பசில் வருகையின் அவசரம் என்ன ?

வெள்ளி ஜூலை 16, 2021

 ஆளும் பொதுஜன பெரமுனயின் சிற்பி என வர்ணிக்கப்படும் பசில் ராஜபக்ச அவசர அவசரமாக அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன் நிதி அமைச்சரும் ஆகியுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நிதியமைச்சருக்கான சத்தியப்பிரமாணத்தை ஜனாதிபதி மாளிகையில் எடுத்த பின்பே நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முன்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கான சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தார். 

திடீரென இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிவந்துள்ளன.

இலங்கை அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது மேற்படி திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் இலங்கையின் தேர்தல்களில் பங்கெடுத்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை நீக்கப்பட வேண்டுமென விமல் வீரவன்ஸ உட்பட பல்வேறுபட்ட தீவிர சிங்கள பௌத்த அமைப்புகள் கோரிய போது அத்தகைய மாற்றங்கள் புதிய அரசியல் யாப்பின்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் சமாதானம் அடைந்தனர்.

மேற்படி கோரிக்கை பசில் ராஜபக்சவின் அரசியல் மேல் வருகையை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட நகர்வாகவே பசில் ராஜபக்ச ஆதரவு அணி கருதியிருந்ததுடன், அவர்கள் விமல் வீரவன்ச,உதய கம்மன்பில ஆகியோருடன் முட்டி போதும் நிலையும் உருவாகி இருந்தது. எனவே பொது ஜன பெரமுன முகாமுக்குள் பசில் ஆதரவு அணி, பசிலுக்கு எதிராக அணி என்ற நிலையில் அடிக்கடி முரண்பாடுகள் மேல் வந்து கொண்டே இருந்தன.பசில் ராஜபக்சவை எதிர்ப்பவர்கள் தம்மை இடதுசாரி வட்டத்திற்குள் உருவகப்படுத்தியிருந்தனர். 

பெயருக்கு சமசமாஜ,கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரமுகர்கள் இந்த இடதுசாரி முகாமுக்குள் காணப்பட்டாலும் அந்த இடதுசாரி முகாம் முற்று முழுதாக தென்னிலங்கை பேரினவாத தளத்தை பின்புலமாக கொண்ட பிரிவாகவே செயல்பட்டு வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்க மற்றும் மேற்குலகத்திற்கும் இடையேயான உறவு நிலை எதிர்நிலையின் உச்சத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தினர் 

இலங்கைக்கு எதிரான காய் நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளனர்.அண்மைக் காலத்தில் இத்தகைய நகர்வுகள் மேல் நிலைக்கு வந்துள்ளன. ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்பான மறுபரிசீலனைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கிட்டத்தட்ட ஏகமனதான தீர்மானம் என்ற நிலைக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தனர். மேலும்  1979 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பிரயோகிக்கப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும் தமது விமர்சனங்களை அவர்கள் நேர்த்தியாக முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பஜ்லற் இது தொடர்பாக நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த நிலைமைகள் இலங்கையை சற்று நின்று நிதானிக்க வைத்துள்ளது என்றே கருத இடம் ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான மறுபரிசீலனை நடைபெறுகின்றது என்ற அளவில் தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தியதுடன், 16 தமிழ் அரசியல் கைதிகளை தாம் விடுதலை செய்திருப்பதாகவும் பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்பெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை தொடர்பாக எதுவித நெகிழ்வு போக்கையும் காண்பிக்காமல் இருந்து வந்த இலங்கை தரப்பு தற்போது தமது சுருதியை குறைத்து பவ்வியமாக நடந்து கொள்ளும் நிலைக்கு தயாராகும் நிலை ஏன் ஏற்பட்டது என்பது கேள்வியாக உள்ளது.

ஆனாலும் சீன தேசத்துடனான இலங்கையின் பிணைப்பு மேலும் மேலும் வைரம் பெற்று வருவதாகவே காணப்படுகிறது. இம்முறை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டு நிறைவு நிகழ்வு தொடர்பாக இலங்கை நாணயத்தை  வெளியிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டு நிகழ்வில் சீன அதிபர் அமெரிக்காவை நேரடியாக எச்சரிக்கும் நிலை காணப்பட்டிருந்தது. இது அமெரிக்க -சீன முறுகலின் உச்ச நிலையாகும். இத்தகைய சூழ்நிலையில் இலங்கை சீன நட்பு நாணயம் வெளியிடும் அளவிற்கு உச்ச நிலையில் காணப்படுகிறது.

