ஓர் இனப்படுகொலையாளியின் மரணம் 3ம் உலகப் போருக்கான தொடக்கமா?

ஞாயிறு சனவரி 12, 2020

அமெரிக்கா - ஈரான் இடையே வரலாறு காணாத நேரடி மோதலுக்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ‘அமெரிக்காவானது வளைகுடா பிராந்தியத்தை தீப்பற்றி எரிவதற்குத் தயாரான தீப்பெட்டியாக மாற்றி வருவதாக’ ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஜாவத் ஸரீப் கடந்த ஆண்டு ஓகஷ்ட் மாதம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த குற்றச்சாட்டு சரியானது என எண்ணும் அளவிற்கு நிலைமை இன்று மாறியுள்ளது.

ஈராக் தலைநகர் பக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் 2வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட, ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமானி (Qassem Soleimani  62 வயது) கொல்லப்பட்டது வளைகுடாவையும் கடந்து உலகளவில் போர்ப் பதட்டத்தை உண்டாக்கியிருக்கின்றது.

பக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3ம் திகதி அமெரிக்கப் படை நடத்திய ஆளில்லா விமான தாக்குதலிலேயே சுலைமானி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தத் தாக்குதலை இலக்குவைத்து நடத்தியது தாங்கள்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவுப்பு வெளியிட்டதுதான் உலகளவில் பெரும் பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது.

ஏனெனில் ஈரான் - அமெரிக்கா போர் என்பது உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. உலகப் பொருளாதாரத்தின் ஆணிவேரையே அசைக்கும் திறன் வளைகுடாப் பகுதிக்கே இருக்கின்றது. மத்திய கிழக்கில் ஏற்படும் போர், வளைகுடாப் பகுதியையே போர் வலையமாக மாற்றிவிடும்.

இது உலகளவில் எரிபொருளுக்கான பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிடும்.எனவே,இந்தப் படுகொலை விவகாரம் அடுத்த உலகப் போருக்கு வித்திடும் மோசமான சம்பவமாகக் கூட அமையலாம் என அஞ்சப்படுகிறது. அத்துடன்,டிரம்பின் இந்த நடவடிக்கை உலகில் இன்னொரு அணு ஆயுத நாட்டை உருவாக்குவதற்கும் வழிவகுத்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

அதேவேளை, கொல்லப்பட்ட ஜெனரல் குவாசிம் சுலைமானி ஒன்றும் அத்தனை நல்லவரில்லைத்தான். விடுதலைக்காகப் போராடும் குர்திஸ் இன மக்களின் மீது ஏராளமான படுகொலைத் தாக்குதலை நடத்தியதில் இவரது பங்கு காத்திரமானது.

ஈராக்கின் குர்திஸ் கட்டுப்பாட்டிலுள்ள அவர்களின் சொந்த மண்ணான கேர்குக் பகுதி 2017ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்படுவதற்கும்,குர்திஸ் படுகொலைகள் அதிகளவில் இடம்பெறுவதற்கும் இவர் முதன்மைக் காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அத்துடன், ஈராக்,சிரியா,லெபனானில் பல்வேறு இனக்குழுக்களை அழிப்பதிலும்,அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளிலும் இவரது மறைமுகக் கரங்கள் காத்திரமாக இருந்துள்ளன.

இனஅழிப்புப் போரில் ஈடுபட்ட சிறீலங்காவிற்கு பேருதவிகளைப் புரிந்ததில் ஈரானின் பங்கு மிகவும் காத்திரமானது.சமாதானப் பேச்சுக்களை முறித்துக்கொண்டு இனஅழிப்புப் போரை ராஜபக்ச ஆட்சியாளர்கள் மெது மெதுவாக ஆரம்பிக்கத் தொடங்கிய 2005ம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்காவிற்கு 150 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை ஈரான் வழங்கியதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

அத்துடன்,விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் (எல்லாளன் நடவடிக்கை உட்பட) ஏராளமான வான் கலங்களை இழந்துநின்ற சிறீலங்காவிற்கு, வான் படையை மீளக் கட்டியயழுப்புவதற்கு துணை நின்றதும் இதே ஈரான்தான்.

அதேவேளை, இன அழிப்புப்போர் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த 2008ம் ஆண்டு காலப்பகுதியில்  சிறீலங்காவிற்குச் சென்றிருந்த அப்போதையஈரான் ஜனாதிபதி மமூத் அகமத்நிஜாத் (MahmoudAhmadinejad)சிங்களப் பேரினவாத அரசிற்கு பல்வேறு ஆதரவுகளை வழங்கினார்.

