ஒருமித்த நாட்டுக்குள் வாழ சஜித்திற்கு வாக்களிக்க வேண்டுமாம் - சம்பந்தனின் அறிவிப்பு இது

வெள்ளி நவம்பர் 08, 2019

ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என சஜித் பிரேமதாச உறுதியளித்தார் எனவும் அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவருக்கு ஆதரவளிக்கின்றது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்த வழிவகுக்கும். ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு கிடைக்கும். 

ஆதலால் அவரை வெற்றிபெறச் செய்ய அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மாறாக சுயேட்சை சின்னங்களில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது. – என்றார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எனக் கூறி தமிழ் தங்களிடம் வாக்குப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான போலி அரசியல் செய்து தங்களை ஏமாற்றுகின்றது என தமிழ் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மண்டியிடும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.