ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள்-39

வியாழன் ஓகஸ்ட் 08, 2019

கோத்தபாயவின் கஜானாவை சென்றடைந்த தமிழர் நிதி -கலாநிதி சேரமான்

புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் முன்னெடுக்கக்கூடிய அரசியல் நடவடிக்கைகள் மேற்குலக தேசங்களில் தமது ஆட்சிக்குக் களங்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் தமது அரசாங்கத்திற்கான மேற்குலகின் பொருளாதார உதவிகள் மற்றும் ஏற்றுமதி வரிச்சலுகைகளை மட்டுப்படுத்துமே தவிர, அவை ஒரு பொழுது தமிழீழ தாயகத்தை மீட்பதற்கோ, தனியரசை அமைப்பதற்கோ உதவப் போவதில்லை என்பது அன்றைய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு நன்கு தெரிந்திருந்தது.

மகிந்தரைப் பொறுத்தவரை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி தமது அரசாங்கத்திற்கான பொருண்மிய உதவிகள் மற்றும் வரிச்சலுகைகளை மேற்குலகம் மட்டுப்படுத்தினால், அவற்றுக்கு ஈடுசெய்யும் வகையில் சீனாவிடமிருந்து உதவிகளைப் பெற முடியும்.

அதனால் தான் 18.05.2009 அன்று ஆயுத மோதல்கள் முடிவடைந்ததும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் முன்னெடுத்து வந்த அரசியல் நடவடிக்கைகள் பற்றி ஆரம்பத்தில் மகிந்தர் பெரிதாக அலட்டிக் கொள்ள
வில்லை.மாறாக அவருக்கிருந்த மிகப் பெரும் அச்சம் புலம்பெயர் தேசங்களில் இருந்து ஆயுதப் போராட்டம் ஒன்று இறக்குமதி செய்யப்படலாம் என்பது தான்.

இவ்வாறு மகிந்தர் அஞ்சியதற்குப் பல காரணங்கள் இருந்தன. போர்நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் இருந்து ஆயுத மோதல்கள் நிறைவடையும் வரை புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்களால் திரட்டப்பட்ட நிதி பல நாடுகளில் வணிக முதலீடுகளாக இருந்தது.

இதனை விட போர்க்கள அனுபவம் மிக்க போராளிகள் பலரும் வெளிநாடுகளில் இருந்தார்கள். இவர்களை விட ஆயுதப் போராட்டத்தை நிறைவடைந்த இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கக் கூடிய போர்க்குணம் மிக்க இளைய தலைமுறையினரும் வெளிநாடுகளில் இருந்தார்கள்.

இந்த மூன்று சக்திகளும் ஒன்று திரட்டப்பட்டு வலுவான போராளிகள் கட்டமைப்பு ஒன்று புலம்பெயர் தேசங்களில் உருப்பெற்றால், ஈழத்தீவில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் இறக்குமதி செய்யப்படலாம் என்று மகிந்தர் அஞ்சினார்.

இதனைத் தடுத்து நிறுத்தும் தனது அண்ணனின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலேயே ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையை மகிந்தரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச தொடங்கினார்.

கே.பியை நடுநாயகமாகவும், விநாயகம் அவர்களை ஆட்டநாயகராகவும், தவேந்திரன், ராம், நகுலன், பிரபா போன்றோரைத் தனது பொம்மலாட்டத்தின் கயிறுகளை ஆட்டுவிப்போராகவும் கொண்டு கோத்தபாய தொடங்கிய இந்த எதிர்ப்புரட்சி நடவடிக்கை 2009ஆம் ஆண்டு ஆனி மாதத்தின் நடுப்பகுதியில் வெற்றிநடை போடத் தொடங்கியது.

‘தலைவருக்கு வீரவணக்கம்’ என்ற தலைப்புடன், அறிவழகன் என்ற பெயரில் 18.06.2009 அன்று விநாயகம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இதற்கான முதலாவது அறிகுறியாக அமைந்தது. அவ் அறிக்கையில் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை விநாயகம் அவர்கள் மறுத்துரைத்ததோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த படிநிலையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலகக் கானல்நீர் சாம்ராச்சியத்தையே அடையாளம் காட்டினார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கானல்நீர் கனவுலக சாம்ராச்சியம் தான் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக அமையும் என்று 15.06.2009 அன்று கே.பி அறிவித்து மூன்று நாட்களில் அதனைக் கிளிப் பிள்ளை ஒப்புவிப்பது போல் விநாயகம் அறிக்கை வெளியிட்டது தான்.

கோத்தபாயவின் எதிர்ப்புரட்சி நடவடிக்கை வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது என்பதற்கான இரண்டாவது அறிகுறி, கே.பியை தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் காகிதப்புலிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான அறிவித்தலை 21.07.2009 அன்று மின்னேரியாவில் உள்ள சிங்களப் படை முகாமில் இருந்து ராம் அவர்கள் வெளியிட்ட பொழுது தென்பட்டது.

அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் உறைநிலைக்குச் செல்வதாக அறிவித்து விட்டு நெடியவன் தலைமையிலான அனைத்துலகத் தொடர்பகப் போராளிகளில் பெரும்
பாலானவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். அத்துடன் அனைத்துலக தொடர்பகம் நிரந்தரமாகக் காணாமல் போனது

விரும்பியோ, விரும்பாமலோ, அச்சத்தின் காரணமாகவோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ கே.பியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்கள் அனைத்தும் சிங்கள அரசின் வலைக்குள் மாட்டிக் கொண்டன.

இதில் வேடிக்கை என்னவென்றால் கைது நாடகத்தை அரங்கேற்றி கொழும்புக்கு கே.பி சென்ற பின்னரும் கூட, தாம் சிங்கள அரசின் சிலந்தி வலைப்பின்னலுக்குள் சிக்கியிருப்பதைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களோ அன்றி செயற்பாட்டாளர்களோ உணர்ந்து கொள்ளவில்லை.

இதற்குக் காரணம், கே.பியின் கைது நாடகத்தைத் தொடர்ந்து அவரது காகிதப் புலிக் கட்டமைப்பிற்கான தலைமைப் பதவியை ராம் அவர்கள் ஏற்றது தான்.

தென்தமிழீழத்தின் காடுகளுக்குள் தான் மறைந்திருப்பதாக ராம் கூறிக் கொண்டாலும், அவர் மின்னேரியாவில் உள்ள சிங்களப் படை முகாமிலேயே தங்கியிருந்தார். இதனைப் புரிந்து கொள்ளாத புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் ராம் கேட்ட பொழுதெல்லாம் அவரது தொடர்பாளர்கள் ஊடாக அவருக்கு நிதியை அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

111

இந்த நிதி கோத்தபாயவின் கஜானாவை நிரப்புகின்றது என்பதோ, அன்றி இந் நிதியைப் பயன்படுத்தித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பூண்டோடு இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை சிங்களம் முன்னெடுக்கின்றது என்பதையோ புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

இக்கட்டத்தில்தான் இறுதி யுத்தத்தில் மக்களோடு மக்களாக சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து மலேசியாவிற்குத் தப்பி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகப் போராளி ஒருவரின் காதுகளுக்கு முக்கிய தகவல் ஒன்று கிட்டியது.

யாழ் தீவகப் பொறுப்பாளராக 1989ஆம் ஆண்டின் இறுதியில் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து யுத்தத்தின் இறுதி நாட்கள் வரை அவருடன் கூட இருந்தவர் இந்த போராளி. நெடியவன் உட்பட அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் பலர் தொடைநடுங்கிகளாக மாறி ஓடி ஒளிவதற்குக் காரணமாக இருந்த விநாயகம் அவர்களை, லெப்.கேணல் சுரேஸ்குமார என்ற சிங்களப் படை அதிகாரி இயக்கி வருகின்றார் என்பது தான் அந்தத் திடுக்கிடும் தகவல்.