111

இதனைவிட மகிந்தவும் அக்காலப் பகுதியில் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு உதவிகளைப் பெற்றுக்கொண்டிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையில் இனஅழிப்பில் காத்திரமான ஒருங்கிணைவு இருந்ததை இந்தச் சம்பவங்களின் போது இரு நாட்டுத் தலைவர்களும் நடந்துகொண்ட விதங்களும், எடுத்துக்கொண்ட நிழற்படங்களும் உணர்த்திநின்றன.

இறுதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழிப்பதற்காக 2009ம் ஆண்டு 52 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை ஈரான் வழங்க முன்வந்தபோதும், சர்வதேசத்தின் ஈரான் மீதான தடை காரண
மாக அப்போது அதனைச் சிறீலங்காவினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எனினும், ஈரானின் கோரிக்கைகளுக்கும் அமைவாகவுமே பாகிஸ்தான் போன்ற ஈரானின் நட்பு நாடுகள் அந்த உதவிகளை சிறீலங்காவிற்குப் புரிந்தன. ஏன் கடந்த 02.01.2020 அன்று அதாவது சுலைமானி கொல்லப்படுவதற்கு முதல்நாள் கூட, சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவை சந்தித்துத்துப் பேசிய ஈரானிய தூதுவர் ஸாயிரி அமிரனி, சிறீலங்காவின் காவல்துறையினர் மற்றும் முப்படையினருக்கு பயிற்சி வசதிகளை வழங்க ஈரான் முன்வந்துள்ளதாகத் தெரிவித்திருந்ததும் ஈரான் - சிறீலங்காவிற்கு இடையிலான நெருங்கிய நட்புக்கு ஆதாரமாகும்.

இவற்றைவிட தமிழின அழிப்பில் சுலைமானியின் ஆலோசனைகள் இருந்ததாகவும் தகவல்கள் உள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு 2008 டிசெம்பர் மாதம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய ஏழு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் குழு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தது போன்று, ஈரானின் இராணுவ ஆலோசனைகளும் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்தன.

111

இந்த ஆலோசனைகளில் முக்கிய பங்காற்றியவர்களில் தற்போது கொல்லப்பட்ட ஜெனரல் குவாசிம் சுலைமானி அடங்கியிருந்ததாகக் தெரியவருகின்றது. எனவே, தமிழின அழிப்புப் போரிலும் இவரது பங்கு இருந்திருக்கிறது

என்பது இங்கு மறுப்பதற்கில்லை. எனவே, சிறீலங்காவின் ஜனாதிபதி மற்றும் படைத் தளபதிகளைப் போன்றே இவரும் ஓர் இனப்படுகொலையாளி. ஓர் இனப்படுகொலையாளியை அழித்ததற்காக குர்திஸ் மக்களும், இனப் படுகொலையாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கும் தமிழ் மக்களைப் போன்ற இனங்களுக்கும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சியை அளிக்கலாம்.

ஆனால், இந்தப் படுகொலையால் உலகளவில் எழுந்திருக்கும் அச்சம் புறந்தள்ளத்தக்கதல்ல. மீண்டுமொரு உலகப் போருக்கு இது வித்திடுமோ என்று உலக நாடுகள் பலவும் அச்சமடைந்துள்ளன.

கொல்லப்பட்ட சுலைமானி சாதாரணமானவரல்ல. ஈரானின் மிகவும் பலம் வாய்ந்த நபராக கருதப்படுபவர். ஈரான் தலைவர் அலி கமேனியுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்.

அந்நாட்டின் கதாநாயகனாக போற்றப்படுபவர். ஈராக், லெபனான், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு படைகள், இவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டவை. சிரியாவில் உள்நாட்டு போர் வெடிப்பதற்கு முக்கிய காரணகர்த்தா இவர்தான் என்று கூறப்படுகின்றது.

1998ல் ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் (Quds Force) தளபதியாக இவர் பொறுப்பேற்றார்.

எனினும் முன்னதாக 1980ம் ஆண்டுகளில் இருந்தே மத்திய கிழக்கு போர்க் களங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். லெபனான், சிரியாவில் இவரது தலைமையில் ஈரான் ஆதரவு படைகள் செயல்பட்டு வருகின்றன.

ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு மோசமடைந்ததற்கு காரணமே இவர்தான் என அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இதனால், குத்ஸ் படையை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.

2011ல் சிரியாவின் ஜனாதிபதி பசீர் அல் ஆசாத் உள்நாட்டு மோதலில் தோல்வியடையும் நிலையேற்பட்ட
வேளை சுலைமானியின் படையணிகளே அவரை பலப்படுத்தின.

ஐ.எஸ். அமைப்பை ஆயுதக்குழுக்கள் தோற்கடிப்பதற்கும் அவை உதவின. இந்த வெற்றிகள் காரணமாக மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு அவர் காரணமாகயிருந்தார்.

ஈரானின் செல்வாக்கு மத்திய கிழக்கில் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் திணறுகின்றன.1998ல் கமேனி சுலைமானியை விசேட படைப்பிரிவின் தளபதியாக நியமித்தார், எனினும் இந்தப் பதவியை பயன்படுத்தி அவர் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனும், சிரிய அரசாங்கத்துடனும், ஈராக்கில் உள்ள சியா ஆயுதக் குழுக்களுடனும் உறவை வலுப்படுத்தினார்.

கடந்த சில வருடங்களாக சுலைமானி ஈராக், சிரியாவில் உள்ள தீவிரவாதத் தலைவர்களின் அங்கீகாரத்தை அதிகமாக பெற்றவராக மாறிவந்தார். போர்க்களங்களில் அவர் காணப்படும் படங்கள் ஊடகங்களில் அதிகளவிற்கு வெளியாகின. சுலைமானி நினைத்தால் ஈரானிலும், ஈராக்கிலும் சிரியாவிலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஈராக்கில் புதிய ஆட்சி அமைவதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் சுலைமானி நேரடியாக ஈடுபட்டவர்.
2019ல் கமேனி ஈரான் இராணுவத்திற்கான உயர் விருதை சுலைமானிக்கு வழங்கியவேளை ஈரான் இராணுவத்திற்குள் சுலைமானிக்கு உள்ள செல்வாக்கு புலனாகியது.

1979ல் இஸ்லாமிய குடியரசு வழங்கப்பட்ட பின்னர் இராணுவ அதிகாரியயாருவருக்கு அந்த பதக்கம் வழங்கப்பட்டமை அதுவே முதல்தடவை. ஈரானின் விசேட படையணியின் இரகசிய நடவடிக்கைகளிற்கும் புலனாய்வு நடவடிக்கைகளிற்கும் பொறுப்பாக விளங்கிய சுலைமானி அமெரிக்க ஜனாதிபதியை எள்ளிநகையாடி, பகிரங்க சவாலும் விடுத்தார்.

டிரம்பை சூதாட்டக்காரனான, முட்டாளாக வர்ணித்த சுலைமானி, நாங்கள் உங்களிற்கு அருகிலிருக்கின்றோம் என நினைக்காத பகுதியில் நாங்கள் உங்களிற்கு அருகில் இருக்கின்றோம் எனக் கூறியிருந்துடன், நீங்கள் யுத்தத்தை ஆரம்பிப்பீர்கள்.ஆனால் அதனை நாங்கள்தான் முடித்துவைப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

டிரம்பிற்கு இது, இவர் மீதான கடும் சினத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை கொன்ற இரத்தக்கறை படிந்த கரங்களை கொண்டவர் என சுலைமானியை அமெரிக்கா குறிவைத்தது.இவர் ஏற்கனவே கொல்லப்பட்டதாக பலமுறை வதந்திகள் வந்துள்ளன.

2006ல் ஈரானில் நடந்த விமான விபத்திலும், 2012ல் டமாஸ்கசில் நடந்த குண்டு வெடிப்பிலும் சுலைமானி கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. 2015ம் ஆண்டிலும் சிரியாவின் உள்நாட்டு போரில் சுலைமானி படுகாயமடைந்து இறந்ததாக தகவல் பரவின. ஆனால், இம்முறைதான் அவர் பலியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் மிகுந்த சக்திவாய்ந்தவராகக் கருதப்படும் ஓர் அதிகாரமிக்க நபரை அமெரிக்க படை தாக்குதல் நடத்தி கொன்றுள்ளதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

111

டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையால் அமெரிக்காவிலும் ஒரு பகுதியினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதற்கிடையே, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிகாரத்தை (Power) ) குறைக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது.

