பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியிருக்கிறது!

சனி மே 18, 2019

இலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட பலருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை வெளியிட்டிருக்கின்றது.

முப்பது வருட யுத்தம் 2009 மே மாதம் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்கல் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுவூட்டல் என்பவற்றை நடைமுறைப்படுத்துவோம் என்று கடந்த 2015 அக்டோபர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அந்தக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கல் என்பன தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டமையானது சிதைந்திருந்த சமூகத்தை மீளக் கட்டியெழுப்பல் மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றுக்கு மாத்திமன்றி, நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கும் வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தது என்று கூறியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர், எனினும் யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றிலிருந்தும் தவறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.