உண்மையில் லெப்.கேணல் சுரேஸ்குமார என்ற பெயரில் குறித்த அனைத்துலகத் தொடர்பகப் போராளி அறிந்து கொண்ட நபர் சிங்களப் படை அதிகாரி அல்ல. தவேந்திரன் தான் அந்த நபர். சுமதிபால சுரேஸ்
குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட தவேந்திரன், விநாயகத்தின் குடும்பத்தினரை பணயக் கைதிகளாக வைத்திருந்த பொழுது இராணுவச் சீருடை அணிந்திருந்ததோடு, தனது சொந்தப் பெயரை சற்றுத் திரித்துத் தன்னை லெப்.கேணல் சுரேஸ்குமார என்று அறிமுகம் செய்து கொண்டார்.

எது எப்படியோ, விநாயகத்தின் குடும்பத்தினரைப் பணயக் கைதிகளாகப் பயன்படுத்தி விநாயகத்தை கோத்தபாய இயக்குகின்றார் என்ற தகவல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள்  தமிழ்த் தேசிய அமைப்புக்களின் மத்தியில் பரவத் தொடங்கிய பொழுது, இன்னுமொரு சம்பவமும் நிகழ்ந்தேறியது. ராம் அவர்களின் வலது கையான நகுலன் அவர்களுடன் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிலர் தொடர்பு கொண்ட பொழுது, அவர் மதுபோதையில் கதைப்பது போன்று உரையாடியுள்ளார்.

இதனால் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சற்று விழித்துக் கொள்ளத் தொடங்கிய பொழுது, இன்னுமொரு தவறை சிங்களம் புரிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கையை நாள்தோறும் தனக்கு அனுப்பி வைக்குமாறு வெளிநாட்டுக் கிளைகளின் இணைப்பாளராக விளங்கிய மூத்த செயற்பாட்டாளர் ஒருவரிடம் ராம் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு யார், யார் என்ன வேலைகள் செய்கின்றார்கள், அவர்களின் பெயர் விபரங்கள் என்ன என்பதைத் தனக்குத் தருமாறும் குறித்த மூத்த செயற்பாட்டாளரிடம் ராம் அவர்கள் வற்புறுத்தினார். இதனைக் கிரமமாக குறித்த மூத்த செயற்பாட்டாளர் செய்யத் தவறிய பொழுது, ‘இயக்க நடைமுறை உமக்குத் தெரியாதா?’ என்று அவரை ராம் எச்சரிக்கை செய்துமிருந்தார்.

இவ்வாறான சம்பவங்கள் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை விழிப்படைய வைக்க, கோத்தபாயவின் ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை வெற்றிநடை போட்ட மூன்று மாதங்களிலேயே ஆட்டம் காணத் தொடங்கியது.

இவ்வாறு ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையை ஆட்டம் காண வைத்ததில் வீ.மணிவண்ணன் அவர்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்து இறுதி யுத்தத்தில் மக்களோடு மக்களாக எதிரியின் கட்டுப்
பாட்டுப் பகுதிக்கு சென்று, அங்கிருந்து மலேசியாவிற்குத் தப்பிச் சென்ற அனைத்துலகத் தொடர்பகப் போராளியின் வகிபாகம் காத்திரமானது.

இவரது முயற்சியால் கே.பியின் காகிதப்புலிக் கட்டமைப்பான தலைமைச் செயலகம் என்ற சிங்களக் கைப்பாவை அமைப்பை உடைத்துக் கொண்டு வெளியில் வருவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளும், தமிழ்த் தேசிய அமைப்புக்களும் ஆயத்தமாகின.

இச் சந்தர்ப்பத்தில் தான் 18.09.2009 அன்று யேர்மனி, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கான துணைத் தூதுவராக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்களைக் கோத்தபாய அனுப்பி வைத்தார்.

சிறீலங்கா தரைப்படையின் ஐம்பத்தேழாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக விளங்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டதில் முக்கிய பாத்திரத்தை வகித்தவர்.

மக்கள் தஞ்சம் புகுந்திருந்த மோதல் தவிர்ப்பு வலயங்கள் மீது எறிகணைகளைப் பொழிந்து, பல தமிழ் உயிர்களை சிங்களப் படைகள் நரபலி வேட்டையாடியமைக்கு காரணமாக திகழ்ந்தவர்.

