ஒவ்வாமையை உருவாக்கும் உணவுப்பொருட்கள்?

திங்கள் ஏப்ரல் 06, 2020

சிலவகை உணவுகளில் இருக்கும் புரோட்டீன் கட்டமைப்புகளை, ‘உடலுக்கு தீங்கு செய்பவை’ என்று உடலே தவறாக உணர்ந்து, அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவிடுவதே ‘புட் அலர்ஜி’ ஆகிறது.

‘அலர்ஜி’ எனப்படும் ஒவ்வாமை, தூசு, புகை, மாசு மூலம் உருவாகும். சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டினால் தோன்றும் இத்தகைய அலர்ஜியால், தும்மல், இருமல், மூச்சிறைப்பு போன்றவை உருவாகும். உடலுக்கு பொருந்தாத உணவுகளாலும் ஒவ்வாமை ஏற்படும். அதை ‘புட் அலர்ஜி’ என்று கூறுகிறோம். அப்போது சருமத்தில் பல்வேறு விதமான மாற்றங்கள் உருவாகும். வயிற்றில் விவரிக்க முடியாத அவஸ்தைகள் தோன்றும். ஆஸ்துமா போன்ற சுவாச தொடர்புடைய நோய்களையும் ‘புட் அலர்ஜி’ உருவாக்கும்.

சிலவகை உணவுகளில் இருக்கும் புரோட்டீன் கட்டமைப்புகளை, ‘உடலுக்கு தீங்கு செய்பவை’ என்று உடலே தவறாக உணர்ந்து, அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவிடுவதே ‘புட் அலர்ஜி’ ஆகிறது. உணவுக்கு நிறம், மணம், ருசி போன்றவை கிடைக்க சேர்க்கப்படும் ரசாயன பொருட்களும் அலர்ஜிக்கு காரணமாக இருக்கின்றன. புட் அலர்ஜி இரண்டு விதமாக வெளிப்படும். ஒன்று: உணவு உண்ட உடன் எதிர் விளைவுகளை உருவாக்குவது. இரண்டு: அலர்ஜியின் அறிகுறிகளை மெல்ல மெல்ல வெளிப்படுத்துவது. இந்த இருவகை பாதிப்புகளும் யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

அலர்ஜியை உருவாக்கும் உணவுப்பொருட்கள்?

வேர்க்கடலை, பால், முட்டை, கோதுமை, சோயாபயறு போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை. மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, நண்டு, இறால் போன்றவைகளும் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். பசுவின் பாலில் இருக்கும் ‘ஆல்பா எஸ்-1 கேஸீன்’, ‘லாக்டோ க்ளோபுலின்’ போன்றவை அலர்ஜிக்கு காரணமாக அமைகின்றன. ஆனால் மேற்கண்ட இரண்டு பொருட்களும் ஆட்டு பாலில் மிக குறைந்த அளவே இருப்பதால், அவற்றால் அலர்ஜிக்கான வாய்ப்பு குறைவு. சிறிய வெங்காயம், பூண்டு, முட்டைகோஸ், காளான், பச்சை பட்டாணி, பீன்ஸ் போன்றவைகளும் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும்.

உணவுகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் செயற்கை நிறமிகளும் அலர்ஜிக்கு காரணமாகின்றன. சிவப்பு நிறத்திற்காக சேர்க்கப்படும் எரித்ரோசின், கார்மோய்சின், மஞ்சள் நிறத்திற்காக சேர்க்கப்படும் டார்டாசின், சன்செட் எல்லோ, பச்சை நிறத்திற்காக சேர்க்கப்படும் பாஸ்ட்கிரீன், நீலநிறத்திற்காக சேர்க்கப்படும் பிரில்லியண்ட் ப்ளூ போன்றவை அனுமதிக்கப்பட்டவைகளாக இருந்தாலும் இவைகளாலும் அலர்ஜி உருவாகக்கூடும். சீன உணவுகளில் சேர்க்கப்படும் அஜினோமோட்டோவும் அலர்ஜியை உருவாக்கும். ஊறுகாய் மற்றும் பாக்கெட் உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும்.

‘புட் அலர்ஜி’ இருப்பவர்கள் காய்கறிகளை நன்றாக வேகவைத்து சாப்பிடவேண்டும். ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற ‘சிட்ரஸ்’ பழங்களை தவிர்க்கவேண்டும். இறால், நண்டு போன்ற தோடு உள்ள கடல் உணவுகளை தவிர்ப்பது அவசியம். குளிர்பானங்கள், செயற்கை நிறம் கலந்த இனிப்பு பலகாரங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவைகளையும் தவிர்க்கவேண்டும்.