ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள்-38

சனி ஜூலை 27, 2019

கோத்தபாயவின் புதிய காய்நகர்த்தல்-கலாநிதி சேரமான்

கோத்தபாய ராஜபக்சவின் கைப்பாவையாக இயங்கிய விநாயகம் அவர்கள் விடுத்த மிரட்டல்களால் அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் பலர் தொடைநடுங்கிகளாக மாறத் தொடங்கியமையா
னது அனைத்துலகத் தொடர்பகத்தை ஆட்டம்காண வைத்தது எனக் கூறின் அது மிகையில்லை.

அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளராக விளங்கிய வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களுக்கு இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது அக் கட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சில போராளிகளுக்கு மட்டும் தான் தெரியும்.

அவ்வாறானவர்களில் முதன்மையானவர் நெடியவன். யுத்தத்தின் இறுதிக் கணங்களில் வீ.மணிவண்ணன் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர் என்ற வகையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது நெடியவனுக்கு நன்கு தெரியும்.

அப்படியிருந்தும் விநாயகத்தினதும், கே.பியினதும் மிரட்டல்களுக்கு அஞ்சி ஒரு தொடைநடுங்கியாக அவர் மாறி தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கிக் கொண்டது

புலம்பெயர் தேசங்களில் இருந்த செயற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

போராளிகள் என்பவர்கள் துறவிகள் போன்று வாழ்பவர்கள். கொண்ட கொள்கை மீதும், இலட்சியம் மீதும் மட்டும் பற்றுக் கொண்டவர்கள். குடும்பம்,ஆசாபாசம் போன்றவற்றுக்கெல்லாம் போராளிகள் மயங்குவதில்லை.

உண்மையான போராளிகளைக் கண்டு மரணமே கிலிகொள்ளும். அதனால் தான் போராளிகள் மடிந்த பின்னர் மாவீரர்களாகப் போற்றப்படுகின்றார்கள்: பூசிக்கப்படுகின்றார்கள்.ஆனால் செயற்பாட்டாளர்கள் எல்லோருமே அவ்வாறானவர்கள் அல்ல. கொண்ட கொள்கையிலும், இலட்சியத்திலும் உறுதி மிக்கவர்களாக செயற்பாட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் விளங்குவார்கள்.

ஆனால் எல்லாச் செயற்பாட்டாளர்களாலும் குடும்பம்,ஆசாபாசம் போன்றவற்றில் இருந்து விடுபட முடியாதது. அதன் காரணமாகவே அவர்களில் பலர் போராளிகளாக அல்லாமல் செயற்பாட்டாளர்களாகவே இருப்பதுண்டு.

இதன் அர்த்தம் செயற்பாட்டாளர்கள் எல்லோருமே தொடைநடுங்கிகள் என்பதல்ல. அல்லது செயற்பாட்டாளர்கள் எல்லோருமே ஆசாபாசங்களுக்குக் கட்டுண்டவர்கள் என்பதும் அல்ல. குடும்பம்,ஆசாபாசம் போன்றவற்றுக்குக் கட்டுண்டு போகாமல், மரணத்திற்கு அஞ்சாமல் இயங்கும் செயற்பாட்டாளர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இவ்வாறான செயற்பாட்டாளர்கள் மரணத்தின் பின்னர் மாவீரர்களாக மதிப்பளிக்கப்பட்டிருக்கின்றார்கள். லெப்.கேணல் நாதன், ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் போன்றவர்கள் இவ்வாறான செயற்பாட்டாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர்கள்.

எது எப்படியோ, விநாயகம், கே.பி போன்றவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சிப் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் ஒதுங்கியிருந்தால், அதனையிட்டு யாரும் அதிர்ச்சிடைந்திருக்க மாட்டார்கள். ஆனால் வெளிநாட்டுக் கிளைச் செயற்பாட்டாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டிய அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் பலர் தொடைநடுங்கிகளாக மாறிய பொழுது செய்வதறியாது செயற்பாட்டாளர்கள் பலர் திணறினார்கள்.

இவ்வாறு புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பலர் திகைத்துப் போய்த் திணறி நின்றதற்கு முக்கிய காரணம், புலம்பெயர் கட்டமைப்புக்களை சிதைவுறாமல் தக்க வைப்பதற்கான அதிகாரம் இவர்களில் பலருக்கு இருக்கவில்லை.

