பாரதூரமான கோரிக்கைகளையே சம்பந்தன் முன்வைத்துள்ளார்!

திங்கள் அக்டோபர் 21, 2019

விடுதலை புலிகள்   அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கோரிக்கைகளை  காட்டிலும் பாரதூரமான கோரிக்கைகளையே தமிழ் தேசிய கட்சிகள் முன்வைத்துள்ளன. நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்களுக்கு  மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இன்றி  மறுப்பு தெரிவித்துள்ளோம். தமிழ் கட்சிகளின் கோரிக்கை தொடர்பில்  ஆளும் தரப்பின்  ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாஸவின் நிலைப்பாடு என்ன நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவும்  என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித் அபேகுணவர்தன  தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 மேலும், தனி ஈழம்  வேண்டும் என்ற கோரிக்கையினை முன்னிலைப்படுத்தியே விடுதலை புலிகள் அமைப்பின் பிரபாகரன் ஆயுதமேந்தி 30 வருட காலம் போராடினார்.  இறுதியில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு  விடுதலை புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டது. பிரபாகரன் முன்வைத்த கோரிக்கைகளை  காட்டிலும்  பாரதூரமான கோரிக்கைகளையே  தற்போது  தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட  தமிழ் தேசிய கட்சிகள் முன்வைத்துள்ளன.

நாட்டை பிளவுப்படுத்தும்  நிபந்தனைகளுக்கு எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இன்றி  பொதுஜன பெரமுன  மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும். நாட்டுக்கள் தீவிரவாத செயற்பாடுகள்  மீண்டும் தலைதூக்குவதற்கு எத்தரப்பினரும் விருப்பம் கொள்வது கிடையாது.

கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசிய  கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கை தொடர்பில் புதிய  ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.