பாதுகாப்பானது! பயம் வேண்டாம்! புதிய அறிவிப்பை வெளியிட்ட வாட்ஸ் அப்!-

ஞாயிறு சனவரி 17, 2021

வருகின்ற மே 15ம் தேதி வரை புதிய கொள்கையை ஆராய்ந்து பயனாளர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கலாம் என, வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்துடன் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள மாட்டோம், உங்கள் தகவலை பாதுகாப்பது எங்கள் முக்கிய பணி, என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டுள்ளது.

ரொம்ப பாதுகாப்பானது… பயம் வேண்டாம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட வாட்ஸ் அப்..!

வாட்ஸ்அப்பில் பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு, வணிக நோக்கில் அந்த தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது, இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு "வாட்ஸ் அப் செயலியை" பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்ததுடன் வாட்ஸ்-அப் பயனாளர்கள் பலர், சிக்னல் மற்றும் டெலிகிராம் உள்பட பிற செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாட்ஸ்-அப் நிறுனம் தங்களது புதிய கொள்கை தொடர்பாக மக்களிடையே தவறான தகவல் பரவுவதாகவும், அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதால், மே 15ம் தேதி வரை புதிய கொள்கையை ஆராய்ந்து பயனாளர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கலாம் என சனிக்கிழமை அறிவித்தது.

தங்களின் புதிய நடவடிக்கை பயனரின் தனிப்பட்ட நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் தனியுரிமையை பாதிக்காது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகள் குறித்து அண்மையில் விளக்கம் அளித்தது.

வாட்ஸ்அப்பில் பயனர்களின் அழைப்புகள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படாது. உங்கள் தொடர்புகளிலிருந்து வரும் அழைப்புகள், செய்திகள் கண்காணிக்கப்படாது. என்றும் வாட்ஸ்அப் திட்டவட்டமாக தெரிவித்தது.

மேலும் உங்களுடைய இருப்பிடம் குறித்த தகவல்கள், உங்கள் தொடர்புகள் உள்ளிட்டவை பேஸ்புக்குடன் பகிரப்படாது. வாட்ஸ்ஆப் குழுக்கள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். உங்கள் தரவுகளை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். குறுஞ்செய்திகளை அனுப்பியவுடன் மறைய வைக்கும் வசதியை பயன்படுத்த முடியும் என்று வாட்ஸ் அப் தெரிவித்தது.

நேற்று வெளியிட்ட பதிவில் எங்களின் சமீபத்தில் கொள்கை குறித்து பல தரப்பு மக்களிடமும் பல்வேறு விதமான குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிகிறோம். புதிய கொள்கையானது பேஸ்புக் உடன் வாட்ஸ் அப் தரவைப் பகிரும் திறனை விரிவாக்காது.உங்களின் தனிப்பட்ட தகவல்களை எங்களால் பார்க்க முடியாது, நீங்கள் கால்கள் மூலம் பேசும் போது எங்களால் அதனை கேட்க முடியாது. உங்களிடம் யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என நாங்கள் பதிவு எதையும் வைப்பதில்லை" என்று வாட்ஸ்அப் கூறியது..

மேற்கண்ட விளக்கம் அளித்த பிறகும் பலரும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தினால் தங்களது தனிப்பட்ட தகவல்கள் வெளியாகும் என்று அச்சம் அடைந்து பிற செயலிகளுக்கு வேகமாக மாறினார்கள்.

இதையடுத்து பொதுமக்களுக்கு அச்சத்தை போக்கி விளக்கம் அளிப்பதற்காக வாட்ஸ் அப் நிறுவனமே முதல்முறையாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளது.