ஒஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் தமிழ் சிறுமி பற்றிய குறும்படம்!

திங்கள் மே 13, 2019

2020-ம் ஆண்டுக்கானஒஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் கமலி என்ற சிறுமியின் குறும்படம் இடம்பெற்றுள்ளது.

மகாபலிபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கமலி மூர்த்தி. ஸ்கேட்டிங்கில் அசாத்திய திறமை கொண்டவர். கமலி கவுன் அணிந்து ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியபோது எடுத்த புகைப்படம் சர்வதேச அளவில் பிரபல ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் கண்ணில் பட்டது. காலணிகள் கூட இல்லாமல் ஒரு சிறுமி அசாத்தியமாக ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியதை பார்த்து வியந்த டோனி அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர கமலி உலக அளவில் பிரபலமானார்.

இதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த ‌ஷஷா ரெயின்போ என்கிற இயக்குநர் தமிழகத்திற்கு வந்து கமலியை பற்றி கமலி என்ற பெயரிலேயே 24 நிமிட குறும்படத்தை இயக்கினார்.

 

அந்த குறும்படம் கடந்த மாதம் நடந்த அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை பெற்றது. 6 வாரங்களாக படமாக்கப்பட்ட அந்த குறும்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றது.

கமலி, அவரின் தாய் சுகந்தி மற்றும் பாட்டியை பற்றிய அந்த குறும்படம் 2020-ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கமலியின் தாய் சுகந்தி இதுபற்றி கூறும்போது ‘என் மகளுக்கு பின் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது’ என்றார்.