பச்சோந்தி சாயம்!

வியாழன் செப்டம்பர் 19, 2019

வண்ணப் பூச்சுகள் உலகில் ஒரு பெரிய புரட்சி நிகழக் காத்திருக்கிறது. ஒரு சாயக் கலவையை பூசிவிட்டு, அதன் மீது புற ஊதா கதிர்களை பாய்ச்சினால், அப்படியே நிறம் மாறுகிறது. மாறிய நிறம் அப்படியே இருக்கிறது.

சாயத்தின் மீது மீண்டும் புற ஊதா கதிர்களை பாய்ச்சினால், மீண்டும் நிறம் மாறுகிறது. ஆம், பச்சோந்தியைப் போல நிறம் மாறும் இந்த சாயத்தை, அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கிஉள்ளனர்.

'போட்டோ குரோமெலியான்' என்று பெயரிடப்பட்ட இந்த வித்தியாசமான வண்ணக் கலவையை, மொபைல் கேஸ் மீது, பலவித டிசைன்களை உருவாக்கிக் காட்டி அசத்தியிருக்கின்றனர், விஞ்ஞானிகள்.

புற ஊதா கதிர்களின் குறிப்பிட்ட அலைவரிசைகள் பட்டால் மட்டும், நிறம் மாறும் நிறமிகளை, சாயத்தில் கலந்து இதை அவர்கள் சாதித்துள்ளனர்.போட்டோ குரோமெலியான் தொழில்நுட்பத்தை இன்னும் துல்லியமாக்கினால், காலணிகள், கார்கள், வீடுகள் என்று எல்லா பரப்புகளிலும் இந்த சாயக் கலவையை பூசி, வேண்டிய நிறத்தை நாமே வரவழைக்கவும், அவை சலித்துப்போனால், புறஊதா கதிர்களை பாய்ச்சி வேறு நிறங்கள், டிசைன்களை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

ஆடை சாயங்களாகவும் இவற்றை பயன்படுத்த முடிந்தால், எப்படி இருக்கும் என, கற்பனை செய்து பாருங்கள்.