ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள்-40

புதன் ஓகஸ்ட் 21, 2019

சூரியத்தேவனின் ஒளியைப் பிரவாகிக்கும் சந்திரன்கள்- கலாநிதி சேரமான்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்குள்ளும், தமிழ்த் தேசிய அமைப்புக்களுக்குள்ளும் ஊடுருவல்களை மேற்கொண்டு, அவற்றை நிரந்தரமாக வினைத்திறனற்ற அமைப்புக்களாக மாற்றும் நோக்கத்துடனும், அதன் மூலம் புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழீழ தாயகத்தில் ஆயுதப் போராட்டம் ஒன்று இறக்குமதி செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தும் நிகழ்ச்சித் திட்டத்துடனும் கே.பி, ராம், நகுலன், விநாயகம், தவேந்திரன் போன்றோரைப் பயன்படுத்திக் கனக்கச்
சிதமான எதிர்ப்புரட்சி நடவடிக்கையை சிங்களம் முன்னெடுக்கின்றது என்பதை 2010ஆம் ஆண்டின் இறுதியில் புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களில் பலர் புரிந்து கொள்ளத் தொடங்கிய பொழுது காலம் கடந்திருந்தது.

எதிரியின் பிடியில் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பி வந்ததாகக் கூறிய முன்னாள் போராளிகள் சிலர், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்குள்ளும், தமிழ்த் தேசிய அமைப்புக்களுக்குள்ளும் திட்டமிட்டபடி பிளவுகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.

இவர்கள் உண்மையில் இந்திய - சிங்களப் புலனாய்வு நிறுவனங்களின் முகவர்கள். தவிர நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலகக் கானல்நீர் சாம்ராச்சியத்தை அமைப்பதில் தமது நேரத்தைச் செயற்பாட்டாளர்களில் பலர் வீணடித்திருந்தார்கள். இதைவிடப் போராட்ட செயற்பாடுகளுக்கு என்று 18.05.2009 இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் திரட்டப்பட்ட நிதியில் கணிசமான தொகை, கோத்தபாயவின் கஜானாவை நிரப்பியிருந்தது.

இவற்றை விடப் புலம்பெயர் தேசங்களில் தியாக உணர்வுடனும், போராளிகளுக்குரிய அர்ப்பணிப்புடனும் பணி புரிந்த செயற்பாட்டாளர்கள் பலர் நெதர்லாந்து தொடக்கம் சுவிற்சர்லாந்து வரை நிகழ்ந்தேறிய கைது நடவடிக்கைகளின் விளைவாகச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். இவர்களில் புலம்பெயர்ந்த போராளிகள் சிலரும் உள்ளடக்கப்பட்டார்கள்.

சிறைவாசம் என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் வாடிய பொழுதும் கொண்ட கொள்கையில் உறுதி தளராது தனது மக்களின் விடிவிற்காகப் போராடிய நெல்சன் மண்டேலா போன்று எல்லாப் போராளிகளாலும் இருக்க முடியாது.

இது எம்மவர்களின் விடயத்திலும் பொருந்தும். இதற்காகப் பகலில் சூரியனின் ஒளியை உள்வாங்கி, இரவில் மிளிரும் சந்திரனாக எம்மவர்களில் எவரும் இல்லை என்று கூற முடியாது. இருண்ட இன்றைய காலகட்டத்தில், சூரியத்தேவனின் ஒளியைத் தமது வீரம் மிக்க, தியாக உணர்வு செறிந்த, தன்னலமற்ற செய்கைகள் மூலம் சிறைகளில் உணர்த்திய சந்திரன்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இவ்வாறான மதியரசர்கள் புலம்பெயர் செயற்பாட்டாளர்களில் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள். காலம் இவர்களை மெளனிகளாக்கியுள்ளதே தவிர என்றோ ஒரு நாள் உண்மைகள் வெடித்தெழும் பொழுது இவர்களின் தியாகங்களும், உண்மையான செயற்பாடும் வெளியில் வந்தே தீரும்.

