பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-மோகன்லால்

திங்கள் பெப்ரவரி 04, 2019

2019 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர்கள் அக்‌ஷய்குமார், மோகன்லால் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் உள்பட 70 பிரபலங்களை களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசுக்கு எதிராக போராடிவரும் பா.ஜனதா தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுக்கிறது. இதில் ஒரு பகுதியாக மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை களமிறக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியது.

இந்நிலையில் கேரள பா.ஜனதா தலைவர் ராஜகோபால், என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், 2019 தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட பா.ஜனதா மோகன்லாலிடம் பேசியுள்ளது என்று குறிப்பிட்டார். இதற்கு அவருடைய ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மோகன்லால் ரசிகர் மன்றத் தலைவர் விமல்குமார் பேசுகையில் “மோகன்லால் போன்றவர்களை அரசியலுக்கு கொண்டு வருவதில் பா.ஜனதாவிற்கு ஏதாவது பின்னணி திட்டம் இருக்கலாம்.

அவரை அரசியலுக்கு இழுக்க விரும்பும் பா.ஜனதா தலைவர்கள், முதலில் தாங்கள் போட்டியிட உள்ளோமா என்பதை  உறுதி செய்ய வேண்டும். மோகன்லால் தேர்தலில் போட்டியிட்டால் அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம்,” என்றார்.

இந்நிலையில் ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், பா.ஜனதா சார்பில் 2019 தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மோகன்லால் அறிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் மோகன்லால் பேசுகையில், “ஒரு நடிகனாக என்னுடைய பணியை சிறப்பாக செய்கிறேன், எனக்கு என்னுடைய துறை அதிகமான சுதந்திரம் கொடுக்கிறது. அரசியல்வாதியானால் நம்மை நம்பி அதிகமானோர் இருப்பார்கள். எனக்கு அந்த பாடம் பற்றியும் தெரியாது,” என கூறியுள்ளார்.