இவருக்குக் கொடுக்கப்பட்ட பணி, யுத்த காலத்தில் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் முக்கிய பாத்திரத்தை வகித்த போராளிகள், செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிரான வழக்குகளை அந்தந்த நாடுகளின் காவல்துறையினர் பதிவு செய்வதற்குத் தேவையான தகவல்களை வழங்குவது தான்.

கே.பி உருவாக்கிய தலைமைச் செயலகம் என்ற கட்டமைப்பிற்குள் சிறிது காலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளும், தமிழ்த் தேசிய அமைப்புக்களும் சிக்கியிருந்தமை இத் தகவலை மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்கள் இலகுவாகத் திரட்டுவதற்கு வழிகோலியது எனலாம்.

சமநேரத்தில் பேர்லினில் உள்ள சிறீலங்கா தூதுரகத்தில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்களுக்கு உதவியாகக் களமிறக்கப்பட்ட துரோகி கருணாவின் மெய்ப்பாதுகாவலர் அணியின் தலைவரான சார்ஜன் மேஜர் பிறேமானந்த உதலகம, பயண அனுமதி பெறுவதற்காகவும், கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்காகவும் தூதரகத்திற்கு வருகை தந்த தமிழர்களை தனது வலைக்குள் வீழ்த்தி அவர்களின் மூலம் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பற்றிய முக்கிய தகவல்களைத் திரட்டினார்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் சூத்திரதாரியாகக் கருதப்படும் உதலகம, பேர்லினில் உள்ள சிறீலங்கா தூதரகத்திற்கு சென்ற தமிழர்கள் பலரை மிரட்டிக் கப்பமும் பெற்றிருந்தார்.

27.11.2009 அன்று உலகெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்ற பொழுது சிங்கள அரசின் கைக்கூலிகளாக ராம், நகுலன், பிரபா ஆகியோர் இயங்குவது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் சிங்கள இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர் எழுதிக் கொடுக்க ராம் வெளியிட்ட ‘மகாவிரு’ (இப்படித் தான் அதற்கு சிங்களப் படையினர் தலைப்பிட்டிருந்தார்கள்) அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளாலும், தமிழ்த் தேசிய அமைப்புக்களாலும் நிராகரிக்கப்பட்டது.

இதேநேரத்தில் தவேந்திரனின் பொம்மலாட்டத்தில், கோத்தபாயவின் ஆட்டநாயகராக விநாயகம் இயங்குவது பற்றிய தகவல்கள் வெளிவந்திருந்தாலும், அதற்கான திண்ணியமான ஆதாரங்கள் இல்லாததால், ராம் அவர்களுக்குப் பின்னர் தலைமைச் செயலகம் என்ற காகிதப் புலிக் கட்டமைப்பின் தலைவராக விநாயகம் அவர்களால் நியமிக்கப்பட்ட இராமு சுபன் (யோகராசா முத்துவேல்) அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியில் வருவதற்குப் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பலர் பின்னடித்தார்கள்.

இதனால் 27.11.2009 அன்று நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இராமு சுபன் வெளியிட்ட காகித அறிக்கை ஒலிபரப்பப்பட்டது: சில ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

அது மட்டுமல்ல, தம்மையறியாமலேயே கோத்தபாயவின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கான நிதி இராமு சுபன் ஊடாகப் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளாலும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அக்காலப் பகுதியில் பிரித்தானியாவில் இருந்து மட்டும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால் ஏறத்தாள நான்கு இலட்சம் பவுண்கள் நிதி இராமு சுபனிடம் வழங்கப்பட்டதாக மூத்த செயற்பாட்டாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

இவ்வாறு 2009ஆம் ஆண்டு நிறைவு பெற்று 2010ஆம் ஆண்டில் தமிழர்கள் கால்பதித்த பொழுது, புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும், போராளிகளையும் கைது செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தியுற்றிருந்தன. சமநேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலகக் கானல்நீர் சாம்ராச்சியத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தன.

(மடையுடைப்புத் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27

பாகம் - 28

பாகம் - 29

பாகம் - 30

பாகம் - 31

பாகம் - 32

பாகம் - 33

பாகம் -  34

பாகம் -  35

பாகம் -  36

பாகம் -  37

பாகம் -  38