பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்

வியாழன் சனவரி 07, 2021

பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினரை மீறி நுற்றுக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.

அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினர்.

அடுத்த 12 மணி நேரம் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னரும் தொடர்ந்து டிரம்ப் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் @realDonaldTrump பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என  டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.