பாப்பரசரின் வளைகுடா விஜயம்! முக்கியமான ஒரு சமிக்ஞை

திங்கள் பெப்ரவரி 04, 2019

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இவ்வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மேற்கொண்டிருக்கும் விஜயம் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்படுகிறது.அபுதாபியில் விளையாட்டரங்கொன்றில் அவர் நடத்தவிருக்கும் திருப்பலிப்பூசையில் சுமார் 120,000 மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றுரீதியாக கத்தோலிக்க நாடாக விளங்கும் அயர்லாந்துக்கு கடந்தவருடம் பாப்பரசர் விஜயம் செய்தபோது திருப்பிலிப்பூசையில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையுடன் இது ஒப்பிடப்படுகிறது.இஸ்லாத்தின் பினப்பிடமான அரேபிய தீவகற்பத்துக்கு பாப்பரசர் ஒருவர் மேற்கொண்டிருக்கும் முதலாவது விஜயம் மத்திய கிழக்கின் மதச்சூழ்நநிலையின் சிக்கல்களையும் அதையும் விட பரந்தளவில் கிறிஸ்தவ - முஸ்லிம் உறவுகளில் உள்ள பிரச்சினைகளையும் வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது.

 மத்திய கிழக்கில் இன்று சுமார் 20 இலட்சம் கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடும்.16 வருடகாலப் போர் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புக்கு பின்னரான அட்டூழியம் ஆகியவற்றுக்கு மத்தியிலும், கிறிஸ்தவத்தின் தொட்டிலான மண்ணில் பலர் தொடர்ந்தும் வாழ்கிறார்கள். அவர்கள்  பிராந்தியத்தை விட்டு வெளியேறுவதென்பது அவ்வளவு சுலபமானதல்ல என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.அட்டூழியம் காரணமாக ஈராக்கிய கிறிஸ்தவர்கள் பெருமளவுக்கு தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிவந்தது. 

அதே போன்றே சிரியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் கொஞ்சப்பேருக்கும் நடந்தது. சிரிய கிறிஸ்தவர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கையினர் அசாத்தின் சர்வாதிகாரத்தின் பக்கம் நின்றனர். ஆனால் கருத்தியல் ரீதியாக கிறிஸ்துவத்தைத் தழுவிநிற்கும் ஐரோப்பாவை வந்தடையாமல் அவர்கள் அகதிமுகாம்களிலேயே தஞ்சமடைந்தனர்.பிராந்தியத்தின் வடக்கிலும் மேற்கிலும் நீண்டகாலமாக வாழ்கின்ற கிறிஸதவ சனத்தொகை பயங்கரமான நெருக்குதலுக்குள் இருந்துவருகின்ற அதேவேளை, தெற்கிலும் மேற்கிலும் சவூதி அரேபியா உட்பட வளைகுடா அரசுகள் இலட்சக்கண்கான தொழிலாளர்களையும் வீட்டுப்பணியாளர்களையும் தெற்காசியாவில் இருந்தும் பிலிப்பைன்ஸில் இருந்தும் இறக்குமதி செய்திருக்கின்றன.

அவர்களில் பலர் கிறிஸ்தவர்கள்.ஒருபோதும்  மதமாற்றத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அவர்கள் தங்களது மதத்தைப் பின்பற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.சவூதி அரேபியாவைத் தவிர வளைகுடா அரசுகள் சகலவற்றிலும் சட்டரீதியான கிறிஸ்தவ தேவாலயங்கள் இருக்கின்றன.பாகிஸ்தானில் காணக்கூடியதாக இருக்கின்ற அளவுக்கு கிறிஸ்தவர்கள் இந்த வளைகுடாநாடுகளில் சிலவற்றில் கொடுமைப்படுத்தப்படவில்லை என்று வாதிடமுடியும்.

பாகிஸதானில் மதநிந்தனைசெய்ததற்காக மரணதண்டனைக் கைதியாக 8 வருடங்களைச் சிறையில் கழித்த ஆசியா பீபியை நீதிமன்றம் விடுலை செய்தபோதிலும் இந்தவாரம் கனடாவுக்கு கூட்டிச்செல்லப்படும்வரை பாதுகாப்பு தடுப்புக்காவலில் வைக்கவேண்டியிருந்தது.

