பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்தியது தொடர்பாக ஒருவர் கைது!!!

ஞாயிறு அக்டோபர் 11, 2020

பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் இருக்கும்  சிந்துமாகாணத்தின் கன்வார் பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.  பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களாக உள்ள இந்துக்களின் கோவில் சேதப்படுத்தப்பட்டது அந்நாட்டில் வசிக்கும் இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவில் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக உடனடியாக வழக்குபதிவு செய்த பாகிஸ்தான் காவல் துறை,  ஒருவரை  கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தெரிவதாக கூறிய பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் சுமார்  75 லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர். இந்துக்களின் மத தலங்கள் சேதப்படுத்தும் சம்பவங்கள் சிந்து மாகாணத்தில் அடிக்கடி நடப்பது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.