2003ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்களின் விளைவாக கிளைப் பொறுப்பாளர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரம் மிக்க பொறுப்புக்களை நெடியவன் தலைமையிலான தொடைநடுங்கிகளாக மாறிய அனைத்துலகத் தொடர்பகப் போராளிகளே வகித்து வந்தார்கள்.

111

இவர்கள் அனைவரும் ஒதுங்கத் தொடங்கியதும் அனைத்துலகத் தொடர்பகம் செயலிழக்கத் தொடங்கியது.

இச்சந்தர்ப்பத்தில் போராளிகள் அல்லாத செயற்பாட்டாளர்களைப் பொறுப்பாளர்களாகக் கொண்டிருந்த கிளைகள் மட்டும் இயங்கின.

ஆனாலும் சாமம், தானம், பேதம், தண்டம் ஆகிய கெளடில்யரின் யுக்திகளை கனக்கச்சிதமாகக் கையாளத் தொடங்கிய சிங்களக் கைப்பாவைகளான கே.பியும், விநாயகமும் இக் கிளைக் கட்டமைப்புக்களில் பதவி மோகம் கொண்டவர்களையும், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் மீது அதிருப்தி கொண்டிருந்த செயற்பாட்டாளர்களையும் தமது வலையில் வீழ்த்தி, இக் கிளைக் கட்டமைப்புக்களில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தத் தொடங்கினார்கள்.

போதாக்குறைக்கு விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலக சாம்ராச்சியத்தை அமைப்பதற்கான அறிவித்தலை 15.06.2009 கே.பி அவர்கள் வெளியிட்ட பொழுது, மாரீச மாயமானைக் கண்டு மதிமயங்கிப் போன ஜானகியாக புலம்பெயர் செயற்பாட்டாளர்களில் பலர் மாறினார்கள்.

போதாக்குறைக்கு, ஒரு துரும்பைக் கூட நகர்த்தாமல் தமிழீழத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்ற பட்டங்களை சூடலாம் என்ற கனவில் மிதந்த செயற்பாட்டாளர்கள் கிளைக் கட்டமைப்புக்களை உடைத்துக் கொண்டு கே.பி-விநாயகம் அணிக்கு தாவத் தொடங்கினார்கள்.

விளைவு: தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் - தமிழ்த் தேசிய அமைப்புக்களுக்குள் ஊடுருவி, அவற்றைப் பலவீனப்படுத்தி வினைத்திறனற்ற அமைப்புக்களாக மாற்றியமைக்கும் சிங்களத்தின் ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை செயல்வடிவம் பெறத் தொடங்கியது.

தொடைநடுங்கிகளாக மாறி ஓடி ஒளிந்து கொண்ட நெடியவன் தலைமையிலான அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் நினைத்திருந்தால் அனைத்துலகத் தொடர்பகக் கட்டமைப்பின் பொறுப்புக்களைத் தேசப்பற்றும், ஆளுமையும் மிக்க செயற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்து விட்டு விலகியிருக்கலாம்.

அவ்வாறு அவர்கள் செய்திருந்தால், புலம்பெயர் அரங்கில் அரசியல் ரீதியில் மிகவும் பலம் வாய்ந்த கட்டமைப்பாக அனைத்துலகத் தொடர்பகம் பரிணமிப்பதற்கு அது நிச்சயம் வழிகோலியிருக்கும்.

ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. இயக்கத்தில் இனி தான் என்ன செய்வது என்று தன்னால் முடிவெடுக்க முடியவில்லை என்று புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் முதலில் ஆதங்கப்பட்டுக் கொண்ட நெடியவன், பின்னர் சகல தொடர்புகளையும் துண்டித்து இயக்க செயற்பாடுகளில் இருந்து விலகினார்.

மறுபுறத்தில் அனைத்துலக தொடர்பகம் உறைநிலைக்குச் செல்வதாக அறிவித்து விட்டு நெடியவனின் சகாக்கள் (சக போராளிகள்) அனைவரும் ஓடி ஒளிந்து கொண்டார்கள். அப்படி ஓடி ஒளியும் பொழுது தம் வசமிருந்த இயக்கத்தின் சொத்துக்களையாவது கிளைகளிடமும், தமிழ்த் தேசிய அமைப்புக்களிடமும் ஒப்படைத்து விட்டு இவர்கள் சென்றிருக்கலாம்.

