ஓட்டை உண்டியல்

சனி ஜூன் 20, 2020

எட்டி நின்று பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிற
தந்தையின் முகத்தை
எப்படி ஏந்திக் கொள்ளுவது?

இருமிக் கொண்டு போனவரை
இறந்து போய் விட்டதாகச் சொல்கிற
வைத்தியக் கடவுள்களை
எந்தக் கண்ணீரால் கை கூப்புவது?

இன்னமும் சிறகு முளைக்காத
மூன்று பெண் குஞ்சுகளின் காலடியிலும்
வெடித்துப் பிளக்கிறது உலகம்.

வேர்கள் சாயும் தந்தைக் கால்களை
நிமிர்த்திப் பிடிக்க முடியாக் கொடுவிதியை
எந்த இயலாமையால் நொந்தழுவது?

ஒரேயொரு இறுதி முத்தத்துக்கேனும்
வழிவிடச் சொல்லிக் கெஞ்சுகிற
அப்பனின் புறாக் குஞ்சுகளை
திறக்க மறுக்கும் கண்ணாடிக் கதவுகள்
துடிதுடிக்க மிதிக்கின்றன.

நடுக்குளத்துப் பட்ட மரமாய்
கண்ணீரில் ஊறிக் கிடக்கிறது
கிண்கிணிகள் குதித்த தந்தை மார்பு.

கேவி அழத் திராணியற்று
மயங்கிச் சரிகிறது.
பிடியிழந்த ஒற்றைப் பட்சி.

வெறும் வானத்தில் வெட்டித் தெறிக்கிற
மின்னல் பூவில்
இடிந்து விழுகிறது வாழ்வு.

அப்பாவில்லாத வாழ்க்கையின் மிச்சமென்பது
நிரப்பி முடிக்க முடியாத
ஒரு ஓட்டை உண்டியல்.

தீபிகா
18.04.2020