ஒரு மாத காலத்துக்கு போக்குவரத்துத் தற்காலிகத் தடை!!

வெள்ளி மார்ச் 05, 2021

யாழ்ப்பாணம் கோயில் வீதியில்,நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி வீதியின் போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக யாழ். மாநகர முதல்வர்,  வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக வரும் ஏழாம் திகதி,நாளை மறுதினம் தொடக்கம் ஒரு மாத காலத்துக்கு இவ்வாறு போக்குவரத்துத் தற்காலிகத் தடை நடைமுறையில் இருக்கும் என முதல்வர் இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோயில் வீதியுடாகச் செல்லும் சிறிய வாகனங்கள் செட்டித்தெரு வீதி– செட்டித்தெரு ஒழுங்கை (சின்னமயா மிஷன் வீதி) ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் செட்டித்தெரு ஒழுங்கை–செட்டித்தெரு ஊடாகவும் பயணிக்க முடியும்.

இதேவேளை, கனரக வாகனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.