ஆனால் துர்ப்பாக்கியவசமாக சிறைசென்ற எல்லாப் போராளிகளும், சிறையில் இருந்து வெளியில் வந்ததும் சூரியத்தேவனின் சிந்தனை ஒளியை இருள்சூழ்ந்த இன்றைய காலகட்டத்தில் தமிழினத்திற்குப் பிரவாகிப்பவர்களாக மாறவில்லை. சிறையில் இருந்த நாட்களில் சிலரது போக்கில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கையகப்படுத்தியோருடன் இணைந்து இவர்களும் கடைசியில் சோரம் போனார்கள். தாம் கையகப்படுத்திய சொத்துக்களை தமது பிடியில் வைத்திருப்பதற்காக இவ்வாறு இவர்கள் நடந்து கொள்கின்றார்களா, அல்லது வேறு நிகழ்ச்சித் திட்டத்துடன் இவர்கள் செயற்படுகின்றார்களா? என்பது இவர்களுக்குத் தான் வெட்ட வெளிச்சம்.

எது எப்படியோ, பங்குனியிலும், புரட்டாதியிலும் ஜெனீவாவிற்குக் காவடி எடுப்பதோடும், முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள் நெருங்கும் பொழுது திவசம் கொண்டாடும் பாணியில் பேரணிகளை நடத்துவதோடும், புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பலர் வினைத்திறனற்றவர்களாக மாறியதற்கு இப்படியான நபர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தான்.

இவையயல்லாவற்றையும் கடந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளையும், தமிழ்த் தேசிய அமைப்
புக்களையும் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வினைத்திறன் மிக்க அமைப்புக்களாக மாற்றியமைத்துப் புலம்பெயர் தேசங்களில் புத்தெழுச்சியை ஏற்படுத்துவதற்கு தளபதி பரிதி முற்பட்டார்.

பிரித்தானியா, பிரான்ஸ் எனத் தொடங்கி, 2011ஆம் ஆண்டின் இறுதியில் புலம்பெயர் தேசங்களில் சிங்களக் கைக்கூலிகள் நடத்தி முடித்த போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகள் செயற்பாட்டாளர்களின் செயல்வீரியத்தில் ஏற்படுத்திய காயங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் முயற்சிகளைத் தீவிரமாகத் தளபதி பரிதி அவர்கள் மேற்கொண்டார். நிலைமையின் தார்ப்பரியத்தைப் புரிந்து கொண்ட சிங்களம் உடனடியாகவே தனது கைக்கூலிகளை ஏவி விட்டு 08.11.2012 அன்று தளபதி பரிதி அவர்களின் உயிரைப்பறித்தது.

தளபதி பரிதி அவர்களின் படுகொலை தொடர்பான குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதால் அவை பற்றி எம்மிடம் இருக்கக்கூடிய சில திடுக்கிடும் ஆதாரங்களை இப் பத்தியில் பதிவு செய்வது சாத்தியமில்லை. ஆனாலும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு உரியவர்கள், தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுத்ததும், நிச்சயம் அவற்றை உலகத் தமிழர்களுக்கு நாம் வெளிப்படுத்துவோம்.

ஆனால் தளபதி பரிதி அவர்களின் படுகொலையோடு ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை நிறைவு பெறவில்லை.

 

காலநீட்சியில் ஈழமுரசு பத்திரிகையின் பக்கம் சிங்களத்தின் கொலைக்கரங்கள் நீண்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத்தில் இருந்த கருணாவை விலைக்கு வாங்கியது போன்று, ஈழமுரசு பத்திரிகையின் நிர்வாக மட்டத்தில் இருந்த ஒரு கருணாவையும் சிங்களம் விலைக்கு வாங்கியது.

ஆயினும் சிங்களத்தின் கொலைக்கரங்களைக் கடந்து, கருணாவின் துரோகத்திற்கு நிகரான துரோகத்தை ஈழமுரசு நிறுவனத்திற்குள் அரங்கேற்றிய புலம்பெயர்ந்த கருணாவின் துரோகத்தையும் கடந்து இன்றும் ஈழமுரசு தொடர்ந்து வெளிவருகின்றது என்றால், அதற்கு சத்தியத்தின் சாட்சியாக நிற்கும் மாவீரர்களின் தியாக வரலாறு தான் காரணம்.

2014ஆம் ஆண்டு ஈழமுரசு பத்திரிகையின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட பொழுது, அதன் பாதுகாப்பை உறுதி செய்த, அது மீண்டும் வெளிவருவதற்கு வழிசமைத்த பிரெஞ்சு சட்டம் - ஒழுங்கு பேணும் தரப்பினரை இவ்விடத்தில் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

தனது தரப்பில் ஒரு துளி இரத்தமும் சிந்தாமல், சாம, தான, பேத, தண்டம் என்று கெளடில்யர் வகுத்த நான்கு பரிமாணங்களில் சிங்களம் முன்னெடுத்த ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை இப்பொழுது எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்ற கேள்வி இன்று வாசகர்களுக்கு எழலாம்.

