ஒரு பை வேணும் !

வியாழன் மே 23, 2019

ஐயா பை ஒன்று தாங்கோ
படு கறுப்பும் வேண்டாம்
பஞ்சவர்ணத்திலும் வேண்டாம்
பின்னுக்கு கொழுவுறதும் வேண்டாம்

பெரிதாயும் வேண்டாம்
ஆகச் சிறிதாயும் வேண்டாம்
ஆங்கிலம் அரபு 
எழுத்துப்போட்டதும் வேண்டாம்
இழுத்துப் பூட்டுறதும் வேண்டாம்

ஆக ஓவெண்டும் வேண்டாம்
அப்பட்டமாய் உள்ளே எல்லாம்
அம்பலத்தில் தெரியிற மாதிரி
புட்டோ இடியப்பமோ
போண்டாவோ இட்டலியோ
கட்டிய பார்சலும்
தட்டிப்பார்க்காலே 
தரணிக்கே தெரியும்படியாய்

ஒரு தட்டி மறைப்பு இல்லாமல்
குஞ்சம் கொடிகள் இல்லாமல்
குறிகள் குற்றுக்கள் 
பறவைகள் மிருகங்கள் இல்லாமல்
வெறுமனே ஒரு பை

திறந்து பார்க்காமல்
கொடிகாமத்திலிருந்து பார்த்தால்
கைதடி சந்திக் கைப்பையில்
அடியில் இருக்கின்ற
அரை இஞ்சி ஊசியும்
தெளிவுறக் காண்பதுவாய்
ஐயா ஒரு பை வேணும்

இல்லையெனில்
தையல் கூலி ஒரு
ஐந்து பத்து இலட்சம்
ஆனாலும் பரவாயில்லை
உள்ளே இருப்பதை
உலகமே பார்க்கும் படியாய்
மெய்யாய் ஒரு பை வேணும்
இப்போதைக்கு இதுபோதும்

இனியும் நாளை ஏதுமென்றால்
எனக்கும் என் மனையாளுக்கும்
பைபோல 
ஒரு கவுணும் காற்சட்டையும்
தைத்து உதவவேணும்
இனியாரும் குண்டை 
கொண்டைக்குள் காவி வந்தால்
மறுநாள் மக்கள் அனைவருக்கும்
மண்டை மட்டும்தான் இருக்கும்
மசிர் இருக்காது
இண்டைய நாட்டு நிலைமையில்
இப்படித்தான் யோசிக்கவேணும்

  பொன் காந்தன்.