நாடுகளின் பொருளாதார பின்னடைவுகளை சீர் செய்து கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் உதவிகள் பெறப்பட்டு நாடுகள் தமது நிலைமைகளை மேம்படுத்தி வருவது வழமையான நிலையாகும். சீன தேசத்திற்கு சர்வதேச நாணய நிதியத்துக்குமான உறவுகள் ஆரம்ப காலகட்டங்களில் பரஸ்பரம் இருந்ததை மறுப்பதிற்கில்லை.ஆனால் இதை இலங்கை அரசாங்கம் மட்டும் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என தொடர்ந்தும் அழுத்தி கூறி வருகிறது. இதில் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் முன்னணியில் நிற்கிறார். இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்க முடியாத அளவிற்கு வீழ்ந்து போய் கிடக்கின்றது. 

வருடாந்தம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுக்கான மீள் செலுத்து தொகையாக செலுத்த வேண்டிய நிலையில் நாடு உள்ளது. வருகின்ற நான்கு ஆண்டுகளில் 29 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையின் கடன் பளுவாக அமையுமென பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே அவசரம் அவசரமாக பசில் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தும் நிகழ்வு சில சமயங்களில் இலங்கை ஆட்சியாளர் வேறான ஒரு முகத்துடன் ஆட்சியை தொடர முனைகின்றனர் என்ற கேள்வியை இங்கே கிளப்பியுள்ளது. 

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தை ஓரளவு சமாதானப்படுத்த பசிலின் புதுவரவு இடமளிக்க போகின்றதா. எனவே அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கை மீளாய்வு, சர்வதேச நாணய நிதியத்துடனான  உறவை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் எதிர் காலத்தில் மேல் வரலாம். இந்தியாவுடன் உறவுகள் சீராகலாம், இவை மேம்படவேண்டுமாயின் பசிலின் வரவு அவசியமாகின்றது.

வழமைபோன்று பொதுஜன பெருமுனைக்குள் தாமே நிர்ணய சக்திகள் என இறுமாப்புடன் வலம் வரும் அமைச்சர்களான விமல் வீரவன்ச ,உதய கம்மன்பில , வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அணியினர் 20 வது திருத்தம் மேல் வந்தபோது வாக்கெடுப்பில் பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்தமை வரலாறு. பொது ஜன பெரமுன பொறுத்தவரையில் அது ராஜபக்ச குடும்பத்தின் சொத்தாகும். அங்கே மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச என்ற அடிப்படையில் ஆதிக்கம் கொண்ட குடும்ப அங்கத்தவர்களின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எவராலும் முடியாதது என்பது பசில் ராஜபக்சவின் மீள்வருகை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேநேரம் சகல தளங்களிலும் இன்றைய ஆட்சியாளர்கள் தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வருகின்றனர். அண்மைய வரலாற்றில் தென்னிலங்கையின் உட்பகுதிகளில் பேரினவாதத் தளம் ஆட்டம் கண்டதை காண முடியாமல் இருந்தது. முதல் முறையாக தற்போது தென்னிலங்கை பட்டி தொட்டி எங்கும் அரச விரோத செயற்பாடுகள் மேல் வந்து கொண்டிருக்கின்றன. இன்று இலங்கையின் சமூக மட்டத்தில் பிரச்சனை உச்ச நிலையில் காணப்படுகிறது. மக்கள் வீதி எங்கும் நிலை எடுத்து நிற்கின்றனர். 

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிச கட்சியினர் மீது அரசாங்கம் காட்டும் ஒடுக்குமுறை செயற்பாடுகள் தென்னிலங்கை மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதே நேரம் உழைக்கும் மக்கள் உள்ளிட்ட நகர மக்களின் அரச விரோத போராட்டங்கள் மேல் வரும் நிலையில் ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி காணாமல் போகும் நிலை வெகு தூரத்தில் இல்லை.

நடராஜா ஜனகன்