ஒரே கடிதத்தை ஒரே நபருக்கு 17 தடவைகள் அனுப்பிய கூட்டமைப்பு வேட்பாளர் ஆனோல்ட்

வெள்ளி ஜூலை 10, 2020

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் இம்மானுவேல் ஆனோல்ட் தமக்கு வாக்களிக்குமாறு கோரும் ஒரே கடிதத்தை ஒரே நபருக்கு 17 தடவைகள் அனுப்பிய விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

ar

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரான ஆனோல்ட் வலிகாமம் கல்வி வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் கல்வி அதிகாரி ஒருவருக்கே இவ்வாறு ஒரே கடிதத்தை 17 தடவைகள் அனுப்பிவைத்துள்ளார். 

இம்மானுவேல் ஆனோல்ட் கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டனர். 

தமது அந்த உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைய ஒரு வருடமே இருந்த நிலையில், யாழ். மாநகர சபைக்கு நடைபெற்ற தேர்தலில் அதே தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்டு மாநகர முதல்வராக பதவி வகித்தவர். 

தொடர்ந்து முதல்வர் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே தற்போது அதே தமிழரசுக் கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 

எம்.ஏ.சுமந்திரனின் தீவிர விசுவாசியான இவர் சுமந்திரனைப் போன்றே தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருபவர். யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு நிகழ்வில் கலந்துகொண்ட எம்.ஏ.சுமந்திரன் முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட ஆனோட்டை கட்டித் தழுவியிருந்தார். 

arn

கடந்த 2018 ஆம் ஆண்டு தியாகி திலீபனின் நினைவேந்தல் ஆரம்ப தினத்தன்று நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு சமீபமாக சிங்கள தேசத்து காப்புறுதி நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு அதிக சத்தத்துடன் நிகழ்வை நடத்த அனுமதி வழங்கி மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவுடன் தமது குடும்பத்தோடு கொழும்பிற்கு சென்று ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் பங்கேற்றவர். 

ar

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இவர் தேர்தலுக்கு அதிகளவு பணத்தை செலவிட்டு வருகின்றார் என மக்களால் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பணம் எங்கிருந்து கிடைத்தது என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையிலேயே ஒரு கல்வி அதிகாரிக்கு தமது ஒரே தேர்தல் பிரசுரத்தை 17 தடவைகள் அனுப்பிவைத்த விடயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. 

குறித்த கடிதத்தை தமது முகப்புத்தகத்தில் பதிவேற்றிய அந்த கல்வி அதிகாரி அது தொடர்பாக கருத்து ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவு வருமாறு, 

அன்புள்ள அண்ணன்!

தங்களிடமிருந்து எனக்கு தனிப்பட்ட முகவரியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட 17 கடிதங்களில் ஒன்றைத்தவிர ஏனையவற்றை உடைத்துக்கூட பார்க்க முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன்.

சுமார் 255 ரூபாக்கள் (17×15) செலவிடப்பட்டு ஒரே பிரசுரத்தை ஒரே ஆளுக்கு 17 தடவைகள் அனுப்பி வைக்கும் தங்களது வினைத்திறன் கண்டு கண்ணு வியர்ப்பதுடன் நாளை சிலவேளை நீங்களும் ஒரு மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்டால் மக்கள் பணத்துக்கும் இதேகதி நேரலாம்?

மேலும் - உங்களுக்கோ உங்கள் கட்சிக்கோ இம்முறை நான் வாக்களிக்கும் எண்ணம் அறவே இல்லாத காரணத்தினால், பணியகத்தின் தேவையற்ற காகிதாதிகளை ஒன்றுசேர்க்கும் கூடையொன்றினுள் இவற்றை பத்திரப்படுத்தியுள்ளமையையும் அன்புரிமையுடன் அறியத்தருகின்றேன்!

ஆண்டவர் உங்களோடு இருப்பதாகுக! 
நன்றி