டிரம்ப்பின் தாக்குதல் முன்னெடுப்பைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா பிரநிதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வர இருக்கிறார்கள். அதன்படி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், போரை தடுக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது டிரம்பிற்கு இராணுவத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுமையாக இருக்கிறது. அதை குறைத்து, அவர் கொங்கிரஸ் அவையின் கட்டுப்பாடு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள்.

அதாவது கொங்கிரஸ் அவை அனுமதிக்காமல் அவரால் இராணுவத்திற்கு ஆணைகளை பிறப்பிக்க முடியாது. இதற்கான தீர்மானத்தை விரைவாக தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், மத்திய கிழக்கிற்கு மேலும் படைகளை அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர், ஈரானின் வரலாற்றுச் சின்னங்களையும் தாக்கி அழிப்போம் என்று எச்சரித்துள்ளார்.

டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு சர்வதேச ஒருமைப்பாட்டைப் பேணும் அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கு பாடம் புகட்டவேண்டும் என்ற டிரம்பின் போர் வெறியும், சுலைமானிக்காக பழி வாங்கவேண்டும் என்ற ஈரானின் கொலை வெறியும் மத்திய கிழக்கில் பேரழிவை ஏற்படுத்தப்போகின்றது என்பது மறுப்பதற்கில்லை.

அவ்வாறு போர் மூண்டால் அது ஏனைய நாடுகளுக்கும் பரவும் என்ற பேரச்சம் எழுந்துள்ளது. காரணம் ஈரானுக்கு எதிரான இந்தப் போரை தமக்கான வாய்ப்பாக ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய பாயங்கரவாத இயக்கங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, போர் வெடிப்பதற்கு முன்பாகவே, இந்தத் தாக்குதல் உலகை மூன்று அணியாகப் பிரியவைத்துள்ளது.அமெரிக்காவின் செயலைப் பாராட்டும் நாடுகள், நடுநிலைமை வகிக்கும் நாடுகள், ஈரானுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள நாடுகள்.

இதில் ரஷ்யா ஈரானுக்கு ஆதரவாக தமது கருத்தைப் பதிவு செய்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், சுலைமானியை கொன்றது முரட்டுத் துணிச்சலான காரியம். இதனால், அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சுலைமானி தனது நாட்டின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர். அவரது மறைவுக்காக ஈரான் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என கூறப்பட்டுள்ளதன் ஊடாக ரஷ்யா ஈரானுக்கு ஆதரவான நாடு என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் நடுநிலைமை வகித்துள்ளது. இத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், மிகுந்த அபாயகரமான உலகத்தில் நாம் உள்ளோம். உலகின் அனைத்து பகுதியிலும் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் அல்லது குறைந்தபட்சம் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

பிரான்ஸ் எந்த நாட்டுக்கு சார்பாக இருக்காது. அனைவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஈரான் - அமெரிக்கா மோதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்கா தலைவர்களின் வார்த்தை மோதலால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் இந்த விடயத்தில் மிகவும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா தனது படையை மீண்டும் பயன்படுத்தி துஷ்பிரயோகத்தில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள சீனா, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர், சமீபத்திய நாட்களில் அமெரிக்காவின் ஆபத்தான இராணுவ நடவடிக்கை சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளுக்கு எதிரானது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா தனது சக்தியை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் மேலும் நிலைமை மோசமடைவதைத் தவிர்ப்பதற்கு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், ஜேர்மனி சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கல், பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர்கள், அணுசக்தி ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தையும் ஈரான் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஈரான் - அமெரிக்கா இடையே காணப்படும் பதட்டநிலை தொடர்பாக நேட்டோ பிரிவு விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து, நேட்டோ தூதர்கள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் நகரில் தலைமையகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

ஈராக் பாதுகாப்பு படையினருக்கு நேட்டோ படையினர்தான் பயிற்சி அளித்து வருகின்றனர். நேட்டோ படைகள் ஈராக்கை விட்டு வெளியேறினால், பயிற்சி தொடர்வது சந்தேகம். உள்நாட்டில் உள்ள போராளிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைவர். இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பருடன், நேட்டோ செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க்க தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஃபிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

எல்லோரும் போரை நிறுத்துவதற்கு வழி தேடிக்கொண்டிருக்கையில் அமெரிக்க அதிபரும் - ஈரான் ஆட்சியாளர்களும் போருக்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். போருக்கான வழி திறந்தால்,  உலகின் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

-விவேகன்-

நன்றி: ஈழமுரசு

111