பாதுகாப்பை மீறி பிரியங்கா காந்தி வீட்டுக்குள் காருடன் நுழைந்த 7 பேர்!

திங்கள் டிசம்பர் 02, 2019

சிறப்பு படை பாதுகாப்பு விலக்கப்பட்ட பின்னர் டெல்லியில் உள்ள பிரியங்கா காந்தி வீட்டுக்குள் காருடன் நுழைந்த 7 பேர் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு படையினர் பாதுகாப்பை கடந்த மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.

தற்போது அவர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,  சிறப்பு படை பாதுகாப்பு விலக்கப்பட்ட பின்னர் டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் கடந்த மாதம்

26-ம் திகதி பாதுகாப்பு படையினரின் காவலையும் மீறி  காருடன் நுழைந்த 7 பேர் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

சிறப்பு படையினர் பாதுகாப்பில் பிரியங்கா (கோப்பு படம்)


வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பிரியங்கா காந்தியை சந்தித்து உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பிரியங்காவும் புன்னகைத்தவாறு அவர்களுடன் இயல்பாக பேசி, புகைப்படம் எடுத்து தந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்காவின் அலுவலக நிர்வாகிகள் அவருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்ற புகாருடன்  மத்திய துணை ராணுவப் படை அதிகாரிகளை தற்போது அணுகியுள்ளதாக தெரிகிறது.