08.01.2015 அன்று இலங்கைத் தீவில் நிகழ்ந்தேறிய அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சியோடு இந் நடவடிக்கையின் வீரியம் குறைந்து போயுள்ளது என்பதே இதற்கான சரியான பதிலாகும். இதன் அர்த்தம் ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையை மைத்திரி-ரணில் அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது என்பதல்ல. மாறாக மேற்குலகின் அரவணைப்புத் தமக்கு இருப்பதால், இந் நடவடிக்கையை வீரியத்துடன் மேற்கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படையில், கடந்த நான்கு ஆண்டு
களாக வீரியமின்றியே இதனை சிங்களம் முன்னெடுத்து வருகின்றது.

ஆயினும் இவ்வாண்டின் இறுதியில் நிகழலாம் என எதிர்பார்க்கப்படும் கோத்தபாய ராஜபக்சவின் அரியாசனமேறலுடன் மீண்டும் ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை வீரியம் பெறும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கலாம்.

எது எப்படியோ, தான் செய்வது நல்லாட்சி என்பதை சிங்கள மேட்டுக்குடியினருக்கும், மேற்குலகிற்கும் காண்பிப்பதற்காக, த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் போன்றவை தொடர்பாகத் தயக்கத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகள், ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையின் அர்த்தபரிமாணங்களை ஓரளவுக்கேனும் வெளிக்கொணர்ந்துள்ளது எனக்கூறின் அது மிகையில்லை.

இறுதிப் போரில் எதிரியிடம் சரணடைந்து எதிரியின் கைக்கூலிகளாக மாறிய தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் மூத்த உறுப்பினரான தவேந்திரன் என்றழைக்கப்படும் சுமதிபால சுரேஸ்குமார, தமிழீழ விடுதலைப் புலிகளின் தென்தமிழீழத் தளபதியாக (கேணல் தரத்தில்) விளங்கிய ராம் என்றழைக்கப்படும் எதிர்மன்னசிங்கம் ஹரிச்சந்திரன் ஆகியோர் ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையின் பொம்மலாட்ட நாயகர்களாக இயங்கியது பற்றி கடந்த முப்பத்தொன்பது தொடர்களில் நாம் வெளிக்கொணர்ந்த தகவல்களை ஒப்புவிக்கும் வகையிலான செய்தியயான்றை சிங்கள ஊடகமான டெய்லி மிரர் நாளேடு கடந்த 09.08.2019 அன்று வெளியிட்டிருந்தது கவனிக்க வேண்டியது.

அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக கருதப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைத் தமது வலையில் வீழ்த்துவதற்காக தவேந்திரனை சிறீலங்கா படையப் புலனாய்வுத்துறையினர் பயன்படுத்தினார்கள் என்பதும், இதற்கான சாட்சியாக அப்பொழுது கிரிதல படைமுகாமில் தங்கியிருந்த ராம் இருக்கின்றார் என்பதும் தான் டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பின் சாராம்சமாகும்.

ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை பற்றியும், அதனை மையப்படுத்தியும், அதன் விளைவாகவும் புலம்பெயர் தேசங்களிலும், ஏன் ஒரு விதத்தில் தமிழீழ தாயகத்திலும், அரங்கேறிய இன்னும் எத்தனையோ சம்பவங்களைப் பதிவு செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. ஆயினும் காலத்தின் தேவை கருதி அவற்றைப் பதிவு செய்வதை இப்பொழுது தவிர்த்துக் கொள்கின்றோம். ஆயினும் உண்மைகள் வெடித்தெழுவதற்கான காலம் கனியும் பொழுது அவையும் நிச்சயம் மடையுடைத்து வெளியில் வரும்.

(முதலாவது தொகுதி மடையுடைப்பு நிறைவு பெற்றது: முற்றும்)

 

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27

பாகம் - 28

பாகம் - 29

பாகம் - 30

பாகம் - 31

பாகம் - 32

பாகம் - 33

பாகம் -  34

பாகம் -  35

பாகம் -  36

பாகம் -  37

பாகம் -  38

பாகம் -  39