ஒரு விந்தையான கண்டுபிடிப்பு!!

ஞாயிறு சனவரி 03, 2021

உடலுக்கு வயதாகும் வேகத்தை மட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில், ஒரு விந்தையான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த, 50 ஆண்டுகளாக, உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்குத் தரப்படும் ஒரு மாத்திரையில், 'மெடோலாசோன்' என்ற வேதிப்பொருள் உள்ளது.

இதற்கு, மனித செல்களின் சேதாரமடையும் தன்மையை மட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக, ஜப்பானிலுள்ள ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மெடோலாசோனை, ஆய்வகத்தில் சில வகை புழுக்களுக்கு கொடுத்த போது,அவற்றின் செல்கள் சேதாரமடையும் வேகம் வெகுவாக குறைந்தது.

அதாவது அந்த புழுக்கள் மூப்படையும் வேகம் குறைந்து,இளமை நீடிப்பது தெரியவந்தது.

இதே போன்ற ஒரு மாற்றத்தை, மனிதர்களின் உடலிலும் கொண்டுவர முடியும் என, ஒசாகா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வயதாவது ஒரு நோய் அல்ல என்றாலும், வேகமாக மூப்பு எய்தும் வேகத்தை குறைப்பதன் மூலம், மூப்பினால் வரும் பிற உடல்நலக் குறைகளை தவிர்க்க முடியும்.

மேலும், இளமைத் தன்மையை சற்று நீட்டிக்கவும் முடியும் என்பது ஒரு போனஸ்தானே?