குறைந்த பட்சம் இச் சொத்துக்களை திரவப் பணமாக்கி, இறுதி யுத்தத்தில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடம் பெறப்பட்ட கடன்களையாவது உரியவர்களிடம் கிளைச் செயற்பாட்டாளர்கள் மீளளித்திருப்பார்கள்.

ஆனால் அவ்வாறு அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் செய்யவில்லை. இதனால் பெரும் கடன் சுமைக்குள் தள்ளப்பட்ட கிளைச் செயற்பாட்டாளர்கள் மீது கே.பி - விநாயகம் போன்ற சிங்களக் கைப்
பாவைகளின் ஆட்களால் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டது.

இவ்வாறு நிலைமை கையை மீறிப் போக, கே.பி - விநாயகம் போன்றவர்களோடு முரண்படுவதை விட, அவர்களுடன் முரண்படாமல் செயற்படுவது பற்றி கிளைப் பொறுப்பாளர்கள் பலர் விவாதிக்கத் தொடங்கினார்கள்.

இதன் விளைவாக ஸ்கன்டனேவிய நாடொன்றின் கிளைப் பொறுப்பாளர் ஒருவரைத் தமது பிரதிநிதியாக நியமித்து, அவரின் ஊடாக கே.பி-விநாயகம் ஆகியோரின் காகிதப் புலிக் கட்டமைப்புடன் முரண்படாது நல்லுறவைப் பேணும் நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகள் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் தள்ளப்பட்டன.

இச் சந்தர்ப்பத்தில் இதற்கு உடன்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மன் கிளைப் பொறுப்பாளராக விளங்கிய அனைத்துலகத் தொடர்பகப் போராளி ஒருவர் மறுத்தார்.

இதனையடுத்து அவரை இலங்கைக்குக் கடத்தப் போவதாக விநாயகத்தின் ஆட்கள் மிரட்டல் விடுத்தார்கள்.

சட்ட சிக்கல்களைக் கருத்திற் கொண்டு அப் போராளியின் பெயரை இப்பத்தியில் பதிவு செய்வதை நாம் தவிர்த்துக் கொள்கின்றோம்.

விநாயகத்தின் மிரட்டல்களுக்கு குறித்த போராளி அடிபணியாத பொழுதும், நெடியவன் தலைமையிலான அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் பலர் ஓடி ஒளியத் தொடங்கியமையானது, அவரையும் மெல்ல மெல்லத் தோல்வி மனப்பான்மைக்குள் இட்டுச் செல்லத் தொடங்கியது.

ஒரு சந்தர்ப்பத்தில் ‘இதுகள் எல்லாத்தையும் விட்டுப் போட்டு பேசாமல் எங்கடை வாழ்க்கையைப் பார்ப்பம்’ என்று ஐரோப்பிய நாடொன்றின் கிளைப் பொறுப்பாளர் ஒருவரிடம் அவர் கூறியதாக பின்நாட்களில் குறித்த கிளைப் பொறுப்பாளர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தோல்வி மனப்பான்மைக்குள் மூழ்கத் தொடங்கிய செயற்பாட்டாளர்கள் - போராளிகளை குறிவைத்து இன்னுமொரு காயை சிங்களம் நகர்த்தியது.யேர்மனி - சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையில் இக் காய் நகர்த்தலை சிங்களம் மேற்கொண்டது.

இக் காய் நகர்த்தலில் ஜெகத் டயஸ் அவர்களுக்கு உதவியாக துரோகி கருணாவின் மெய்ப்பாதுகாவலர் அணியின் பொறுப்பதிகாரியாக விளங்கிய சார்ஜன்ட் மேஜர் பிறேமானந்த உதலகமவை யேர்மனியில் கோத்தபாய ராஜபக்ச களமிறக்கினார்.

(மடையுடைப்புத் தொடரும்) 

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27

பாகம் - 28

பாகம் - 29

பாகம் - 30

பாகம் - 31

பாகம் - 32

பாகம் - 33

பாகம் -  34

பாகம் -  35

பாகம் -  36

பாகம் -  37