பரந்தளவில் நிலைவரத்தை நோக்கினால், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவுகள் நூற்றாண்டில் பாரதூரமான விளைவுகளைக்கொண்டுவரக்கூடிய மிகப்பெரிய நெருக்கடிகளில் ஒன்றாக இருக்கலாம். ஒரு கடவுள் கோட்பாடு என்பது வேறுபாடின்றி எங்கும் சீராக கெட்டியானதாகவும் இல்லை.

 இந்த பதற்றம் நிறைந்த இந்த சூழ்நிலையில் பாப்பரசர் பிரான்சிஸ் ஒரு தனித்துவமான நிலையில் இருக்கிறார்.ஏனென்றால் அவர் உலகில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பெரிய மதக்குழுவுக்கு தலைமை தாங்குகிறார் ; உலகில் கத்தோலிக்கர்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.ஆனால், பாப்பரசரைப் போன்று பெருமளவு  விசுவாசிகளின் மேலாக அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடிய முஸ்லிம் தலைவர் கிடையாது.

இது ஒன்றும் பரிசுத்தமான ஆசீர்வாதமாக இல்லை. இந்தளவு பெரிய அதிகாரம் அதை வைத்திருப்பவருக்கும் அதை அடையவிரும்புபவர்களுக்கும்  தொடர்ச்சியான மருட்சியைக் கொடுப்பதாக அமையும்.பாப்பரசர் பிரான்சிஸுக்கு சளைக்காத எதிரிகள் இருக்கிறார்கள். இஸ்லாத்தை சாசுவதமான எதிரியாக நோக்குகின்ற கிறிஸ்தவர்கள் ஆபிரிக்காவில், அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது  ஜிஹாதி எதிரிகளின் மறுபக்கப்  பிம்பமாக இருக்கிறார்கள்.ஐரோப்பிய நாகரிகத்தை இஸ்லாத்துக்கான அதன் எதிர்ப்பின் அடிப்படையில் வரைவிலக்கணம் செய்கின்ற வலதுசாரி கிறிஸ்தவபோக்கு ஒன்றும் இருக்கிறது.

வத்திக்கான் தேச எல்லைகளைக்கடந்த ஒரு நிறுவனமாக இருக்கின்ற காரணத்தால்,உலகில் இருக்கக்கூடிய மிகவும் விரும்பத்தகாத அரசாங்கங்கள் சிலவற்றுடன் அது அலுவல்களைச்செய்யவேண்டியுமிருக்கிறது.

சீனாவில் ஆயர்களை நியமிப்பதில் அந்நாட்டு அரசாங்கத்தின் விருப்பத்துக்கு இசைவாக விட்டுக்கொடுப்பைச் செய்த காரணத்தால் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களினால் அட்டூழியத்துக்குள்ளாக்கப்பட்ட சீனத் திருச்சபைக்கு பாப்பரசர் பிரான்சிஸ் துரோகமிழைத்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. 

யேமன் நாட்டில் இடம்பெற்றுவருகின்ற போரில் சவூதி தலைமையிலான கூட்டணியின் உற்சாகமான ஒரு பங்காளியாக ஐக்கிய அரபு இராச்சியம் இருந்து வருகிறது.அந்தப் போர் யேமன் மக்களில் அரைவாசிப்பேரை பட்டினிக்கொடுமைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.வத்திக்கானில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக கருத்துத் தெரிவித்த பாப்பரசர்  யேமனின் மனிதாபிமான நெருக்கடிக்கு முடிவுகட்டவேண்டும் என்று அழைப்புவிடுத்திருந்தார்.

 ஆனால், வளைகுடாவில் தனனை வரவேற்கும் அரசுகளுடன் அந்தப்பிரச்சினையை அவர் கிளப்புவார் என்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. என்றாலும் கூட முஸ்லிம் நாடொன்றில் கிறிஸ்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு அமைதியாக வழிபடக்கூடியதாக இருப்பதென்பது முழு உலகிற்குமே ஒரு முக்கியமான -- வரவேற்கத்தக்க சமிக்ஞையை அனுப்பும்.

( கார்டியன், ஆசிரிய தலையங்கம், 3 பெப்ரவரி, 2019 )