை நோர்வே சென்று வசிக்குமாறும் பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதாவது தனது நம்பிக்கைக்குரிய ஒருவர் ஐரோப்பிய நாடொன்றில் வசிப்பது, எதிர்காலத்தில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்ற தீர்க்கதரிசனப் பார்வையுடனேயே இப்பணிப்புரையை நெடியவனுக்குத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வழங்கியதாக அக்காலப் பகுதியில் தனக்கு நெருக்கமான செயற்பாட்டாளர்களிடம் வீ.மணிவண்ணன் அவர்கள் தெரிவித்திருந்தார்.  

இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பெரும் நம்பிக்கை வைத்து நோர்வேயிற்கு அனுப்பி வைத்த நெடியவன், கோத்தபாயவின் ஆட்டநாயகரான விநாயகத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சி, அனைத்துலகத் தொடர்பகப் பதில் பொறுப்பாளருக்கான பணிகளை உதறித் தள்ளி விட்டுத் தனது தனிப்பட்ட வாழ்வில் கவனம் செலுத்தத் தொடங்கியமை வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இக்காலப் பகுதியில் நெடியவன் அவர்களுக்கு நோர்வே காவல்துறையினரால் நெருக்கடி கொடுக்கப்பட்டது உண்மை தான்.

111

ஆனால் நோர்வேயில் இருந்தவாறு ஆயுதப் போராட்டத்தை மீளவும் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என்ற நெருக்கடிதான் இவருக்கு நோர்வீஜிய காவல்துறையினரால் கொடுக்கப்பட்டதே தவிர, அரசியல் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடக் கூடாது என்று இவர் எச்சரிக்கப்படவில்லை.

அவ்வாறு நோர்வீஜிய காவல்துறையினர் எச்சரிப்பதற்கு சட்டத்தில் இடமும் இல்லை இதே போன்றது தான் தூயமணி (மாறன்) என்பவரின் நிலையும். அரசியல் விஞ்ஞானம் கற்பதற்காக மொஸ்கோவிற்கு நெடியவன் அனுப்பி வைக்கப்பட்ட காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட தூயமணி அவர்கள்,1996ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி தொடங்கப்பட்ட பொழுது,ஆட்லறிப் பீரங்கிகளை இயக்கும் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இவரோடு மேலும் சில அனைத்துலகத் தொடர்பகப் போராளிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டு இவர்களுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியில் போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஏக காலத்தில் விசுவமடுவில் இயங்கிய கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரியில் (நாதன் முகாமின் ஒரு பகுதி) இவர்களுக்கு அரசியல், ஊடகவியல், கணினி ஆகிய துறைகளில் மூன்றாண்டு காலப் பட்டப் படிப்பும் வழங்கப்பட்டது.

இவர்களுக்கு கல்வி கற்பித்தவர்களில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், அன்பரசு (சோமஸ்கந்தன்) யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர் மு.திருநாவுக்கரசு போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவ்வாறு பெருமளவு மனித வளத்தையும், நிதி வளத்தையும் செலவு செய்து இவர்களை ஆளுமை மிக்கவர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வளர்த்தெடுத்தாலும்,இறுதியில் கோத்தபாயவின் ஆட்டநாயகரால் மிரட்டப்பட்ட பொழுது இவர்கள் தொடைநடுங்கிகளாக மாறினார்கள்.

ஆரம்பத்தில் விநாயகத்துடன் உரையாடுவதை நெடியவன் தவிர்த்தார். தனது சார்பில் விநாயகத்தின் ஆட்களுடன் பேசுமாறு தூயமணி (மாறன்) அவர்களுக்கு இவர் அதிகாரம் வழங்கினார். ஆனால் தூயமணி அவர்களால் விநாயகத்தின் மிரட்டல்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

நெடியவன் தலைமையிலான அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் ஒவ்வொருவரும் ஓடி ஒளியத் தொடங்க, இவர்களை நிரந்தரமாக செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டுவதற்கு இன்னுமொரு யுக்தியை கோத்தபாய கையில் எடுத்தார்.

சிங்கள அரசாங்கத்தின் இரட்டை முகவர்களாக இயங்கி வந்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் மூலம் கட்டாக்காலி இணையத்தளங்களைத் தொடங்க வைத்து, அவற்றில் நெடியவனின் குடும்ப உறுப்பினர்களின் நிழற்படங்களை அசிங்கமான முறையில் வடிவமைத்துப் பிரசுரித்தலும், அவர்கள் பற்றிய அவதூறான செய்திகளை அவ் இணையங்களில் வெளிவர வைப்பதும்தான் அவ் யுக்தி.

ஆனாலும் விநாயகம் அவர்களின் மிரட்டல்களுக்கு அடிபணியாத அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் சிலரும் இருக்கத்தான் செய்தார்கள். இவர்களில் ஒருவர் அப்பொழுது யேர்மனியில் இருந்தார்.

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27

பாகம் - 28

பாகம் - 29

பாகம் - 30

பாகம் - 31

பாகம் - 32

பாகம் - 33

பாகம் -  34

பாகம் -  35

பாகம் -  36