பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை

வெள்ளி நவம்பர் 20, 2020

பாரிஸ் நகர் அருகே குசன்வீல் (Goussainville) பகுதியில் வீடொன்றில் இருந்து 56 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவரது சடலத்தை காவல் துறையினர்  மீட்டிருக்கின்றனர்.

புதன்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்து அந்த வீட்டுக்குச் சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர்.

அவர் அந்த வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த 52,மற்றும் 42வயதுகளை யுடைய வேறு இரண்டு ஈழப் பிரஜைகளை குசன்வீல்  காவல் துறையினர்  கைது செய்திருக்கின்றனர்.

தமிழர்களான இவர்கள் இருவரும் கொலைசெய்யப்பட்டவரது வீட்டில் வாடகை இன்றி வசித்துவந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சமயம் இருவரும் மது போதையில் இருந்தனர் என்று காவல் துறை  தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

கொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபர் ஒருவரும் பின்னர் கைதாகியுள்ளார்.  அவர்களது விவரங்கள் வெளியாகவில்லை.

கொலை தொடர்பான விசாரணைகளை குசன்வீல்  காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

படம் : குசன்வீலில் படுகொலை இடம்பெற்ற வீடு அமைந்திருக்கும் rue Raymond-Lapchin தெருவின் தோற்றம்.