பாடி முடியாது உங்கள் பரணி!

புதன் நவம்பர் 27, 2019

விரிவானும்...பழுகதிரும்….

காய்நிலவும்...உருமுகிலும்...

காற்றும்...கடலும்

நெடுபனையும், புல் பூண்டும்...

காடும், களமேடும், கமச் சேறும்,

பேராறும், வளைதெருவும்,ஊரும்,உறவும்,

கோயிலும்,குளமும்,

குருவி பாடும் நெல்வயலும்,

அருவியோடும் வாய்க்காலும்,அறுகம்புல்லும்,

மதவடியும்,பாசி பூத்த கிணற்றடியும்,

எல்லாம்….எல்லாம்….

எங்கெங்கும் ஞாபகமாய் பூப்பார்

நம் பிள்ளைகள்.

கழுத்து சரித்து தெத்திப்பல் தெரிய சிரிக்கும்

குஞ்சுகளின் முகங்களோடு பூக்களாடும்.

கரையும் முற்றத்துக் காகங்களின் குரலில்

பிள்ளை மொழி காதேறும்.

வெளியிலிருக்கும் யாருக்கும் கிட்டாத

ஆன்ம தரிசனத்தில் தேசம் சிலிர்க்கும்.

இளம் முகங்களின் கைசேராக் கனவுகள்

நெஞ்சைக் கீறும்.

துயிலுமில்ல வெளிகளில் காற்று மூசும்.

எருக்கலைகள் அள்ளிப் பூத்து ஆடும்.

எல்லா உதடுகளிலும் சந்தனப் பாடல்கள்

மௌனமாய் உருகி வழியும்.

விழலுக்கிறைத்த நீரில்லை

நம் அருமந்த பிள்ளை உயிர்கள்.

மீசையரும்பிய இளந்தாரிகளாய்

நீங்கள் போய் முடிந்தது

ஒரு காலத்தின் பழைய கதையில்லை.

என்றும் முடியாத

எங்கள் தொடர்கதை நீங்கள்.

உங்களாலானது தான் எங்கள் வாழ்வு.

உங்களால் ஆனது தான் எங்களிருப்பு.

யார் யாரோ பெத்த தவமணிகள்

சரிந்து விழச் சரிந்து விழ

புல்லும் நிமிர்ந்தெழுந்த நிலம் எமது.

பெற்றால் தான் பிள்ளையா நீங்கள்?

குந்தியிருந்து மூக்கால் அழுது

நெஞ்சினிலே தேசபக்தி குத்தி,

நடித்து முடித்து நடையைக் கட்ட

நீங்களொன்றும்

வெற்றுக் கற்பனைகளுமில்லை.

நாங்களொன்றும்

நடிக சிகாமணிகளுமில்லை.

நாளும் பொழுதும் ஞாபகங்களில் சுடரெரியும்

உங்கள் தீராப் பிரிவைக் கொட்டித் தீர்க்க வருடமொரு முறை கிடைக்கும் சந்தர்ப்பமிது.

ஆறாக் கோபத்தையும், ஆழச் சோகத்தையும்

அள்ளிச் சொரிந்தழுது,

நெஞ்சில் சுடர் ஏந்தும் நாளிது.

எழுதி அடங்காது உங்கள் வீரம்.

பாடி முடியாது உங்கள் பரணி.

பேசித் தீராது உங்கள் ஞாபகம்.

அழுது ஆறாது உம் பிரிவு.

எத்தனை களங்கள்?எத்தனை காயங்கள்?

எத்தனை முட்கள்? எத்தனை நெருப்புக்கள்?

எத்தனை குழிகள்? எத்தனை பொறிகள்?

எத்தனை இடிகள்? எத்தனை படிகள்?

எத்தனை ஏணிகள்? எத்தனை பாம்புகள்?

அத்தனையத்தனை அத்தனையும் கடந்து

ஆடிச் சரிந்த வீரக் கொடிகளே!

காலமொரு நாள் கண் மலரும்.

நீதியின் சாளரங்கள் புதிதாய் திறக்கும்.

நம்புவோம். நம்பி நடப்போம்.

நம்பி நம்பித் தோற்றதே நம் வரலாறெனினும்

காத்திருப்போம்.

சத்தியத்தின் கனவுகள்

கைகூடும் திருநாள் வரும்.

---xxx----

தீபிகா

26.11.2019

09.28 இரவு.